[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 11:03.32 AM GMT ]
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இலங்கையை விட இந்தியாவுக்கே அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
சிங்கள வாராந்தப் பத்திரிகையான சிலுமிண பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அனைவரும் இலங்கைப் பிரச்சினை குறித்து உணர்வுபூர்வமான கருத்துக்களை வெளியிட்டு தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவே முனைகின்றனர்.
கடந்த சட்டசபைத் தோ்தலிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் கருத்துக்களை நாம் அந்த வகையில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.ஆயினும் அவர்களால் அதற்கு அப்பால் எதுவும் செய்ய முடியாது.
நாம் தனியானதோர் நாடு. நமது பிரச்சினைகளை நாம் தான் தீர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் எவர் என்ன சொன்னாலும் நம் நாட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நாம் தான் உருவாக்க வேண்டும்.
இதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வகையில் ஜெயலலிதா தோ்தலுக்கு முன் என்ன சொல்லியிருந்தாலும் இனிவரும் காலங்களில் விடுதலைப் புலி ஆதரவு சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருப்பதை மறந்து விடக்கூடாது.
அதே போன்று இந்திய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா முதலமைச்சரானது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்கும் விடயமாக இருக்கலாம். ஆனால் நம்நாட்டிற்கு அவரால் எந்தவித அழுத்தத்தையும் பிரயோகிக்க முடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment