தமிழர்களுக்குத் தேவை பன்னாட்டு விசாரணையே! இந்தியாவின் அரசியல் தீர்வல்ல – சீமான் அறிக்கை.
இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயின் டெல்லி பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை.
இலங்கை முன்னாள் பிரதமரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்து விட்டுச் சென்றுள்ளார். இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்துப் பேசியதாகக் கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்கே, அவர்களுடன் என்ன பேசினார் என்ற விவரம் எதையும் வெளியிடவில்லை. இந்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி வந்த ரணில் விக்கிரமசிங்கேயுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை என்ன என்பதை அயலுறவு அமைச்சரும் வெளிப்படுத்தவில்லை.
ஈழத் தமிழர் பிரச்சனையில் எப்போதும் கடைபிடித்துவரும் மூடு மந்திரச் செயல்பாட்டை இன்னமும் இந்திய அரசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால், நேற்று இரவு கொழும்பில் அங்குள்ள செய்தியாளர்களிடம் பேசுகையில் விக்கிரமசிங்கே, வெளியிட்ட விவரங்களைப் பார்க்கும்போது, இலங்கையில் நடந்த போர் தொடர்பாக ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை குறித்தும், ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் குறித்தும் பேசியுள்ளார்கள்.
ஈழத் தமிழர்களோ அல்லது அவர்களின் விடுதலைப் போராட்டத்தை முழு மனதுடன் ஆதரித்துவரும் தமிழகத் தமிழர்களோ இந்திய அரசிடம் இருந்து எந்த அரசியல் தீர்வையும் எதிர்பார்க்கவில்லை என்பதை நாம் தமிழர் கட்சி தெளிவுபடத் தெரிவித்துக்கொள்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள – பெளத்த இனவெறி சிறிலங்க அரசு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு எல்லாவிதத்திலும் துணையாக நின்ற இந்திய அரசு, ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தரும் என்பது ஏமாற்று வேலையே.உலகத் தமிழர்கள், மற்றும் உலகெங்கும் வாழும் மனித நேயமிக்கவர்கள் அனைவரது எதிர்பார்ப்பும் கோரிக்கையும், சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்து பன்னாட்டு நிபுணர் குழுவை அமைத்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்பதேயாகும். ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியதைப்போல், அங்கு நடந்த போர்க் குற்றம் உள்ளிட்ட மனிதாபிமான அத்துமீறல்களுக்குக் காரணமானவர்களை கண்டுபிடித்துப் பொறுப்பாக்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்காமல், சிறிலங்க அரசு முன்னெடுக்கும் எந்த அரசியல் இணக்கப்பாடும் அந்நாட்டில் அமைதியையோ, நீடித்த அரசியல் தீ்ர்வையோ உருவாக்காது என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
இராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தீர்வாகாது
தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஏகோபித்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 1987ஆம் ஆண்டு தமிழினப் பிரச்சனையில் தலையிட்ட இந்திய அரசு, தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு தீர்வுத் திட்டத்தை (இராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம்) அவர்களின் மீது திணித்தது. அது மட்டுமின்றி, அந்த ஒப்பந்தத்தை, இந்தியாவின் மீது கொண்ட மதிப்பால் ஒப்புக்கொள்வதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்த பின்னரும், நடுநிலையில் நின்று ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், ஜெயவர்த்தனே அரசின் பேரினவாத நோக்கத்தை நிறைவேற்ற புலிகளுக்கு எதிராகவே திரும்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட மோதலில் 12,000த்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். சிறிலங்க இனவெறி அரசு முன்னெடுத்த தமிழினப் படுகொலையை, அமைதி காக்கச் சென்ற இந்திய அரசின் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்தன. ஆக, இந்தியாவின் தலையீடு ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியது.மட்டுமின்றி, தமிழின அழிப்பை திட்டமிட்டு நிறைவேற்றிவந்த சிறிலங்க அரசை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக அதன் நிலையை சர்வதேச அளவில் பலப்படுத்தியது.
இந்த நிலையில், இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது அதற்கு ஆதரவு மட்டும் தெரிவித்துவிட்டு ஒதுங்கி நின்ற இந்திய அரசு, மகிந்த ராஜபகஷே அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றப் பிறகு மீண்டும் அவரோடு இணைந்து இரகசியமாக திட்டம் தீட்டி தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை அழிக்க முற்பட்டது என்பதைத்தான் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட அமெரிக்க ஆவணத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
ராஜபக்ச அரசு திட்டமிட்டு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு எல்லா விதத்திலும் உதவி, தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முயன்ற பன்னாட்டு அரசுகளின் அழுத்தத்தை தடுத்து நிறுத்தி, ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலைக்கு முழுமையாகத் துணை நின்றது இந்திய அரசு. போருக்குப் பின் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்பது குறித்து எதையும் பேசாமல், சிறிலங்க அரசுடன் வணிக ஒப்பந்தங்களைப் போடுவதற்கு மட்டுமே முழு முயற்சி மேற்கொண்டுவந்த இந்திய அரசு, இன்று ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அளித்ததால் உருவான நெருக்கடியில் இருந்த தன்னையும், சிறிலங்க அரசையும் காப்பாற்றிக்கொள்ள மீண்டும் அரசியல் தீர்வு எனும் ஏமாற்று ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. அந்த சூழ்ச்சியை நிறைவேற்றவே, முதலில் அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்போது அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கேயை அழைத்துப் பேசியுள்ளது. ஏதாவது ஒரு தீர்வுத் திட்டத்தை தமிழர்கள் மீது திணித்துவிட்டு, தாங்கள் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட்டதாக உலகை ஏமாற்ற நினைக்கிறது டெல்லி. அவ்வாறு செய்வதன் மூலம், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை, ஒரு தேவையற்ற தலையீடாக காட்ட முற்படுகிறது. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட திட்டமிடுகிறது. ஆனால் தமிழர்கள் ஒன்றும் ஏதும் புரியாத ஏமாளிகள் என்று எண்ணுவதை புதுடெல்லி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றுள்ள நிலையில், தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் பெறாமல், எந்த அரசியல் தீர்வு குறித்தும் சிறிலங்க இனவெறி அரசுடனோ அல்லது அதற்கு துணைபோன இந்திய அரசுடனோ உலகத் தமிழினம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதை டெல்லி புரிந்துகொள்ள வேண்டும்.தமிழர்களுக்கு எதிராக டெல்லி கடைபிடித்துவரும் இலங்கை ஆதரவுக் கொள்கைக்கு எதிராகத்தான் நடந்த முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அளித்த படுதோல்வியின் மூலம் தமிழக மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள் என்பதை டெல்லி காங்கிரஸ் அரசு மறந்துவிடக்கூடாது.எனவே, இந்தியாவின் இறையாண்மையை மதித்து ஜனநாயகப் பூர்வமாக தங்கள் தீர்ப்பை அளித்த தமிழ்நாட்டு மக்களை டெல்லி காங்கிரஸ் அரசு மதிப்பதாக இருந்தால், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீதான தனது நிலைப்பாடு என்ன? ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்குத் தேவை பன்னாட்டு விசாரணையே, இந்தியாவின் அரசியல் தீர்வல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- சீமான்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
No comments:
Post a Comment