Translate

Monday 3 September 2012

சிங்களப் பேரினவாதத்தின் கபடநோக்கத்தைத் துளைத்து வீழ்த்த ஓவ்வொரு வாக்கும் ஆயுதமாகட்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தேசியத் தளத்தைப் பாதுகாப்போம். - தமிழர்நடுவம் பிரான்ஸ்

சிங்களப் பேரினவாதத்தின் கபடநோக்கத்தைத் துளைத்து வீழ்த்த ஓவ்வொரு வாக்கும் ஆயுதமாகட்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தேசியத் தளத்தைப் பாதுகாப்போம். - தமிழர்நடுவம் பிரான்ஸ்


தென்தமிழீழம், மண்மீட்பிற்காக அதிகவிலைகொடுத்த புண்ணியபூமி. விடுதலைக்கான எழுச்சியின் ஒவ்வொரு பரிமாணங்களிலும், தியாகத்தாலும் அர்ப்பணிப்புக்களாலும் நிறைந்துபோயிருக்கும் புனித பூமி. பௌத்த சிங்களப் பேரினவாதம், பெருமளவில் உயிர்பலியெடுத்த பூமி. துன்பங்கள் துயரங்கள், இழப்புக்களால் கனத்தபூமி. இன்று, சிங்கள அரசின் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டு நிற்கின்றது. 


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானம் ஒருபுறம், இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தும் அனைத்துலக சமூகம் ஒருபுறம், மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் கடுமையான தொடர் கண்டனங்கள் அழுத்தங்கள் ஒருபுறம், புலம் பெயர்ந்து வாழும் தமிழ்சமூகத்தின் தொடர் போராட்டங்கள் ஒருபுறம், இப்படியாக சிறீலங்கா அரசு பெரும் நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் இத்தருணத்தில், இத்தேர்தல் நடத்தப்படுகின்றது. 

இந்த நெருக்கடிகளில் இருந்து ஓரளவேனும் தப்பித்துக்கொள்ளும் கபட நோக்கத்துடனேயே, ராஜபக்ஸ்ச அரசு உரிய காலத்திற்கு முன்னராக இத்தேர்தலை நடாத்துகின்றது. 
இத்தேர்தலில் தனக்குச் சாதகமான பெறுபேறை அடைவதன் மூலம், அனைத்துலக சமூகத்தின் கடும்போக்கில் தளர்வை ஏற்படுத்தமுடியும் என சிங்கள அரசு கருதுகின்றது. போர்க்குற்றங்கள் குறித்த, அனைத்துலகத்தின் நிலைப்பாடுகளை பலம் இழக்கச் செய்ய இத்தேர்தலை பயன்படுத்த அது திட்டமிட்டுள்ளது.

தமிழ் மக்கள் தம்மோடு நிற்கின்றார்கள் என்ற செய்தியை, இத்தேர்தல் மூலம் வெளிப்படுத்துவதன் மூலம், தாயகம், தேசியம், தன்னாட்சிஉரிமை என்ற தமிழ்மக்களின் அடைப்படைக் கோட்பாடுகளைச் சிதைத்து, உப்புச்சப்பற்ற பெயரளவிலான தீர்வுக்கு தமிழர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதைக் காண்பிக்கவும் ராஜபக்ஸ்ச அரசு திட்டமிட்டுள்ளது. தமிழர் தாயகத்தைத் துண்டாடி, வடக்கு கிழக்காகப் பிரித்துவைத்திருக்கும் சிங்களஅரசு, தனது திட்டத்திற்கு பலம் சேர்க்க இத்தேர்தல் வெற்றியை எதிர்பார்க்கின்றது. 

தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் வாழும் சிக்கலான சமூக அமைப்புக்கொண்ட தென்தமிழீழத்தில் அவசரஅவசரமாகத் தேர்தலை நடத்தத் துணிந்ததன் நோக்கம் வெளிப்படையானது. தமிழ் மக்களின் பலத்தை, அம்மக்களின் அரசியல் நிலைப்பாட்டைப் பலம் இழக்கச் செய்வதே அதன் நோக்கம். 
இதற்காக, தனது கூலிக்கும்பல்களை சிறீலங்கா அரசு களம் இறக்கியிருக்கின்றது. சுயேட்சைக் குழுக்களாகவும், அது தன் அடிவருடிகளை தேர்தலில் போட்டியிடவைத்துள்ளது. 

சிங்களத்தின் தேர்தல்களில் பங்குபற்றுவதால் ஏதும் ஆகப்போவதில்லை என்பது, அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களுக்குக்கூடத் தெரியும் என்றாலும், சிங்களத்தின் தேர்தல்களைத் தமிழர் தரப்பு கடந்த காலங்களில் பாவித்தே வந்துள்ளது. தாயகத்தில் விடுதலைப் புலிகள் நிழல் அரசை நடத்திவந்த காலத்திலும், சிறீலங்காத் தேர்தல்களை, அரசியல் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். சிங்கள அரசின் சட்டவிதிகளுக்கு அமைவாக, அரசியல் கட்சியைக்கூட பதிவு செய்தனர் விடுதலைப் புலிகள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைத்து, சிங்களப் பாராளுமன்றத்திற்கு தமிழ்ப்பிரதிநிதிகளை அனுப்பினர். இவை தமிழ் மக்களின் விடுதலைக் கோரிக்கையை, விடுதலைப் போராட்டத்தை சிதைக்கவில்லை. மாறாக, பலப்படுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளன. 

தமிழ்மக்களின் பிரச்சினைகள் பற்றிப்பேச, சனநாயக முறைப்படி தேர்வுசெய்யப்பட்ட தமிழ்மக்களின் பிரதிநிதிகளை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது. இந்த இடத்தில், தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக, தனது கூலிகளையும், அடிவருடிகளையும் அனைத்துலக மன்றங்களுக்கு அனுப்பிவைக்க ராஜபக்ஸ்ச அரசு திட்டமிட்டுள்ளது. 
தமிழ் மக்களின் விருப்பங்களை, அபிலாசைகளை விற்றுப் பிழைப்புநடத்தும் தமிழர் விரோதிகளை, முற்றாக நிராகரித்து, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு பெருவெற்றியை தென்தமிழீழ மக்கள் வழங்கவேண்டும். எமது மண்ணின் விடுதலைக்காக, தங்களது உடலை, உதிரத்தை, பேச்சை மூச்சை முற்றாகத் தந்து சென்ற எங்கள் மாவீரர்களின் புனிதமான இலட்சியக் கனவு நனவாக, முதலில், எங்கள் தேசியம் சிதைவுறாமல் பாதுகாக்கவேண்டும்.
எமது தேசியத்தை, கூறுபோட்டு, கடித்துக்குதற நாய்களும் பேய்களும் சிங்களத்துடன் கைகோர்த்துக் களம் இறங்கியிருக்கும் இத்தருணம், மிக ஆபத்தானது. இக்காலத்தே, தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடனும், செயலூக்கத்துடனும், அறிவுபூர்வமாகவும் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். 

எதிர்வரும் தேர்தல், மண்ணின் விடுதலைக்காக உயிர்துறத்த, அற்புதமான ஆத்துமாக்களை நினைவுகூர்ந்து, அவர்களின் கனவு நிறைவேற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவுற விளங்கி, எமது வாக்குகளை, ஆயுதமாகப் பாவிக்கவேண்டும்.  
இத்தேர்தலை தமிழ்மக்கள் முற்றாகப் பகிஸ்கரிக்கவேண்டும் என, இங்கொன்றும் அங்கொன்றுமாக எழும் கோரிக்கைகள் அர்த்தமற்றவை. சூழ்நிலைக்கும் யதார்த்தத்திற்கும் பொருத்தமில்லாத குழப்பவாதங்கள்.  இவை, சிங்களம் தான் விரும்பியவாறு, தனது கூலிக்கும்பலை, அரியணை ஏற்ற வசதி ஏற்படுத்திக் கொடுக்குமேயல்லாது, தமிழர் தரப்பை பலப்படுத்தாது. மாறாக, தமிழ்மக்களின் உண்மையான பிரதிநிதிகளின் குரல்கள் எங்கும் எதிரொலிக்கமுடியாத ஆபத்தான சூழ்நிலையையே தோற்றுவிக்கும்.
இன்று உலக அரங்கில், தமிழர் தரப்பு நியாயங்களை, தீர்வுகுறித்த நிலைப்பாடுகளை முன்வைக்கத் தகுதியான தமிழர் பிரதிநிதிகளை தேர்வுசெய்யவேண்டும். உலகத் தமிழர்களினதும், தாயகத் தமிழர்களினதும் கருத்துக்களுக்குச் செவிசாய்க்கவல்ல, தமிழ்மக்களின் நலன்களில் அக்கறைசெலுத்தவல்ல, தமிழ்மக்களின் தீர்வுவிடயத்தில், நீண்ட அனுபவங்களும், தெளிவும் மிக்கவர்களை தேர்வுசெய்யவேண்டும். 

சிங்கள அரசு இத்தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றது. இத்தேர்தல் முடிவுகளை, சர்வதேச சமூகமும் உன்னிப்பாக எதிர்பார்க்கின்றது. போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் புலத் தமிழர்களும் இத்தேர்தல் முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர். 
தமிழ்மக்களுக்குச் சார்பாக எழுந்துள்ள அனைத்துலகச் சூழ்நிலையும், வீழ்ந்தாலும் எழுவோம் என்ற வீரியத்துடன் போராடிக்கொண்டிருக்கின்ற புலத்தமிழர்களின் போராட்டமும், தென்தமிழீழ மக்களின் வாக்குக்களால் பலம் பெறட்டும்.
புலத்தில் வாழும் தமிழர்களே உங்களுக்கான வேண்டுகோள்.

தென்தமிழீழத்தில் வாழும் உங்கள் உறவுகள், குடும்பத்தினர், நண்பர்கள் தெரிந்தவர்கள் அனைவருடனும் தொடர்புகொண்டு, தமிழ்மக்கள் தொடர்பாக தற்போதைய அனைத்துலக நிலைப்பாடு, மற்றும் சிங்களத்தின் சூட்சி குறித்து விளக்குங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியின் அவசியத்தை வலியுறுத்துங்கள். எல்லோரையும் வாக்களிக்கத் தூண்டுங்கள். வித்தாகிப்போன எங்கள் வீரமறவர்களின் கனவு மெய்ப்பட, கிடைக்கின்ற ஒவ்வொரு துரும்பையும் ஆயுதமாக்குவோம். 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம் - பிரான்ஸ்

No comments:

Post a Comment