Translate

Thursday 19 May 2011

குருதியில் குளித்த தேசம்

குருதியில் குளித்த தேசம்

மே 18....!!!

எங்கள் தேசம் எரிந்து போனது..
எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள்..
எங்கள் கனவுகள் கலைந்து போயின...
எங்கும் சாவீட்டு சத்தமே காதில் விழுந்தது.

எத்தனை நாட்கள் வலி சுமந்தோம்!
எத்தனை நாட்கள் உயிர் கருகினோம்!
எத்தனை நாட்கள் பசியில் துடித்தோம்!
எத்தனை நாட்கள் கதறி அழுதோம்!

துண்டுதுண்டாய் சிதறிப்போனது சின்னப்பிஞ்சு
கண்முன்னே பிள்ளையின் உயிர் பிரிய கட்டியணைக்க கையில்லா அம்மா
குண்டு துளைத்து குடல் கிழிந்து தொங்கி குற்றுயிராய் குழறி அழுதாலும் 
கண்கள் பிதுங்கி விழுந்து மரண ஓலம் எழுப்பினாலும் 
நின்று துயர் தீர்க்க நேரம் இன்றி உயிரை மட்டும் கையில் கொண்டு ஓடினோமே!!!

முலையில் பால் வற்றி குருதி வடியும்
அதையும் பசியால் பிஞ்சு குடிக்க வலியால் துடித்த தாய்!!
கஞ்சிக்கும் வெளியில் கைநீட்ட வழியின்றி பதுங்கு குழியில் சுருண்டுகிடந்த உறவுகள்!!
பாதையோரம் உயிருக்குகாய் ஓலமிடும் உறவு
நின்று அவனை தூக்க முன் வந்து விழும் குண்டு
கண்முன்னே அவன் காலும் தலையும் வேறுவேறாய் !!!!

குண்டு மழைச் சத்தம் காதடைக்க குருதி சகதியில் உயிரைக்கையில் பிடித்து ஓடினோம்!
கொத்துக்கொத்தாய் உறவுகள் ரத்த வெள்ளத்தில் மிதந்து வர விலத்திவிட்டு ஓடினோம்!
எங்கள் மண்ணில் எங்கேனும் ஒருஇடத்தில் பாதுகாப்பு தேடி ஓடினோம்!
ஓடிக்கொண்டிருந்த போது ஒவ்வொன்றாய் முறிந்து விழுந்தன கால்கள்...
பசியால் வறண்ட கண்கள் பார்வை இழந்து போயின...
குண்டுச்சன்னங்கள் உயிர் துளைத்து பிணமாய் மண்ணில் சுருண்டு விழுந்தோம்.

பிணக்குவியலுக்குள்ளும் குருதிச் சகதியிலும் நின்று கதறி அழுதோம்!
கதறி அழுது அழுது கண்ணில் நீர் வற்றி குரல் வறண்டு குற்றுயிரானோம்!
எங்களுக்காகவும் குரல் கொடுங்களேன் என்று கெஞ்சிக் கதறினோம்!
எவனும் வரவேயில்லை! எங்களின் அவலக்குரலும் யாருக்கும் கேக்கவே இல்லை!
எங்களுக்காகவேனும் பேசுங்களேன் என்று கதறி அழுதோமே!
உயிர் வலி தாழாது ஒப்பாரி வைத்து குழறினோமே!
நடை பிணங்களாய் நாதியற்று நின்று நா குழற குரல் கொடுத்தோமே!
அப்போது எங்கள் அவலக்குரல் யாருக்கும் கேக்கவேயில்லையே...!
அப்போது எங்கள் உயிர்வலி யாருக்கும் புரியவேயில்லையே...!


நாங்கள் செய்த குற்றம் என்ன? பிழைதான் என்ன?
சொந்த மண்ணில் நிமிர்ந்து நின்றது தவறா?
விடுதலை பற்றி பேசியது தவறா?
அதற்காய் உயிர்விலை கொடுத்து வேள்வி செய்தது தவறா?
உரிமைகளை உணர்வோடு கேட்டது தவறா?
எங்கள் முற்றத்தில் தானே பூமரம் நட்டு வைத்தோம்
எங்களின் வீட்டு வாசலில் தானே கோலம் போட்டொம்
எங்களின் மண்ணில் தானே கிட்டிப்புள்ளு விளையாடினோம்
எங்களின் மண்ணில் தானே வயல் விதைத்தோம்.

எட்டி வைக்கும் ஒவ்வொரு அடியின் கீழும் உறவுகளின் உயிர்த்தடம்
காற்றோடு கலந்து வரும் கந்தக நெடியில் கருவேங்கைகளின் கனவுகள்
இடித்து தூளாக்கிய கற்குவியல்களாய் கல்லறைக்கண்மணிகளின் தியாகங்கள்
தமிழனாய் பிறந்தது குற்றமா? 
தன்மானத்தோடு வாழ நினைத்தது குற்றமா?
தலை நிமிர்ந்து நின்றது குற்றமா?இல்லை 
தமிழீழம் கேட்டதுதான் குற்றமா?
எது குற்றம்? 

அப்புவும் ஆச்சியும் பூட்டனும் பூட்டியும் பொத்திப்பொத்தி வளர்த்த தேசம்
என் பேரன் ஏர் பூட்டி உழவு செய்து பச்சை வயல் கொண்ட தேசம்
நெத்தலியும் சூடையும் கரவலையும் ஏலேலோ பாட்டும் பாடிய நெய்தல் தேசம்

ஒடியற்கூழும் தனிப்பனைக்கள்ளும் 
புட்டும் நண்டுக்கறியும்
வீச்சுவலை மீன்பொரியலும்
கரைவலை வாடிச்சொதியும்
பாலைப்பழமும் பனங்கிழங்கும்
நாவற்பழமும் பனம் பழமும்
எங்கள் தேசமும் எம் இனமும் என்றுதானே இருந்தோம்
வந்தோரையும் வாழவைக்கும் பூமியாகத்தானே வாழ்ந்தோம்

துயரம் என்றால் தோளும் 
ஆபத்து என்றால் உயிரையும் கொடுக்கும் இனம் தானே தமிழினம்
எவனுக்கும் கேடு செய்யும் இனமல்லவே நாங்கள்
பகை கொண்டு வந்தவனை மட்டும் தானே படை எடுத்து விரட்டினோம்
எங்களின் தேசத்தை விட்டு எவனின் மண்ணிலும் ஒருபிடி கூட எடுக்கவில்லையே!

என்ன பிழை செய்தோம் ?எங்களை ஏன் அழித்தீர்கள்?

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆணிவேர்விட்டு வாழ்ந்த பூமி
ஆலமரங்களாய் விழுது விட்ட அன்னை பூமி
பனைமரங்களாய் நிமிர்ந்து நின்ற தன்மானம்
முப்படை கொண்ட கரிகாலன் வேங்கைகள்
எவனையும் கையேந்தாத பொருண்மிய வளர்ச்சி
சிங்கபூரே மூக்கில் விரலை வைக்கும் நீதியும் நிர்வாகமும்
பிச்சைகாரனே இல்லாத தேசம்
காந்தி கண்ட கனவு தேசம்
நேதாஜியும் சுபாஸ் சந்திரபோசும் ஆசைப்பட்ட சுதந்திர தேசம்
பாரதி கண்ட புதுமைப்பெண்கள்
இப்படித்தானே தமிழீழம் இருந்தது

இதுவா உங்கள் கண்ணை குத்தியது?
என்ன பிழை செய்தோம்? ஏன் எங்களை அழித்தீர்கள்?

சிங்களவரோடு தமிழன் சேர்ந்துதான் வாழ்ந்தான்
அப்புகாமி வீட்டுக்கு கறுத்தகொழும்பானும்
கந்தப்பு வீட்டுக்கு ஈரப்பிலாக்காயும் கைமாறிய காலம் ஒரு காலம்
"பிற்றக்கொட்டுவவில்" இருந்து "யாப்பா பட்டுண"வுக்கு யாழ்தேவி போனது ஒரு காலம்
பொடி மெனிக்காவை பொன்னம்பலத்தார் கலியாணம் முடித்தது ஒரு காலம்
மடுத்திருவிழாவிலும் மன்னாரிலும் சில்வாவும் சின்னப்புவும் ஒன்றாய் உறங்கியது ஒரு காலம்

எப்போது தமிழனின் தலையில் இடி விழுந்தது?
எப்போது தமிழனின் அடிவயிற்றில் அடி விழுந்தது?

தமிழச்சியின் நெஞ்சு திறந்து சிறிலங்கா என்று சிங்களவன் தான் சூடு வைத்தான்!
கொதிக்கும் தாருக்குள் உயிரோடு தமிழனை போட்டு சிங்களவன் தான் எரித்தான்!
கட்டிய துணியோடு தமிழனை கப்பல் ஏத்தி சிங்களவன் தான் கலைத்தான்!
தமிழனின் உடமைகளையும் உரிமைகளையும் சிங்களவன் தான் தீயிட்டு கொழுத்தினான்!
தமிழச்சியின் கற்பை காமவெறிகொண்டு சிங்களவன் தான் சூறையாடியான்!
அவளை உயிரோடு துண்டுதுண்டாய் வெட்டி சிங்களவன் தான் சுடுகாட்டில் போட்டான்!
சின்னப்பிஞ்சு என்று பார்க்காமல் அதையும் சிதைத்து சிங்களவன் தான் சினம் காட்டினான்!
பள்ளிக்கூடம் செல்லும் சின்னப்பிள்ளையையும் காம பசிக்கு சிங்களவன் தான் கொன்று தின்றான்!
குஞ்சும் குருமனுமாய் கொத்துக்கொத்தாய் சிங்களவன் தான் கொன்றோழித்தான்!
ஆசுப்பத்திரிக்கும் ஆலயங்களுக்கும் குண்டு போட்டு சிங்களவன் தான் கொலைவெறியாடினான்!
இனவெறிப்போரை ஈழமண்ணின் மேல் சிங்களவன் தான் தொடுத்தான்!

எல்லாவற்றையும் எத்தனை நாட்களாய் தமிழனால் பொறுத்துக்கொள்ள முடியும்?

ஏன் என்று கேட்டோம்? எட்டி மிதித்தார்கள்?
மீண்டும் எதற்கு என்று உரத்து கேட்டோம்! ஏறி மிதித்தார்கள்!

அதனால்தான் வேலுபிள்ளையின் மகன் வேலும் வாளும் தூக்கினான்
தூக்கிய வேலும் வாளும் எங்களின் உயிரைக்காப்பதற்கே
சிங்களவனின் உயிரை குடிப்பதற்கு அல்ல!!
எங்களின் வீட்டு வேலி பிரித்து முற்றத்தில் வந்தவனுக்குத்தானே அடித்தோம்
எங்கள் வயல் வெளி ஏறி மிதித்தவனைத்தானே அடித்தோம்
எங்கள் வானம் ஏறி வந்து குண்டெறிந்தவனைத்தானே குறி வைத்து அடித்தோம்
எங்கள் கடல் அன்னை மடியில் கைவைத்தவனைத்தானே வெடி வைத்து முடித்தோம்.

என்ன பிழை செய்தோம் நாங்கள்?எங்களை ஏன் அழித்தீர்கள்?

முள்ளிவாய்க்கால் வரை தமிழனை விரட்டி அடித்து முடித்து விட்ட காரணம் என்ன?
சிங்களவனை கேட்கவில்லை!!
நீதியை காக்கும் சர்வதேச சமூகமே உங்களைத்தான் .......பதில் சொல்?
என்ன பிழை செய்தோம்?ஏன் அழித்தீர்கள்?

முள்ளிவாய்க்காலில் நின்று வானம் அதிர குழறினோமே
ஐ.நாவின் காதுகளுக்கு விழவேயில்லையா?
அப்போது பான் கி மூனுக்கு என்ன காதில் கோளாறா?
ஆண்டுகள் ஆனாலும் நீதி சாகாது என்று கூறலாம்
அநியாயமாய் கொன்றொழித்த உறவுகள் திரும்பிவருவாரோ?
அறிக்கையும் ஆய்வுகளும் கண்டனங்களும் கண்துடைப்புகள் தானோ?
வெறும் வாய்பேச்சும் வீண் கதைகளும் பொய் வேசம் தானோ?

கொன்றொழித்து எரியூட்டி சாம்பலையும் இருந்த தடத்தையும் இல்லாதொழித்த பின்
எதை வைத்து குற்றவாளி என்பீர்?
போரே நடக்கவில்லை என்பான்!
குண்டே போடவில்லை என்பான்!
யாரையும் கொல்லவில்லை என்பான்!
சிறையில் யாரும் இல்லை என்பான்!
என்னை யாரும் புடுங்கேலாது என்பான்!
மகிந்தனை மயிர் நரைத்து கூன் விழுந்த பின்போ கூண்டில் ஏற்றுவீர்?

சிங்களவன் கொன்றது ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம் உறவுகளின் உயிர்கள்
அவன் இப்போதும் கொல்ல நினைப்பது
பலகோடி தமிழனின் தமிழீழ தாகத்தை......

சொந்த புத்தி இல்லாத வெறிநாய்கள் சிங்களவனின் குள்ளநரி கூட்டத்தோடு 
சொந்த மன்ணில் வாழ்ந்த தமிழனை அழித்துவிட்டார்கள்
சோனியா என்ற வெறிநாய் ஆயிரமாயிரம் தமிழச்சிகளின் தாலி அறுத்து -அவள்
கட்டிய வெள்ளைச்சேலையை தந்துவிட்டாள்.
பாழ்படுவாள் முந்தானையில் இப்போதும் ஒழிந்திருக்கும் சூடு சுரணையில்லாத கோடாரிக்காம்புகள்...!!

என்ன பிழை செய்தோம் நாங்கள்?ஏன் எங்களை அழித்தீர்கள்??

முப்பது ஆண்டுகளாய் வலி சுமக்கும் தேசம்
விடுதலையே மூச்சாக வாழும் மக்கள்
காற்றோடு கலந்தாலும் கடலோடு கரைந்தாலும் 
மண்ணோடு புதைந்தாலும் அடங்காது எங்கள் தாகம்
விழுதுகளை வெட்டி எறிந்தாலும் வேரோடு புடுங்கி எறிந்தாலும் 
மீண்டும் துளிர் விடும் விடுதலை வேட்கை
காலத்தால் அழியாத வலி வரினும் வலிமை கொண்டெழும் தன்மான உணர்வு
இழப்புகளை கண்டு இடிந்து போகாத இதயங்கள்
எதுவரினும் வீழ்ந்து கிடக்காத தமிழினம்


உலகமே உன் நாட்குறிப்பேட்டில் குறித்து வை
முள்ளிவாய்கால் என்பது குருதியில் தீக்குளித்த தேசத்தின் அடையாளம்
அது முடிவல்ல  தமிழனின் தன்மானப்போரின் நான்காம் அத்தியாயத்தின் ஆரம்பம்

முள்ளிவாய்க்காலில் கண்ணீரோடு விதைத்தோம்....!!!!
தமிழீழத்தில் கெளரவத்தோடு அறுவடை செய்வோம்....!!!

தமிழ்ப்பொடியன்
18.05.2011

No comments:

Post a Comment