Translate

Friday, 7 September 2012

நீதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்பதில் சந்தேகம்: அரியநேத்திரன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியான முறையில் நடைபெறும் என்பதில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளைக் கொண்டு சந்தேக நிலையை உருவாக்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாளை சனிக்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மண்டூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்று கருத்தரங்கு ஒன்றை நடத்தியதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செயற்பாடு முற்றுமுழுதான தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலாகவே கருதவேண்டும்.ஓர் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளது எமக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் பட்டப்பகலில் மதுபானப்போத்தல்கள் ஓர் அரச கட்சி ஆதரவாளரால் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை எமது ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் ஊழியர்கள் அதிகளவில் இருக்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் கடமைகளுக்காக பெருமளவு பெரும்பான்மையின ஊழியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை பெரும் மர்மமாகவே உள்ளது.கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் போதியளவு தமிழப்; பேசும் ஊழியர்கள் இருக்கும்போது வேறு இடங்களில் இருந்து பெரும்பான்மையின ஊழியர்கள் கொண்டுவரவேண்டிய தேவையென்ன.
அத்துடன் தமிழ்ப் பகுதிகள் சிலவற்றுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரியாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நடைபெற்றுவரும் நிகழ்வுகள் தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடைபெறுமா என்பதில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.இது தொடர்பில் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடும் அமைப்புக்கள் சிரத்தையுடன் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment