Translate

Friday, 7 September 2012

இலங்கை அரசின் எதிர்காலச் செயற்பாட்டிலேயே இலங்கை இந்திய நல்லுறவு தங்கியுள்ளது


இலங்கை அரசின் எதிர்காலச் செயற்பாட்டிலேயே இலங்கை இந்திய நல்லுறவு தங்கியுள்ளது
 சுரேஷ்.க.பிரேமச்சந்திரன்
 
தமிழ்நாட்டிற்குச் சென்ற இலங்கை யாத்ரீகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டமானது என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 
 
தமிழ் நாட்டுக்குச் சென்ற இலங்கை யாத்ரீகர்கள் தமிழக மக்களால் தாக்கப்பட்டமையானது பல்வேறுபட்ட சர்ச்சைகளை உருவாக்கியிருக்கி;ன்றது. அப்பாவி மக்கள் அவர்கள் எத்தரப்பினராக இருந்தாலும் தாக்கப்படுவது அங்கீகரிக்கப்பட முடியாததும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததுமாகும். அந்தவகையில், தமிழகத்திற்கு யாத்திரை சென்ற இலங்கை மக்கள் தாக்கப்பட்டமையானது துரதிர்ஷ்டமானதும் வருத்தத்திற்குரியதுமாகும்.
 
ஆனால், இந்தநிலை ஏன் தோன்றியது என்பதே இங்கு முக்கியமானது. யுத்தம் முடிந்து மூன்றாண்டுகளின் பின்னரும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். நிரந்தர இராணுவக் குடியிருப்புக்கள், நவீன மயப்படுத்தப்பட்ட இராணுவ முகாம்கள் என்பவை சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 
 
தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றனர். தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்படுகின்றது. தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள இராணுவம் விவசாயம் செய்வதுடன், அந்த மக்கள் மீளக்குடியேறுவதையும் மறுதலித்து வருகின்றது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர். இவையாவும் தொடர்ச்சியாக வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களைப் பார்க்கக்கூடிய கேட்கக்கூடிய யாவரும் சிங்கள அரசாங்கத்தின்மேல் ஆத்திரமும் கோபமும் கொள்வது இயற்கையே. அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் யாத்ரீகர்கள் தாக்கப்பட்டமை என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். 
 
இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமல் இருக்க வேண்டுமாயின், இலங்கை அரசாங்கம் மேற்கண்ட தவறுகளை நிறுத்த வேண்டும். அதுமாத்திரமல்லாமல், தமிழக சட்டசபையில் இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரித்துமிருக்கின்றன. 
 
முன்னர் தென்னாப்பிரிக்காவின் விடுதலைப்போராட்டம் நடைபெற்றபொழுது, இனவெறி அரசிற்கெதிராக உலக நாடுகள் பல்வேறுபட்ட தடைகளைக் கொண்டுவந்தன. பொருளாதாரத் தடைகள், பிறநாடுகளின் விளையாட்டுக்குழுக்கள் தென்னாபிரிக்காவிற்குச் செல்வதற்கான தடைகள் போன்ற பல்வேறுபட்ட தடைகள் பல்வேறு நாடுகளால் கொண்டுவரப்பட்டன.
 
தமிழகத்திற்கு வந்திருந்த சிறிலங்கா உதைபந்தாட்டக்குழு திருப்பி அனுப்பப்பட்டதானது அதன் ஒருபகுதி என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். டெல்லி அரசாங்கம் பொருளாதாரத் தடைகளையோ ஏனைய தடைகளையோ கொண்டுவரத் தவறினாலும்கூட தமிழக மாநில அரசு இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அக்கறையாய் இருப்பது புரிந்துகொள்ளக்கூடியது. 
 
ஆகவே, இந்த விடயங்களை மேலோட்டமாகப் பார்க்காமல், இந்திய - இலங்கை உறவுகள் திருப்திகரமாக இருக்க வேண்டுமாயின், தமிழக மக்களின் மனோநிலை, தமிழக அரசின் மனோநிலையையும், தமிழக அரசியல் கட்சிகளின் மனோநிலைகளையும் இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும். 
 
தமிழகத்தில் ஏதும் நேர்ந்தால் இங்குள்ள இந்தியத் தமிழருக்கு பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படுமென அச்சுறுத்துவது விமல் வீரவன்ச போன்றவர்களுடைய முட்டாள்தனமான சிந்தனைகளேயன்றி, ஆரோக்கியமான சிந்தனை அல்ல. இலங்கை அரசின் எதிர்கால செயற்பாடுகளில்தான் இந்திய இலங்கை நல்லுறவும் தமிழகத்துடனான நல்லுறவும் தங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment