Translate

Saturday, 8 September 2012

சுஷ்மா ரொம்ப நல்லவர்.. ஈழத் தமிழருக்கு ஆதரவானவர்...: பொன்.ராதாகிருஷ்ணன்


சென்னை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேஇந்தியாவுக்கு வருமாறு சுஷ்மா ஸ்வராஜ்அழைக்கவில்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை தமிழர்களை கருவறுக்கும் கொடூர செயலை 2008-ம் ஆண்டு இலங்கை அரசு அரங்கேற்ற தொடங்கிய நாள் முதல் இலங்கை அரசையும், அதற்கு துணை போன மத்திய காங்கிரஸ் அரசையும் தமிழக பாரதீய ஜனதா கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது.

2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்த போது தானாக முன்வந்து ஆயிரக்கணக்கான டெல்லி மக்களை அழைத்து வைத்து டெல்லியில் தெருவில் இறங்கி போராடிய ஒரே தலைவர் சுஷ்மா சுவராஜ் மட்டுமே என்பதை மறந்துவிட கூடாது.
தற்போது மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி ஊரில் புத்த மதத்தவர் நிறுவும் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த மாதம் 21-ந் தேதி நடைபெறுவதாக உள்ளது. அதற்காக பூடான் பிரதமர், இலங்கை அதிபர் உட்பட சில நாட்டு தலைவர்களை அழைத்துள்ளனர். அதன் அடிப்படையில் மத்திய காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் அழைத்துள்ளது.
ஆனால் தற்போது ராஜபக்சேவை அழைத்திருப்பது சுஷ்மா சுவராஜ் என்று தவறான செய்தி பரப்பப்படுவது கண்டு, ஆச்சரிய மிகுதியில் உண்மையை தெரிந்து கொள்ள சுஷ்மா சுவராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தான் ராஜபக்சேவை அழைக்கவில்லை என்று சுஷ்மா சுவராஜ் தெளிவுபட கூறினார்.
நமது நாட்டிற்கு பிற நாட்டு அதிபர், பிரதமர் போன்றோரை அழைக்கும் அதிகாரமும் அனுமதி வழங்கும் பொறுப்பும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியின் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தான் உண்டு என்பது பச்சிளம் குழந்தைகளுக்கு கூட தெரியும்.
2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவிற்கு தமிழரை கொன்று குவித்த ராஜபக்சேயின் ரத்தக்கரை படிந்த கரங்கள் காயும் முன்னரே இந்தியாவின் சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவப்படுத்தியது மத்திய காங்கிரஸ் அரசு. இந்த இமாலய தவறினை கண்டித்து ராஜபக்சேவை அழைக்கக்கூடாது என்று முதல் குரல் கொடுத்தது பாரதீய ஜனதா கட்சி தான்.
சுஷ்மா சுவராஜ், தான் ராஜபக்சேவை அழைக்கவில்லை என்பதை மீண்டும் மீண்டும் பகிரங்கமாக அறிவித்த பின்னரும் அவர் மீது தொடர்ந்து குற்றம் சுமத்துவது உண்மையான குற்றவாளியான காங்கிரஸ் அரசை காப்பாற்றும் திரைமறைவு முயற்சியாக இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது.
உண்மை குற்றவாளிகளின் மீது இருக்கும் நெருக்கடியை திசை திருப்பும் நோக்கத்தோடு, இலங்கை தமிழர்களுக்கு எப்போதும் துணையாக நிற்கும் சுஷ்மா சுவராஜ் மீது குற்றச்சாட்டை சுமத்த நினைப்போருக்கு, இந்த உண்மைகளை எடுத்துக்கூறி ராஜபக்சேவை எதிர்ப்பதில் தமிழர்கள் நாம் ஒருங்கிணைவோம். தமிழர்களுக்காக குரல் கொடுத்து தொடர்ந்து போராடி வரும் சுஷ்மா சுவராஜின் உண்மையான தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை புரிந்து கொள்வோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment