நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின் இந்தியாவின் பங்கு எவ்விதத்தில் அமையவுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கடந்த பல தசாப்த காலமாக வடக்கு, கிழக்கு மாகாணத் தீர்வு விடயங்களுக்காக இந்தியா தனது ஆதிக்கத்தை ஆங்காங்கே செலுத்தி வந்தமை தெரிந்ததே. கடந்த முறை தேர்தலில் கூட தமிழ்ப் பிரதிநிதி முதலமைச்சராக வருவதற்கு மறைமுக இந்தியத் தலையீடு இருந்ததைத் தட்டி கழிக்க முடியாது. அதுமட்டுமன்றி ராஜிவ்காந்தி,ஜயவர்த்தனா கைச்சாத்திட்ட உடன்படிக்கையில் வடக்கு, கிழக்கு இணைந்த மானிலம் என்பது தெட்டத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இந்திய இராணுவ ஆதரவுடன் வடக்கு, கிழக்கு முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள் தமிழ் ஈழப் பிரகடனம் செய்து இலங்கையில் இருந்து வெளியேறியது போன்ற எல்லா நிழ்வுகளிலும் இந்தியத் தலையீடு இருந்ததை மறுதலிக்க முடியாது.
காலப்போக்கில் இலங்கை அரசு வடக்கு, கிழக்கை தனி மாநிலமாக்கிய போது கூட இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்ததைக் காணகூடியதாகவுள்ளது.
மேற்கத்தேய நாடுகளின் பிரசன்ன அரசியலில் தீர்வு முயற்சிகளின் போது கூட இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தற்போது தமிழ்க் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த கூட்டணி ஆட்சி அமைக்காது அரசு சார்ந்த கூட்டணி அமைவானது இந்தியாவின் இலங்கை சார்ந்த கொள்கை முன்னெடுப்பில் பாரிய முட்டுக்கட்டையாயும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் பாரிய பின்னடைவும் ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனைக் கருத்திற் கொண்டு இந்தியா சில தீர்க்கமான முடிவு எடுப்பது காலத்தின் தேவையாகும்.
No comments:
Post a Comment