Translate

Thursday, 19 May 2011

இன வரலாற்றில் மே 18 கறுப்பு நாள் – சீமான் அறிக்கை

ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கை க்கு ஆதரவாகவும் இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 புதன்கிழமை அன்று வேலூர் கோட்டை முன்பு இன எழுச்சி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை.

மே 18 , எம் இன வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். எம் மக்கள் கொத்துக்கொத்தாய் சிங்கள வெறி ராணுவத்தால் கொன்றொழிக்கப்பட்ட நாள். தமிழ் ரத்தம் ஈழமெங்கும் வழிந்தோடி இந்தியக் கடலில் கலந்து சிவந்த நாள். அரை நூற்றாண்டு கால வெஞ்சமர் கணட தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் சிங்கள இனவெறியர்களால் ஒடுக்கப்பட்டநாள். இன அழிப்பின் உச்ச கட்டக் கொடூரமாய் முள்ளிவாய்க்காலில் தடைசெய்யப்பட்ட குண்டுவீச்சால்  குற்றுயிரும் குலையுயிருமாக துடித்த எம்மக்கள் பல்லாயிரம் பேரை மண்ணோடு மண்ணாய் ஒரே நாளில் புல்டோசர் கொண்டு அழித்து முடித்தநாள்.அன்று, எம் மக்களின் மரண ஓலம் உலகின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை.
எம் இனம் மொத்தமாய் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட போதும் மவுனமாய் வேடிக்கை பார்த்தது உலகம். மனித உரிமை, சர்வதேச நெறிமுறை என்று அனைத்தையும் இனத்தோடு சேர்த்துப் புதைத்து சிரித்துக் கூத்தாடியது சிங்கள இனவெறி அரசு.இருந்தும், எஞ்சிய எம் இனம் வீழ்ந்து விட வில்லை. துயரத்தில் ஓய்ந்து ஒடுங்கி விடவில்லை. எமக்கு  இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு ஓயாத போராட்ட்த்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுத்தனர். நீண்ட நெடிய போராட்ட்த்தின் விளைவாக  தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள அரசு குற்றங்கள் புரிந்துள்ளது என ஐ.நா.அமைத்த நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வரலாறு இதுவரை  கண்டிராத இந்த இனக்கொலைக்கு  இது உரிய தீர்வு அல்ல என்றாலும் எஞ்சியிருக்கும் ஒரு நம்பிக்கை இந்த அறிக்கை.
இதையும் ஏற்கமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது இலங்கை. இந்த அறிக்கை பற்றி பல நாடுகள் மௌனத்தை கடைப்பிடிக்கின்றன. அறிக்கை வெறும் அறிக்கையாகவே போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. இன்னும் எம் மக்களைக் கொன்ற கொலைகாரர்கள் அச்சமின்றி உற்சாகமாய் இருக்கிறர்கள். ரஷ்யாவும்,சீனாவும்,இந்தியாவும் இலங்கையைக் காப்பாற்றத் தொடர்ந்து முயற்சிக்கின்றன. தமிழகத் தேர்தல் முடிவு என்ற பரபரப்பில் நாம் இருந்தபோது, திட்டமிட்டே இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை செல்கிறார். அடுத்த நாள் இந்தியா வந்து இரண்டுநாள் அந்த அறிக்கை பற்றி ஆலோசனை நடத்துகிறார் சிங்கள அரசின் வெளியுறவு அமைச்சர். இந்திய வெளியுறவு அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே, இந்தியா எங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளது, இன்னும் செய்யும் என்று நம்புகிறோம் என்று பேட்டியளிக்கிறார். எம் இனத்திற்கு எதிராக இது வரை பல்வேறு துரோகங்களைச் செய்த இந்தியா இன்னும் ஓய்ந்து விடவில்லை. இலங்கைக்கு ஆதரவாய் தொடர்ந்து செயலாற்றுகிறது. ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து எவ்வாறு இலங்கையைக் காப்பாற்றுவது? இன்னும் மீதம் உள்ள இனத்தை எவ்வாறு ஒடுக்குவது?என்பது குறித்து ஆலோசனை நடத்த தமிழன் தேர்தல் முடிவுகளில் மூழ்கியிருக்கும் நேரத்தை தேர்ந்தெடுத்திருப்பதிலிருந்தே இந்தியாவின் துரோகம் தொடர்வதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலையில் நாம் வேலூரில் கூடவிருக்கிறோம்.,
நம் இனத்திற்கு எதிராய் இழைக்கப்ப்ட்ட கொடும் குற்றத்திற்கு தற்காலிக பரிகாரமான ஐ.நா.நிபுணர் குழுவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு ஆதரவாக, வெள்ளையனை எதிர்த்து வீரக்களம் கண்ட வேலூர் மண்ணில் கூட இருக்கிறோம்.
வேலூர் மண் வீரம் செறிந்த மண். திப்பு சுல்தானின் வாரிசுகள் ஆங்கிலக் கும்பினியர்களை எதிர்த்து போரிட்ட மண். கண்டிப்பகுதியை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன்  விக்கிரமராஜசிங்கனை போரில் நயவஞ்சகமாய்  தோற்கடித்து அவரைக் கடைசிக்காலம் வரை ஆங்கிலேயர்கள் சிறை வைத்திருந்த  மண். அந்த வீரம் செறிந்த மண்ணில் நாம் நம் இனத்தின் நீதிக்காக உலகின் மனசாட்சியை உலுக்க அணி திரள்வோம்.  வீழ்ந்துவிடாது எம் வீரம், மண்டியிடாது எம் மானம் என்ற உணர்வோடு, நாம் எழுப்புகிற உரிமைக்குரல் உலகின் செவிப்பறைகளில் ஓங்கி ஒலிக்கட்டும். வாருங்கள், சிங்கள இனவெறியர்களை உலக நீதிமன்றத்தில் ஏற்ற ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேலூரில் கூடுவோம்

No comments:

Post a Comment