Translate

Sunday 14 October 2012

அரசியல் விமர்சனம்: தமிழரின் உரிமை மறுப்பின் உச்சக்கட்டம் இது….


தமிழரின் உரிமை மறுப்பின் உச்சக்கட்டம் இது….
திவி நெகும போன்று ஆளுனரின் ஒப்புதலுடன், வடக்கு மாகாணசபையில் பெறவேண்டிய ஒப்புதல்களைப் பெறுவதே அரசின் திட்டம். ஆனால், ஆளுனர் ஒப்புதலுடன் திவி நெகுமசட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வடக்கிலுள்ள மக்களின் உரிமைகளை மீறுகின்ற செயல் என்று, வழக்குத் தொடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து கொஞ்சமேனும் கவலைப்படவில்லைஎன்பதையே இந்தச் சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறப்பட்ட முறையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
சில சட்டங்கள் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டியவை, சில சட்டங்கள் ஆறுதலாக நிறைவேற்றப்பட வேண்டியவை. அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டமாக திவி நெகும சட்டத்தை வகைப்படுத்த முடியாது. ஆனாலும் அரசாங்கம் அதற்கு காட்டுகின்ற அவசரம், மாகாணங்களிடம் உள்ள காணி அதிகாரங்களைப் பறித்துக் கொள்வதில் உள்ள நாட்டத்தை வெளிப்படுத்துகிறது. அதைவிட, வடக்கு மக்களின் உரிமைகளை மதிக்காத போக்கையும் இது வெளிப்படுத்துகிறது. என்கின்றார் இபோதமிழ் குழுமத்தின் பிராந்திய அரசியல் இரானுவ ஆய்வாளர் ஹரிகரன் அவர்கள்

போருக்குப் பின்னரும் தமிழர் மீதான அடக்குமுறைகள், உரிமை மறுப்புகள் ஓயவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. திவி நெகும சட்டத்தை அரசாங்கம் வடக்கு மாகாணசபையின் ஒப்புதலின்றி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுமேயானால், அது தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்ல என்பதையே வெளிப்படுத்தும். ஒரே நாடு, ஒரே மக்கள் என்று கூறும் அரசாங்கம் தமிழர்களைப் புறக்கணித்து, அவர்களின் கருத்துகளை புறக்கணித்து நடத்துகின்ற நாடகத்தின் உச்சக் கட்டமே இது.  என குறிப்பிடும்  அவர்,
தனது ஆய்வில்,
  • திவி நெகும என்ற சட்டமூலம் மீண்டும் நாடாளுமன்றப் படிக்கட்டுகளில் ஏறும் நிலையில் உள்ளது. 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களை பறித்துக் கொள்வதற்கு, மத்திய அரசுக்கு அதிகாரம் கொடுக்கிறது இந்தச் சட்டமூலம். இந்தச் சட்டமூலத்தை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது, அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது, இந்தச் சட்டமூலம் மாகாணங்களின் அதிகாரங்கள் தொடர்பானது என்பதால், எல்லா மாகாணசபைகளினதும் அங்கீகாரத்தை பெற்ற பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது அரசாங்கம் இந்தச் சட்டமூலத்துக்கு, கிழக்கு உள்ளிட்ட 8 மாகாணங்களினதும் ஒப்புதலைப் பெற்று விட்டது.
    ஆனால் வடக்கு மாகாணசபையில் ஒப்புதல் பெறப்படாத நிலையில், வடக்கு மாகாண ஆளுனரின் ஒப்புதல் கையெழுத்துடன் இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முனைகிறது. காரணம், வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இன்னமும் நடத்தப்படவில்லை. அரசாங்கம் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது. அதற்கு என்னென்னமோ காரணங்களையெல்லாம் கூறிவருகிறது. முன்னதாக, மீள்குடியேற்றத்தைக் காரணம் காட்டியது. இப்போது மீள்குடியேற்றம் முடிந்து விட்டதாகவும், அகதிகள் எவரும் நாட்டில் இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்து விட்டது.
    இந்த நிலையிலும் அரசாங்கம் தேர்தலை வடக்கில் நடத்த தயாராக இல்லை. அதற்கான உகந்த சூழல் இன்னும் வரவில்லை என்று கூறியிருந்தார் பசில் ராஜபக்ஸ. அதுமட்டுமன்றி எவருடைய அழுத்தங்களின் பேரிலும் வடக்கு மாகாணசபைத் தேர்லை நடத்தப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு செப்ரெம்பருக்குள் தான் தேர்தலை நடத்த முடியும் என்பது அரசின் பிடிவாதம். இந்தப் பிடிவாதத்துக்கு, மாகாணங்களின் அதிகாரங்களைப் பிடுங்கும் சட்டங்களை அதற்கிடையில் நிறைவேற்றிக் கொள்வதும் ஒரு காரணம்.
    திவி நெகும போன்று ஆளுனரின் ஒப்புதலுடன், வடக்கு மாகாணசபையில் பெறவேண்டிய ஒப்புதல்களைப் பெறுவதே அரசின் திட்டம். ஆனால், ஆளுனர் ஒப்புதலுடன் திவி நெகும சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வடக்கிலுள்ள மக்களின் உரிமைகளை மீறுகின்ற செயல் என்று, வழக்குத் தொடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து கொஞ்சமேனும் கவலைப்படவில்லை என்பதையே இந்தச் சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறப்பட்ட முறையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. சில சட்டங்கள் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டியவை, சில சட்டங்கள் ஆறுதலாக நிறைவேற்றப்பட வேண்டியவை. அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டமாக திவி நெகும சட்டத்தை வகைப்படுத்த முடியாது. ஆனாலும் அரசாங்கம் அதற்கு காட்டுகின்ற அவசரம், மாகாணங்களிடம் உள்ள காணி அதிகாரங்களைப் பறித்துக் கொள்வதில் உள்ள நாட்டத்தை வெளிப்படுத்துகிறது. அதைவிட, வடக்கு மக்களின் உரிமைகளை மதிக்காத போக்கையும் இது வெளிப்படுத்துகிறது.
    வடக்கில் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை இல்லை என்றோ, அதனால் மாகாண ஆளுனரின் ஒப்புதலுடன் எதையும் நிறைவேற்றலாம் என்றோ அரசாங்கம் நியாயம் சொல்லித் தப்பிக் கொள்ளப் பார்க்கிறது. வடக்கில் மாகாணசபை ஒன்று தெரிவு செய்யப்படாததற்கு தாமே காரணம் என்பதை மறைத்துக் கொண்டே இந்த நியாயத்தை அரசாங்கம் சொல்கிறது. வடக்கில் உள்ள தமிழர்களின் அரசியல் உரிமைகள் இப்படித்தான் காலம் காலமாகப் பறிக்கப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் நடத்த வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அப்படி நடத்தினால் தான் அது செல்லுபடியாகும்.
    1994 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்ட போது, யாழ்ப்பாணம் புலிகளின் கையில் இருந்தது. தீவுப் பகுதிகளில் மட்டும் அப்போது தேர்தலை நடத்தியது அரசாங்கம். அப்போது யாழ்ப்பாணத்தில் 7 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தபோதிலும், வெறும் இரண்டொரு ஆயிரம் பேர் தான், 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர். அங்கே யாழ்ப்பாண மக்கள் ஏழு இலட்சம் பேரின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டன. அதுபோலத் தான், வடக்கில் பலமுறை நடந்தது. இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. அப்போது புலிகள் இருந்தனர், அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதி இருந்தது. அதனால் அங்கு தேர்தலை நடத்த முடியவில்லை என்று காரணம் கூறி தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன. இப்போது புலிகள் இல்லை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் இல்லை. போர் முடிந்தே 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் வடக்கில் ஒரு மாகாணசபையை தெரிவு செய்ய முடியாத நிலையில் தான் தமிழர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
    இந்த மாகாணசபையின் மூலம் இருக்கின்ற தமது அதிகாரங்கள் பிடுங்கப்படுவதை தடுக்கின்ற, வழி இருந்தாலும் அதை அரசாங்கம் அடைத்து வைத்துள்ளது. அதாவது தமிழரின் உரிமைகளை முடக்கி அவர்கள் தமது உரிமைகள், அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாதபடி நசுக்கும் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபடவில்லை. இது போருக்குப் பின்னரும் தமிழர் மீதான அடக்குமுறைகள், உரிமை மறுப்புகள் ஓயவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. திவி நெகும சட்டத்தை அரசாங்கம் வடக்கு மாகாணசபையின் ஒப்புதலின்றி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுமேயானால், அது தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்ல என்பதையே வெளிப்படுத்தும். ஒரே நாடு, ஒரே மக்கள் என்று கூறும் அரசாங்கம் தமிழர்களைப் புறக்கணித்து, அவர்களின் கருத்துகளை புறக்கணித்து நடத்துகின்ற நாடகத்தின் உச்சக் கட்டமே இது.
    கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர், அங்கு ஆட்சியமைப்பதில் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டனர். தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக விருப்பங்கள் அங்கு புறக்கணிக்கப்பட்டன. அது ஒருவகையான அடக்குமுறையை வெளிப்படுத்தியது. அதுபோலவே வடக்கில் மாகாணசபையை தெரிவு செய்ய விடாமல், அதன் ஒப்புதலைப் பெறாமல் திவி நெகும சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் மேற்கொள்ளும் ஜனநாயக மறுப்பை, நீதிமன்றங்கள் அங்கீகரித்தாலும் கூட, அதை தமிழ்மக்கள் மனதளவில் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்வி.
    ஏனென்றால், போருக்குப் பிந்திய அவர்களின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக கருகி வருகின்றன. கருக்கப்பட்டு வருகின்றன. இது ஜனநாயகம் மீதான, ஜனநாயக வழிமுறைகளின் மீதான தமிழ்மக்களின் நம்பிக்கையை பாழ்படுத்தவே வழிவகுக்கும். தரப்படுத்தல், தனிச்சிங்களச்சட்டம் போன்று இதுவும் எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளுக்கும் இட்டுச் சென்றிடக் கூடும்.

No comments:

Post a Comment