Translate

Friday, 28 December 2012

வடக்கில் அடை மழை; குளங்கள் பெருக்கெடுப்பு: மக்களின் இயல்பு வாழ்வு பெருமளவு பாதிப்பு!


வடக்கில் பெய்துவரும் அடை மழை மற்றும் குளங்களின் பெருக்கெடுப்புக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில்அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன. இதனால் வீதிப்போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது.
 
வெள்ளத்தால் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களிலும் சுமார் 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று மாவட்டச் செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றிரவு வரை  1,732 குடும்பங்களைச் சேர்ந்த 6,592 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 563 குடும்பங்களைச் சேர்ந்த 2,189 பேர் பதினொரு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவப்பிரிவு அறிவித்துள்ளது.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிபரந்தன் வீதி, கிளிநொச்சி முழங்காவில் வீதி, வட்டக்கச்சி கிளிநொச்சி வீதி என்பவற்றில் வெள்ளம் மேவிப் பாய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
குளங்களுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் தாழ் நிலப் பகுதிகளில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கிளிநொச்சி இடர் முகாமைத்துவப் பிரிவு கேட்டுள்ளது.
 
முல்லைத்தீவு 
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 2 ஆயிரத்து 362 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் ஆயிரத்து 120 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 505 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 972 பேரும் மாந்தை கிழக்கில் 328 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.
 
துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 420 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 457  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டு குளம் நிரம்பி வழிவதுடன் பேராறும் பெருக்கெடுத்து ஓடுகிறது. "உடனடியாக மக்களின் பாதிப்புத் தொடர்பில் முழுமையாகக் கணக்கிட முடியாதுள்ளது. பிரதேச செயலக ரீதியாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நாளை காலையே (இன்று) முழு விவரங்களும் அறிய வரும்'' என்றார் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்.
 
ஒட்டுசுட்டானில் பண்டாரவன்னி, கருவேலன்கண்டல், கற்சிலைமடு, பேராறு, கனகரத்தினபுரம் வசந்தபுரம், முத்துஐயன்கட்டு, மூத்தவிநாயகர் முதலாம் கண்டம், இரண்டாம் கண்டம் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
 
முல்லைத்தீவுஒட்டுசுட்டான் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பரந்தன்புதுக்குடியிருப்பு வீதியை மூடி மூங்கிலாறு பெருக்கெடுத்து பாய்கிறது.  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
முல்லைத்தீவுக்கு சுற்றுலா வந்த 150 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேற முடியாமல் நேற்றிரவு உடையார்கட்டுப் பகுதியில் சிக்கிக்கொண்டிருந்தன. இதனால் சுற்றுலா வந்த பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
வவுனிக்குளத்துக்கான நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அதன் வால்கட்டு வெட்டிவிடவேண்டிய தேவை ஏற்படாலம் என்றும் குளம் உடைப்பதற்கான எந்த சாத்தியங்களும் இல்லை என்றும் நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
முன்னெச்சரிக்கையாக வால்கட்டுப் பகுதியில் இருக்கும் கிடாபிடிச்சகுளம் கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்களைப் பாதுகாப்பாக வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் துணுக்காய் பிரதேச செயலர் தெரிவித்தார்.
 
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் 4,229 குடும்பங்களைச் சேர்ந்த 17,339 பேர் பாதிக்கப்பட்டு பொது இடங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ள நிலைமை தொடர்பாக அவசர கூட்டம் ஒன்று மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மெல் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் மக்களுக்கான அவரச உதவிகள், இடர்காலப்பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.  கட்டுக்கரை குளத்தின் நீர் முகாமைத்துவம் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மன்னாருக்கான வெளிப்போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. மன்னார்மதவாச்சி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பாலியாறு பெருக்கெடுத்துள்ளதால் ஏ32 வீதியும் போக்குவரத்து செய்யமுடியாத அளவுக்கு வெள்ளம் பாய்ந்து வருகிறது.
 
இடம்பெயர்ந்த மக்கள் மாவட்டத்தின் 17 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.
 
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை வெள்ளம் காரணமாக 4650 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
வவுனியா தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவில் 8 முகாம்களும் சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் ஒரு முகாமும் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் 16 முகாம்களிலுமாக 25 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
வவுனியாக்குளம், அழகல்லகுளம், கனகராயன்குளம் என்பன உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளன. வவுனியா மாவட்டத்தில் இதுவரையும் 53 சிறிய குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. கிராமங்களுக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
குளங்களின் நீர் மட்டம்
 
நேற்றிரவு கிடைத்த தகவல்களின் படி சில குளங்களின் நீர்மட்டமும் அவற்றில் இருந்து வெளியேறும் நீர் மட்டமும் வருமாறு
 
கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குள நீர்மட்டம் 26 அடி 2 அடி வான் பாய்கிறது. கல்மடுக்குளம் 26 அடி 2 அடி வான்பாய்கிறது. பிரமந்தனாறுகுளம் 13 அடி 6 அங்குலம்  ஒரு அடி 6 அங்குலம் வான்பாய்கிறது.
 
புதுமுறிப்புக்குளம் 17 அடி 8 அங்குலம்  ஒரு அடி 2 அங்குலம் வான்பாய்கிறது. கனகாம்பிகைக்குளம் 11 அடி 3 அங்குலம் ஒரு அடி 3 அங்குலம் வான்பாய்கிறது. வன்னேரிக்குளம் 10 அடி 3 அங்குலம் 9 அங்குலம் வான்பாய்கிறது.
 
வவுனிக்குளத்தின் நீர் மட்டம் 27 அடி 2 அடி வான் பாய்கிறது. ரென்னியன்குளம் 11 அடி 5 அங்குலம் வான் பாய்கிறது. ஐயங்கன்குளம் 13 அடி 6 அங்குலம் வான்பாய்கிறது. அம்பலப்பெருமாள் குளம் 10 அடி 5 அங்குலம் வான் பாய்கிறது. கோட்டைகட்டிய குளம் 9 அடி 7 அங்குலம் வான் பாய்கிறது.
 
மல்லாவிக்குளம் 11அடி 5 அங்குலம் வான்பாய்கிறது. மருதங்குளம் 11 அடி  8 அங்குலம் வான்பாய்கிறது. கல்விளான்குளம் 11 அடி 9 அங்குலம் 4 அங்குலம் வான்பாய்கிறது. கொல்லவிளான் குளம் 11 அடி 6 அங்குலம்  6 அங்குலம் வான்பாய்கிறது.
 
பனங்காமம்குளம் 9 அடி  5 அங்குலம் வான்பாய்கிறது. பழைய முறிகண்டிக்குளம் 9 அடி 6 அங்குலம் 6 அங்குலம் வான்பாய்கிறது. தேறாங்கண்டல் குளம் 11 அடி 6 அங்குலம் 4 அங்குலம் வான்பாய்கிறது.

No comments:

Post a Comment