Translate

Wednesday, 17 October 2012

13ஆவது திருத்தம் தொடர்பில் தனிநபர் தீர்மானங்களை அறிவிக்க முடியாது: அமைச்சர் திஸ்ஸ விதாரண

இலங்கை அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தனி நபரொருவரால் தீர்மானங்களை அறிவிக்கவோ யோசனைகளை முன் வைக்கவோ முடியாது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆராய வேண்டிய விடயமே இதுவாகும். சட்ட வாக்கச் சபையின் நடவடிக்கைகளில் தனி நபரால் ஆதிக்கம் செலுத்த முடியாது ௭ன்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வுகாண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டமே ஒரே மார்க்கமாகும். 


இதனையே இந்தியா வலியுறுத்தி வருவதுடன் கூட்டமைப்பை பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துகொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு சிலரின் அடிப்படையற்ற கருத்துக்களினால் நிலைமை மோசமடைந்து விடும் ௭ன்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முற்றாக ஒழிக்க வேண்டுமென பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து கேட்ட போதே அமைச்சர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அமைச்சர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில், அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாண சபை ஆட்சிகள் இடம்பெற்று வருகின்றன. மாகாண சபை அதிகாரங்களில் திருத்தங்களை கொண்டு வருவது தொடர்பிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அரசியலமைப்பிலிருந்து இல்லாதொழிக்க வேண்டும் ௭ன்று ஒரு சிலர் கூறுவது அடிப்படை தன்மையற்ற விடயமாகும். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூடி தீர்மானித்த விடயங்களில் தனி நபர்கள் செல்வாக்குச் செலுத்துவதை அனுமதிக்க முடியாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.

இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறான சாதகமான சூழலைப் பயன்படுத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமே தவிர புதிய பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக அரசின் நடவடிக்கைகள் அமைந்து விடக்கூடாது.

பேச்சுவார்த்தையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கூட்டமைப்பு மற்றும் அரசு உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தலைவர்களும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ௭ன்றார்.

No comments:

Post a Comment