Translate

Thursday 30 June 2011

மஹிந்தவும் கோத்தாவும் எமது பிள்ளைகளைச் சிறையில் தள்ளினர்: கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் கதறியழுது கண்ணீர் மல்க தெரிவிப்பு

மஹிந்தவும் கோத்தாவும் எமது பிள்ளைகளைச் சிறையில் தள்ளினர்: கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் கதறியழுது கண்ணீர் மல்க தெரிவிப்பு

மஹிந்தவும் கோத்தாவும் எமது பிள்ளைகளை சிறையில் தள்ளினர் என கொழும்பு கோட்டையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷம் எழுப்பினர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கத்தால் மாலை 3.30 மணியளவில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரே மேற்கண்டவாறு கோஷம் எழுப்பினர்.



தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளினதும் விபரங்களை வெளியிட்டு அவர்களின் விடுதலையை காலதாமதமின்றி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் போது சுமார் 100க்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் இலங்கையர் அமைப்பின் ஏற்பாட்டிலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் அரசியல்க் கைதிகளின் உறவினர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யுமாறு அழுதவண்ணம் மன்றாடிக் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கருத்துத் தெரிவித்த நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ன,யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளன. இந்த நிலையிலும் அரசாங்கம் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு இடமளிக்காதுள்ளது.ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எவருக்கும் சுதந்திரமாக கதைக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை. ஜனநாயகம் இல்லை. உரிமை மீறப்படுகின்றது.

தமிழ் அரசியல்க் கைதிகளின் பெற்றோர்கள் தமது உரிமைக்காக புறக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக இன்று கூடியுள்ளனர் உரிமை, ஜனநாயகம், சுதந்திரம், நல்லாட்சி ஆகியவற்றுக்காக மூவின மக்களும் வீதிக்கு இறங்குவார்கள் என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறுகையில்,

தமிழ் இளைஞர், யுவதிகள் 10 முதல் 15 வருடங்களாக அரசியல்கைதிகளாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் 400 முதல் 500 தடவைகள் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்களுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை.

சிறைச்சாலைகளில் கைதிகள் தாக்கப்படுவதுடன், அவர்களது அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கவே அரசியல்க் கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாக இருக்கும் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் கரைச்சி பிரதேசசபைக்கான பிரதான வேட்பாளர் சின்னத்துரை இராஜேந்திரன்,

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் எமது பிள்ளைகள் கைதுசெய்யப்படுகின்றனர். நாட்டில் சுதந்திரம் உள்ளதெனக் கூறுகின்றார்கள். ஆனால் இங்கு சுதந்திரம் இல்லை என்றார்.

தமது உறவினர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பொலிஸாரென பலரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். இருப்பினும் தமது உறவினர்கள் குறித்து தமக்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லையென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள். மற்றொருவர் இங்கு தெரிவிக்கையில் தனது மகன் காணாமல் போய் ஐந்து வருடங்களாகின்றன. தனது மகனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 670 கடிதங்கள் அனுப்பியுள்ளேன். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு 150க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பியுள்ளேன். ஆனால் எவற்றுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று மனம் வெதும்பினார்

சிறைச்சாலையில் வைத்து தமிழ் அரசியல்க் கைதிகள் தாக்கப்படுவதை நிறுத்து ஒரு தாயின் இரு மகன்களை கடத்திய நயவஞ்சகரை அரசே தண்டிக்கவும். தமிழ் அரசியல்க் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை தமிழ் மொழியில் நடத்து போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறும் தா தா எமது பிள்ளைகளைத் தாஅவர்களை சிறையில் போட்டு மேலும் வதைக்க வேண்டாம்விடுதலை செய் விடுதலை செய் எமது பிள்ளைகளை விடுதலை செய் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திசேகரன், அரசியல் கைதிகளை விடுதலை செய்துகொள்வதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சமீர கொஸ்வத்த, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும்; நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான உதுல் பிரேமரட்ன, கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
http://www.seithy.co...&language=tamil

No comments:

Post a Comment