Translate

Tuesday, 11 September 2012

டக்ளஸ் தேவானந்தா போர்த்திய பொன்னாடை தனது இசைப் பயணத்தில் கரும்புள்ளி; பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன்

news
யாழில் தனக்கு டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்திய சம்பவம் தனது இசைப் பயணத்தில் கரும்புள்ளியாக விழுந்துவிட்டது என தமிழகத்தின் பிரபல பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் எதிர்பாராது நடந்ததாகவும் அதற்காக உலகத் தமிழ் மக்களிடம் அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தமிழகத்திலிருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு அவர் தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவையொட்டி இசைக்கச்சேரி செய்யுமாறு என்னை அணுகினார்கள். ஈழத்தமிழர்களின் மனங்களில் விடுதலைப் பாடல்களின் மூலம் நீங்காத இடம் பிடித்த நான், யாழ்ப்பாணம் சென்று அவர்களை சந்திக்கவும், இசை கச்சேரி நடத்தவும் ஒப்புக்கொண்டேன்.

இசைக்கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீரென தமிழ் மக்கள் பலரின் படுகொலைக்கு காரணமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளரான டக்ளஸ் தேவானந்தா திடீரென தன் ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சிலருடன் மேடையில் ஏறி, எனக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். பின்புதான் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டேன்.

ஒட்டுமொத்த தமிழர்களாலும் வெறுக்கப்படுபவரும், இந்தியாவில் கொலை குற்றம் சாட்டப்பட்டவருமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளர்தான் டக்ளஸ் தேவானந்தா என்பதை நான் பின்னர் தெரிந்துகொண்டேன்.

 இந்த நிகழ்வு தற்செயலாக நடைபெற்ற வேண்டதகாத சம்பவமாகும். இந்த சம்பவத்தை பற்றி மிகுந்த மனம் வருத்தம் அடைகிறேன். என்றும் உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாவேன். என் இசை பயணத்தில் அச்சம்பவம் கரும்புள்ளியாக விழுந்துவிட்டதை உணருகிறேன். இனி வரும் காலங்களில் இப்படியொரு சம்பவம் நடைபெறாது என உறுதிகூறுகிறேன். இந்நிகழ்வு தமிழர்களை காயப்படுத்தியிருக்கும். அதற்காக மீண்டும் எனது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment