இதயச்சந்திரன்
உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் மாநாடொன்று பிரான்ஸிலுள்ள டியூவிலில் (DEAUVILLE) நடைபெறுகின்றது.
இந்த ஜி-8 (G-8) கூட்டில், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா, போன்ற நாடுகள் இருக்கின்றன.
இதில் கலந்து கொள்ளும் நாடுகளின் பூகோள நலன்கள், பிராந்திய அளவில் மாறுபட்டுக் காணப்பட்டாலும், ஜப்பானைத் தவிர்த்து, ஏனைய நாடுகள் மேற்குலக வலயத்துள் இருப்பவையாகும். அமெரிக்க தேசமானது, இம் மாநாட்டில் முன் வைக்கும் கோரிக்கைகள், தனது உலக ஆதிக்கத்தை மீளவும் கட்டியெழுப்பும் வகையில், ஐரோப்பிய நாடுகளின் உதவியை எதிர்ப்பார்த்து இருப்பது போலுள்ளது.
இம்மாநாட்டின் உள்ளார்ந்த நிகழ்ச்சி நிரலில், அமெரிக்காவின் நகர்வுகள் ஆக்கிரமித்து இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தினாலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து இங்கு பேசப்படுவது தவிர்க்க முடியாததாக அமைந்து விடும். திறைசேரி வற்றிப் போய், பெரும் கடன் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள பல ஐரோப்பிய நாடுகளின் வரிசையில், கிரேக்க தேசம் முதலிடம் வகிக்கின்றது. அடுத்த கட்டக் கடன் தொகையை வழங்க முடியாதென, அனைத்துலக நாணயச் சபை (IMF) கைவிரிக்கும் நிலையில், ஐரோப்பிய வங்கி உதவி செய்ய முன்வருமா? என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. உள்நாட்டுக் கடன், மொத்த உள்ளூர் உற்பத்தியில் (GDP) 10 சதவீதத்திற்கும் அதிகமாகினால், அந்நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைகிறது என்பதனை அப் புள்ளிவிபரம் சுட்டிக் காட்டுவதாக பொருளியியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு, அனைத்துலக நாணய நிதியமானது (IMF) உள்நாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையின் அடிப்படையிலேயே கடனை வழங்குகிறது. மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், மானியங்களை நிறுத்த வேண்டும், வங்கியூடாக வழங்கப்படும் கடனுதவிகளைக் கட்டுப்படுத்த வேண்டும், வரிகளை உயர்த்த வேண்டும், வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்து செல்லாமல் தடுக்க வேண்டும் என்பது போன்ற பல முன் நிபந்தனைகளை அந் நிறுவனம் விதிக்கும்.
2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனுதவியாக, இலங்கைக்கு வழங்கும் போது, இத்தகைய நிபந்தனைகளை அந்த நிதியம் முன் வைத்திருந்தது. பெறப்பட்ட நிதியினை, மீளச் செலுத்தும் போது, வட்டியோடு செலுத்த வேண்டும். இப் பெரும்சுமையை ஈடு செய்யவே, உள்நாட்டு செலவீனங்களைக் குறைத்து, வரிகளை அதிகரிக்கின்றது அரசு.
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் தம்மை இணைத்து, குறுகியநேர சந்தோஷங்களில், யதார்த்த நிலைமையை மறந்து வாழும் பெரும்பான்மையின மக்களுக்கு இது புரிவதில்லை.
ஆனாலும், ஐரோப்பாவைப் பொறுத்த வரை, பொருளாதார நிமிர்விற்காக அந்நாட்டு அரசுடன் மேற்கொள்ளும் கடும்போக்குகளுக்கு எதிராக, மக்கள் கிளர்ந்தெழும் நிலைமையைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.
அதேவேளை, ஜீ-8 மாநாட்டில், ஐரோப்பிய வலய கடன் நெருக்கடிகள் மற்றும் அனைத் துலக நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி யார்? என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
தனது 50ஆவது ஆண்டினைக் கடந்த 25 ஆம் திகதியன்று பிரான்ஸில் கொண்டாடிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (ORGANIZATION FOR ECONOMIC CO-OPERATION & DEVELOPMENT) ,கடன் நெருக்கடிகள் தொடர்பாக வெளியிட்ட செய்தி அதிர்ச்சியளிக்கக் கூடியது. அதாவது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளானது, உற்பத்தி வீழ்ச்சியும் வேலையற்றோர் அதிகரிப்பும் இணைந்த பணவீக்கத்தை (STAGFLATION) எதிர்கொள்வதாக, அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஏன்ஜெல் குரியா (ANGEL GURRIA) குறிப்பிட்டிருந்தார்.
அடுத்ததாக, 187 உறுப்பு நாடுகளைக் கொண்ட அனைத்துலக நிதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளராக, எவரை நியமிக்க வேண்டு மென்பதைத் தீர்மானிக்கும் உரையாடலும் இம் மாநாட்டில் (ஜி-8) நிகழ்கிறது. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நியூயோர்க் விடுதியொன்றில் கைது செய்யப்பட்ட அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ரோஸ் கான் தனது பதவியிலிருந்து கடந்த 18 ஆம் திகதி இராஜினாமாச் செய்த பின்னர், அப் பதவிக்கான போட்டியில் குதிக்க பிரான்ஸின் நிதியமைச்சர் கிறிஸ்டீன் லெகார்ட் (CHRISTINE LAGARDE) முன் வந்துள்ளார். அவரை ஆதரிக்கும் தீர்மானமொன்று ஜீ-8 மாநாட்டில் எடுக்கப்படலாம். ஆயினும், பிரிக்ஸ் (BRICS) எனப்படும் கூட்டமைப்பிலுள்ள பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளைச் சார்ந்த அனைத்துலக நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் (DIRECTORS) கூட்டாக விடுத்த அறிக்கையில், ஐ.எம்.எப். இன் தலைமைக்கான தெரிவானது, மாறி வரும் உலகப் பொருளாதாரத்தின் யதார்த்த நிலைமையைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் அமைய வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, திரும்பத் திரும்ப மேற்கு ஐரோப்பிய நாட்டவரையே, தலைவராகத் தெரிவு செய்யாமல், வளர்ந்து வரும் நாடுகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென்பதையே இக் கூட்டறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதேவேளை, வளர்ந்து வரும் பொருளாதார மைய நாடுகளும், விரிவடையும் சர்வதேச சந்தைகளில் காத்திரமான பங்களிப்பினை வழங்கும் நாடுகளும், சர்வதேச நிதி நிறுவனங்களில் முக்கிய பங்கினை வகிக்க வேண்டுமெனவும் பலர் எதிர்பார்க்கின்றனர். சர்வதேசத்தின் பொதுநாணயமாக அமெரிக்க டொலரே இருக்கவேண்டுமென விரும்பும் அமெரிக்கா, புதிதாக உருவாகிவரும் எதிர்ப்பணியின் கைகளில், உலக நிதி நிறுவனங்கள் சென்றுவிடக்கூடாதென்பதில் அவதானமாக இருக்கிறது.
வளர்ந்துவரும் நாடுகளைத் தவிர்த்து, ஏனைய பெரும்பான்மையான நாடுகளைத் தனது பொருளாதாரபிடிக்குள் வைத்திருப்பதற்கு உலக வங்கியும், அனைத்துலகநாணயநிதியமும் மிக முக்கியமான நிதிநிறுவனங்கள் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும்.
பெரும்பாலான வளர்ச்சியுறும் நாடுகள், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி வர்த்தகத்தில் தங்கியிருக்கும் அதேவேளை, அமெரிக்காவின் அரச மற்றும் கோப்பரேட் (CORPORATE BOND) முறிகளை வாங்குவதன் ஊடாக, தமது நாணயங்களின் பெறுமதியை ஸ்திரமாக வைத்துக் கொள்கின்றன என் பதனை அமெரிக்கா கவலையோடு நோக்குகின்றது. மறுதலையாக, முறிகளை விற்பனை செய்வதால் பெறப்படும் நிதியினைக் கொண்டு, இறக்குமதிக்கான செலவினங்களை அமெரிக்கா பூர்த்தி செய்கின்றது. ஆகவே, இத்தகைய பரிமாற்றங்கள், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை தணிவடையச் செய்தாலும், அவை அந் நாட்டின் இறக்குமதியை ஊக்குவிக்கும் பரிமாணத்தையும் அதேவேளை, உள்ளூர் உற்பத்தியையும் தடுத்து வருகிறது.
ஆகவே, வர்த்தகப் பற்றாக்குறையால் (TRADE DEFICIT) தடுமாறிய நிலையிலுள்ள அமெரிக்க பொருளாதாரமானது, மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கி, அதற்கு உதவி புரியும் நிலையில் தற்போது இல்லை என்பதை ஜீ-8 மாநாட்டில், அமெ ரிக்க அதிபர் வெளிப்படுத்தும் செய்தி உணர்த்துகிறது.
ஜீ-8 கூட்டமைப்பிலுள்ள தமது சக நண்பர்களுக்கு, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனும், திறைசேரிச் செயலாளர் திமோதி கீத்-னரும் (TIMOTHY GEITHNER) எழுதிய கடிதத்தில், எகிப்து நாட்டின் கடன் தொகையைப் பேரம் பேசி மாற்றிக் கொள்ளுங்கள் (DEBT SWAP) என்று வேண்டுகோள் விடுத்துள் ளனர். ஆனாலும், அமெரிக்க அதிபரின் வேண்டு கோளினைச் செவிமடுத்து, பிரிக்ஸ் (BRICS) இன் பிடிக்குள் மத்திய கிழக்கு நாடுகள் சென்றுவிடாமல் தடுப்பதா? அல்லது ஐரோப் பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருண்மிய அழிவு நிலையைத் தடுப்பதா? என்ற தர்மசங்கடமான நிலைக்குள் ஜீ-8 கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment