Translate

Monday 3 September 2012

ஜெனிவாவில் தமிழ் தேசியம் வெல்லும்! சம்மந்தன் MP


சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருகின்றது. அவர்களின் பங்களிப்பு, ஆர்வம், செயற்பாடு மக்களின் ஜனநாயக முடிவில் தங்கியிருக்கின்றது. உங்களின் முடிவு உறுதியான தெளிவான முடிவாக இருக்குமாகவிருந்தால் அவர்கள் எம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பெரியகல்லாறில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வேட்பாளர் நடராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற இந்த தேர்தலில் மக்கள் அளிக்கும் ஜனநாயக முடிவுக்கு என்ன விதத்தில் இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கப் போகின்றது.
இதற்கு முன்னர் தமிழ் மக்களின் ஜனநாயக முடிவுகளை உதாசீனம் செய்து வந்தது. இம்முறை இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களால் இந்த தேர்தலில் அளிக்கப்படும் ஜனநாயக உரிமையை அவர்கள் இலகுவாக உதாசீனம் செய்யமுடியாது.
அவ்விதமான செயற்பாடுகள் இடம்பெறுமானால் அவர்கள் பலவிதமான கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டிய நிலையேற்படும். அதன் மூலமாக அவர்களின் உண்மையான நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிக்காட்டுவார்கள். அதன் ஊடாக வேறுபல விளைவுகள் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பம் உண்டு. எமது தேர்தல் முடிவுகள் மிகவும் உறுதியாக, தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த தேர்தல் முடிவு எங்களது மக்களை பொறுத்தவரையில் ஒரு நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வு அத்தியாவசியம். அது நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வாக அமையவேண்டும்.
அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் அமைய வேண்டும். மக்களின் இறைமையை மதிக்கக்கூடியதாக அமையவேண்டும். நிலை நிக்கக்கூடியதாக அமைய வேண்டும்.
ஐ.நா.பேரவையின் தீர்மானத்தில் இந்த கருத்துக்கள் சுருக்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் செய்யப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையிலும் அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஐ.நா.பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவ்விதமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் ஐ.நா.பேரவையின் மனித உரிமை பேரவையின் பங்களிப்புடன் விசேடமாக, அடுத்தவருடம் இடம்பெறும் அமர்வில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இலங்கை அரசாங்கம் என்னவிதமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கபடும் அறிக்கையின் அடிப்படையில் இந்த விடயம் பரிசீலிக்கப்படும்.
இந்த வருட இறுதியில் ஜெனிவாவில் இடம்பெறும் அமர்வின்போது தமிழ் தேசியம் பிரச்சினைகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கத்தினால் இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலும் பல விடயங்கள் பரிசீலிக்கப்படும்.
அதனால் இன்றைய சூழலில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு எமது பிரச்சினையில் சர்வதேச சமூகம் ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்கின்ற சூழலில், எமது மக்களின் ஜனநாயக முடிவு எவ்வாறு இருக்கவேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்.
உங்களின் முடிவின் மூலமாக தமிழ் மக்கள் தமது ஜனநாயக கோரிக்கையை மிகவும் தெளிவாக தெரிவித்துள்ளனர் அதனை நாங்கள் மதிக்கவேண்டும் என்று சர்வதேசம் கூறக்கூடிய நிலைமை உருவாகும்.
அதன் முடிவின் மூலமாக ஜனாதிபதியின் அரசாங்கமும் இற்றைவரையில் தமிழ் மக்கள் ஜனநாயக வழியிலான தீர்வை உதாசீனம் செய்து வந்திருந்தாலும் கூட, தேர்தல் முடிவை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் ஆக்கபூர்வமாக சிந்திக்ககூடிய வகையில் சர்வதேச சமூகத்தின் ஊடாக எமது தீர்வு அமைய வேண்டும்.
சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். அதிகமாக தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பில் அரசாங்கத்தை முழுமையாக நிராகரித்து. எந்தவொரு தமிழ் உறுப்பினரையும் அரசதரப்பில் தெரிவுசெய்யவில்லையென்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.
அது எமது கடமை. அதை நிறைவேற்றுவோமாகவிருந்தால் அது ஒரு பெருவெற்றி. எமது வாக்குகள் வெற்றிலைக்கு விழுமானால் அது எமக்கு பாதகமாகவே அமையும். முன்னாள் முதலமைச்சர் வெற்றிபெறுவது சந்தேகம் என பலரும் தெரிவிக்கின்றனர். அவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணான வாக்குகள் என்று கருதி அவற்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பு அளிக்கசெய்ய வேண்டியது உங்களது கடமை.
எமது நியாய பூர்வமான அபிலாஸைகள் மற்றும் எங்களது ஆட்சியை கொண்டுவருவதாக இருந்தால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்.
வடமாகாணத்திலே எந்தவிதத்திலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற வேண்டும். அங்கு நிச்சயமாக எங்கள் கட்சி வெற்றிபெறும். அப்போது இந்த இரு மாகாணசபைகளும் இணைந்து பல விடயங்களை கையாளும் நிலைமை உருவாகும். 
பல விடயங்கள் தொடர்பில் பல முடிவுகளை எடுக்கலாம். தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி மாகாணசபை உறுப்பினர்கள் பல செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஆட்சி அதிகாரங்களை நாங்கள் கைப்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment