''8,000 போஸ்னிய முஸ்லீம்களை படுகொலை செய்த செர்பிய படைத் தளபதி ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டிருப்பதைப் போல எம் தமிழினத்தைக் கொன்று குவித்த சிங்கள ராஜபக்ஷே விரைவில் கைது செய்யப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்'' – நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை
கம்யூனிச நாடாக இருந்த யுகோஸ்லாவியாவில் இருந்து இன்று தனி நாடாகத் திகழும் போஸ்னியாவில் 1995ஆம் ஆண்டு ஜூலையில் இந்த இனப் படுகொலை நடந்தது. செர்பிய மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து போராடிய போஸ்னிய மக்களை, செர்பிய இனவெறி இராணுவம் மிருகவெறி கொண்டு அடிக்கி ஒடுக்கி வந்த போது, பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட போஸ்னிய முஸ்லீம்கள் 40 ஆயிரம் பேர் சிறிபிரீனிசா எனும் இடத்தில் ஐ.நா. அமைத்த பாதுகாப்புப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அந்த இடத்தை ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 400 வீரர்கள் பாதுகாத்து வந்தனர்.
இந்த முகாமைச் சுற்றி வளைத்த செர்பிய படைத் தளபதி ராட்கோ மிலாடிச் தலைமையிலான செர்பிய படைகள், முகாமில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் வெளியேற்றிவிட்டு, ஆண்களையும், சிறுவர்களையும், பல நூற்றுக்கணக்கான பெண்களையும் கொன்றொழித்தது. மொத்தம் 8,373 முஸ்லீம் ஆண்களும், சிறுவர்களும், நூற்றுக்கணக்கில் பெண்களும், குழந்தைகளும் ஈவிரக்கமின்றி ராட்கோ மிலாடிச் படைகளால் கொல்லப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டனர்.
இந்த படுகொலை உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த மிகப் பெரிய இனப்படுகொலை இதுவென்று, சிறிபிரீனிசா படுகொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட தீர்ப்பாயமும், அதன் பிறகு பன்னாட்டு நீதிமன்றமும் கூறின. “1995ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதியில் இருந்து சிறிபிரீனிசாவில் போஸ்னிய, ஹெர்சிகோவீனா முஸ்லீம்களை அழிப்பது என்கிற திட்டத்துடன் செர்பிய படைகள் நடத்திய படுகொலை, ஐ.நா.வின் இனப் படுகொலை – குற்றமும் தண்டனையும் பிரகடனத்தின் பிரிவு 2, துணைப் பிரிவு (ஏ), (பி) ஆகியவற்றின்படி இனப் படுகொலையே என்று பன்னாட்டு நீதிமன்றம் முடிவு செய்கிறது” என்று 2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. தமிழீழத்தில், சிங்கள – பெளத்த இனவாத அரசு தமிழ் மக்களை இனப் படுகொலை செய்தபோது எவ்வாறு ஐ.நா. வாய் மூடி வேடிக்கை பார்த்ததோ, கள்ள மவுனம் சாதித்ததோ அதேபோல்தான், அப்போதும் தங்கள் பாதுகாப்பில் இருந்த போஸ்னிய மக்கள் செர்பிய படையினரால் படுகொலை செய்யப்பட்டபோது ஐ.நா.படைகள் அமைதியாக வேடிக்கை பார்த்தன.
ஆனால் பன்னாட்டுச் சமூகம் விடவில்லை. இந்தப் படுகொலையை நடத்திய செர்பிய இராணுவத்தின் தளபதி ராட்கோ மிலாடிச் இனப் படுகொலையாளர் என்று பிரகடனம் செய்தன. அவரை கண்டுபிடித்து போஸ்னிய படுகொலை தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று செர்பிய அரசுக்கு அழுத்தம் தந்தன. அதன் விளைவு 16 ஆண்டுக் காலமாக தலைமறைவாக இருந்த ராட்கோ மிலாடிச் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்த செர்பிய நாட்டு அரசு, போஸ்னிய முஸ்லீம்கள் இனப்படுகொலைக் குற்றத்தை விசாரித்துவரும் பன்னாட்டுத் தீர்ப்பாயத்தின் முன் விரைவில் நிறுத்துவோம் என்று அறிவித்துள்ளது.
8,000 பேரைக் கொன்ற செர்பிய தளபதியின் நடவடிக்கையை இனப் படுகொலை என்று உறுதி செய்துள்ள சர்வதேசச் சமூகம், ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை இன்று வரை போர்க் குற்றம் என்ற அளவில்தான் பேசி வருகிறது. ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை கூட, சிறிலங்க அரச படைகளால் பல பத்தாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை போர்க் குற்றம் என்றுதான் கூறுகிறது.
தமிழினத்தைக் கொன்றொழித்த ராஜபக்ச கும்பல் காலியில் இன்று வெற்றிக் கொண்டாட்டம் நடத்தி வருகிறது. ஆனால் நீதி விசாரணை நடைபெறும்போது, தமிழீழத்தில், சிங்கள – பெளத்த இனவெறி இராணுவம் நடத்தியது இனப் படுகொலைதான் என்ற உண்மை வெளியாகும். 8,000 பேரை இனப் படுகொலை செய்த ராட்கோ மிலாடிச்சிற்கு ஏற்பட்ட அதே நிலை, இனப் படுகொலையாளர் எவரும் நிரந்தரமாக தப்பிவிட முடியாது என்பதற்கு அத்தாட்சி என்பது மட்டுமின்றி, இலங்கையில் எம் தமிழினத்தைச் சேர்ந்த ஒன்றரை இலட்சம் பேரை ஈவிறக்கமின்றி படுகொலை செய்த மகிந்த ராஜபக்ச கும்பலிற்கும் ஏற்படும்.இதே கும்பல் தமிழினப் படுகொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் நாள் வரும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
அன்று தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கான நியாயம் உறுதியாகி, தமிழீழம் பிறக்கும்.
No comments:
Post a Comment