Translate

Monday 3 September 2012

எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா இல்லையா? ம‌க்க‌‌ளிட‌ம் கே‌ட்டு‌‌ம் கருணா‌நி‌தி

''இலங்கை தமிழர் பிரச்சனையில் என் மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு முதுகெலும்பு இல்லை என்று ஒரு வார்த்தையை நெடுமாறன் பயன்படுத்தியிருக்கிறார். எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா இல்லையா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்'' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.


இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 23.8.2012 அன்று நெடுமாறன் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில் இலங்கையில் விடுதலைப்போராளிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே போர் நடைபெற்றபோது, அதைத்தடுக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை என்று எழுதியிருந்தார். அதற்கு நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆதாரப்பூர்வமாக சில விவரங்களை குறிப்பிட்டு; இலங்கையில் போர் நடைபெற்றபோது அதனை தடுக்க நான் எதுவுமே செய்யவில்லையா? என்னென்ன செய்தேன்? என்பதையெல்லாம் தொகுத்து தேதிவாரியாக விளக்கியிருந்தேன்.

நெடுமாறனை பொறுத்தவரையில் அவருக்கு எப்படியாவது தற்போது ஆளுங்கட்சியோடு இணைந்து ஏதாவது பயன்பெற வேண்டுமென்பதுதான் குறிக்கோள். அங்கே நெருங்க வேண்டுமென்பதற்கு என்ன வழி என்று பார்த்து, நம்மை தாக்கினால்தான், அங்கே உள்ளவர்கள் மனம் குளிர்வார்கள், தனக்கு தக்க இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, 24 மணி நேரமும் நம்மை சாடுவதிலேயே நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார்.

1984-85 ஆண்டுகளில் போராளிகளிடையே சகோதர சண்டையை தொடங்கி வைத்தவனே கருணாநிதிதான் என்று எழுதியிருக்கிறார். சகோதர யுத்தத்தை போராளிகளிடையே நான் தூண்டி விட்டேனா? அல்லது நெடுமாறன் கும்பல் தூண்டி விட்டதா? என்பதை அந்தப்போராளி இயக்கங்களை சேர்ந்தவர்களே நன்குணர்வார்கள். அந்த போராளிகள் இயக்கங்களை நான் தான் தூண்டிவிட்டேன் என்று நெடுமாறன் கூறுவதை வாதத்திற்காக ஒப்புக்கொண்டு கேட்கிறேன்.

நான்தான் போராளிகள் இயக்கத்தை தூண்டி விட்டவன் ஆயிற்றே? 1985ஆம் ஆண்டு மே திங்களில் என் தலைமையில் உருவான "டெசோ'' அமைப்பில் இந்த நெடுமாறன் ஏன் ஒரு முக்கிய உறுப்பினராக சேர்ந்தார்? "டெசோ'' அமைப்பின் சார்பில் கோவை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் என்னுடன் எதற்காக நெடுமாறன் கலந்து கொண்டார்

கடைசியாக நடைபெற்ற வேலூர் பேரணியில் நெடுமாறன் கலந்துகொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் இலங்கை சென்றபோது, 10.1௦0.1985 தேதியிட்டு எனக்கொரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், "டெசோ இயக்கத்தை மேலும் வளருங்கள். ஏனெனில் தமிழீழம் காண போராடும் விடுதலை போராளிகளுக்கும் மக்களுக்கும் நமது "டெசோ'' இயக்கத்தை தவிர உற்ற துணைவன்-உண்மையான துணைவன் வேறு யாருமில்லை'' என்று எழுதிய கை நெடுமாறன் கை தானே? அதுமாத்திரமல்ல; அந்த காலகட்டத்தில் இதே நெடுமாறன்; அவர் எழுதிய "மத்திய-மாநில உறவுகள்-சில குறிப்புகள்'' என்ற நூலினை நான்தான் வெளியிட வேண்டுமென்று கேட்டு, 30.6.1985 அன்று சென்னை பெரியார் திடலில் தி.சு.கிள்ளிவளவன் தலைமையில் நான் வெளியிட்டேன். அப்போது நெடுமாறனுக்கு நான்தான் இலங்கையில் சகோதர சண்டையை தொடங்கி வைத்தவன் என்று தெரியாமல் போய்விட்டதா?

நெடுமாறன் அறிக்கையில் திரும்பத்திரும்ப நான் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து கொண்டதைபோல தோற்றமளிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். அது ஏதோ திட்டமிட்டு உள்நோக்கத்துடன் எழுதியுள்ளதாகவே தெரிகிறது. டெசோ மாநாட்டிற்காக வருகை தந்திருந்த வாஜ்பாய், என்.டி.ராமராவ், ராமுவாலியா போன்றவர்களின் முன்னிலையில், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளிடம் "நமக்குள் நாமே மோதி கொள்ளக் கூடாது, சகோதர யுத்தம் கூடாது, சபாரத்தினத்தை கொன்றுவிட வேண்டாம், இலங்கை தமிழர்களுக்காக அனைவரும் சேர்ந்துதான் பாடுபடவேண்டும்'' என்று அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு உருக்கத்தோடு கேட்டுக்கொண்டேன். நெடுமாறனுக்கு இது தெரியாதா?

இலங்கை தமிழர் பிரச்சனையில் என் மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு முதுகெலும்பு இல்லை என்று ஒரு வார்த்தையை நெடுமாறன் பயன்படுத்தியிருக்கிறார். எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா இல்லையா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.

இலங்கைத்தமிழர் பிரச்சனையிலும், அங்கேயுள்ள தமிழர்கள் அமைதியாகவும், நலத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகவும் நான் என் மனச்சாட்சிபடி என்னால் முடிந்த அளவிற்கு என் வாழ்க்கையில் பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன். இதிலே நெடுமாறன் போன்றவர்களின் சான்றிதழ்களை நான் ஏற்கனவே பெற்றிருக்கிறேன். எனவே இப்போது அவரை போன்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறேன். என்மீது குறை கூறி விரலை நீட்டுகின்ற நெடுமாறன் போன்றவர்கள் வாய் ஜாலம் காட்டுவதை தவிர இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள். என்னைப்பற்றியும் நன்கறிவார்கள். ஏதோ என்னைத்தாக்கி எழுதினால் தங்கள் பிழைப்பு நடக்காதா என்பதற்காக எழுதுகிறார்கள் என்றால் எழுதி விட்டுப்போகட்டும்! எதையும் தாங்கும் இந்த இதயம்-வாழ்க வசவாளர்கள்! என்று மட்டும் அண்ணா வழியில் கூறி, அவ்வழியில் நடப்போம் நாம்! எ‌ன்று கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment