சுதந்திரமும் இறைமையும் கொண்ட நிலப்பரப்பை வரலாற்று ரீதியாக தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கு பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபைகள் ஒரு அரசியல் தீர்வின் அடிப்படையாக கருதப்பட முடியாது.தமிழர் தாயக பூர்வீக நிலத்தைக் கூறுபோட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, வரலாற்று ரீதியாக பெரும்பான்மையாக இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை தலை கீழாக மாற்றப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், சிங்கள இனவாதிகள் அதன் அடுத்த கட்டமாக தமிழர்களின் அரசியல் பலத்தை முழுமையாக சிதைப்பதற்கு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை பாவிக்க திட்டமிடுகின்றனர்.
ஒரு வருடத்திற்கு முன்னதாகவே கிழக்கு மாகாண சபையினைக் கலைத்து விட்டு அதற்கு புதிய தேர்தலை நடத்துவதற்கு ஆழமான பின்னணி உள்ளது. கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பினை தீவிரப்படுத்துவதற்கும் தன்னைச் சுற்றி இறுகி வரும் ஐ.நா. மனித உரிமைக் கழகத்தின் நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யவும், ஆழமான அரசியல் தீர்வொன்றை வழங்காமல் தவிர்க்கவும் இத்தேர்தல் பயன்படுத்தப்படவுள்ளது.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இயல்பு நிலையை கொண்டு வந்த பின்னர் தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற அடிப்படையில் ஒரு தீர்க்கமான நிரந்தர அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
1977ம் ஆண்டு சிறிலங்கா பாராளுமன்றத்துக்கான தேர்தலை சுதந்திர தமிழீழ தமிழ் அரசுக்கான சர்வசன வாக்கெடுப்பாக கருதி வடகிழக்குப்பகுதியில் தமக்கு வாக்களிக்குமாறு தமிழர் விடுதலைக்கூட்டணியின் கோரிக்கைக்கு அமைய தனியரசிற்கான வாக்கெடுப்பு பெரும்பான்மையாக விழுந்தது ஒரு முன் உதாரணமாகும்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் ஏனைய கட்சிகள் எதுவும் குரல் கொடுக்காத நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஜனநாயக பிரதி நிதித்துவத்தை தக்கவைத்துள்ளபடியால் தமிழ் மக்களின் அபிலாசைகளான தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற கொள்கைகளுடன் வழுவாது நிற்கவேண்டும் என்ற கோரிக்கையினை புலம்பெயர் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முன் வைத்து அந்த அடிப்படையில் அவர்களுக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குரிமையை பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment