Translate

Tuesday, 28 June 2011

தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்!


தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்! 

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில் எமது குரலினை இனியும் நாம் தனித்தனியே நின்று ஒலிப்பதா? அல்லது தமிழர் தரப்புக்கள் எனச்சொல்லிக்கொள்ளும் சக்திகளும் உலக தமிழர்களும் ஒன்றுசேர்ந்து குரல்கொடுப்பதா? என்பதை எல்லோரும் தாமதிக்காது முடிவெடுக்கவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் நிற்கின்றோம்.

தமிழர்களின் நீண்டகால பழக்கவழக்கங்களில் முக்கியமானது ஒருதரப்பினர் எடுக்கும் எத்தகைய செயற்பாடுகளாக இருந்தாலும் அதனை எதிர்ப்பது அல்லது ஆதரவு கொடுக்காமல் இருப்பது, அல்லது அதற்கும் தமிழர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லாதது போல மௌனமாக இருப்பதும் எமது தமிழனுக்கான குணங்களில் ஒன்றாகிவிட்டது.

ஒருதரப்பினால் முன்னெடுக்கப்படும் எத்தகைய செயற்பாடுகளாக இருந்தாலும் அது தமிழர்களின் உரிமைக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தால் நாம் எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டியது மிகவும் காலத்தின் தேவையாகும்.

யுத்தகுற்ற விசாரணை,தமிழர் மீதான மேற்குலகின் பார்வை,தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றம் என எமக்கு சாதகமான புறச்சூழ்நிலைகளை கருத்திலெடுப்பதோடு ஈழத்திலிருந்து எம்மால் எவ்வாறான வழியில் குரல் கொடுக்க முடியும் என்பதை அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரச்சார கூட்டத்தில் நடந்த அடாவடித்தனங்களிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது மௌனநிலையில் உள்ள நிலையில் ஈழத்தமிழர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் புலத்தில் இயங்கிவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழர் பேரவை, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு,மற்றும் அனைத்து நாடுகளிலும் இயங்கிவரும் தமிழர் கட்டமைப்புகளும் அதனோடிணைந்த அமைப்புக்களும் எமது ஈழப்பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும்.

இவ்வமைப்புகள் எல்லாவற்றினதும் இறுதி இலக்கு தமிழர்களுக்கான உரிமையையை வென்றெடுப்பதேயாகும். அவ்வாறாயின் எதற்காக நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணிக்க கூடாது?

ஒரு தன்னிகரில்லா தலைவன் வழியில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தேசிய விடுதலைப்போராட்டம் எதிர்பாராத வகையில் அந்நிய வல்லாதிக்க சக்த்திகளாலும், சிறீலங்கா பேரினவாதத்தாலும் முடக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் எமது உரிமையையும், இறைமையையும் வென்றெடுப்பதற்காக புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பாக ஈழத்தில் இருக்கும் உறவுகள் கவலையும், வேதனையும் அடைகின்றார்கள் என்பதை எங்கள் சொந்தங்களுக்கு மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறாது எமக்கான உரிமைகளை கால நீரோட்டத்திற்கேற்ப சில அரசியல் சாணக்கிய வழிகளில் வென்றெடுப்பதற்கு எத்தகைய வழிகளுண்டோ அத்தகைய வழிகளூடாக பயணிப்பதன் ஊடாக - எமது உரிமைக்குரலையும், ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் உலக சமுதாயத்தின் முன் மேலும் கொண்டு சென்று - எமது உரிமைகளை சர்வதேச நியமங்களில் அடிப்படையில் வெல்லக்கூடிய யதார்த்த சூழலை புரிந்து அதற்கான வேலைகளில் யார் ஈடுபட்டாலும் நாம் எல்லோரும் சேர்ந்து வலுச்சேர்க்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

அண்மையில் ஒபாமாவுக்கான தமிழர் தரப்பினரால் வெளியிடப்பட்ட “இறைமையுள்ள தமிழீழ தனியரசிற்கான பொதுசன வாக்கெடுப்பை ஐநாவால் நடாத்துவதற்கு” அமெரிக்காவை கோருவதற்கான செய்தியை அறிந்தோம்.

ஆனால் அச்செய்தி எந்தளவிற்கு ஈழத்தமிழர்களையோ புலம்பெயர் தேச உறவுகளையோ சென்றடைந்தது என்பது பெரிய வினாவாகும். அவ்வாறு சென்றாலும் அவர்கள் எதற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதும் முக்கியமானதாகும்.

அந்த அறிவிப்புகூட தமிழர் தரப்பாக உள்ளவர்களால் சரியான வழியில் புரிந்து கொள்ளப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அதனை யாரும் வரவேற்று மக்களை ஊக்குவித்ததாக தெரியவில்லை.

எத்தனை தமிழ் இணையத்தளங்களில் அந்த செய்தி வந்தது என்பதும், அதனை பத்திரிகைகள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது என்பதும் முக்கியமானதாகும். யார்யார் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களோ அதன்படி தமிழர்களும் செயற்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு என்பதும் யார் எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் குறைவளவான மக்கள் கருத்து கணிப்புக்களில் கலந்து கொள்வதால் ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசைகள் சந்வதேசத்தால் சரியான முறையில் புரிந்துகொள்ள முடியாமல் போவதற்கு வாய்புக்கள் உண்டு.

தென்சூடான் வாக்களிப்பில் 96 வீதமானவர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். இதனை புரிந்து எங்களுக்குள் உள்ள கருத்த வேறுபாடுகளை மறந்து அனைவரும் பொதுவான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பினை வழங்கி உலகத்தமிழர்களையும் ஊக்குவித்து ஒவ்வொருவரும் யார் யாருக்கு தெரியப்படுத்த முடியுமோ அதனை விரைவாக ஊக்குவித்து பெருமளவான தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்ததுவதற்கான இவ்வாறான சந்தர்ப்பங்களை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே உங்களில் ஒருவனாக அடக்குமுறைக்குளிருந்து அன்பாக கேட்டுககொள்ளுகின்றேன்.

வாக்களிக்க இங்கு செல்லுங்கள்

அன்புடன்
சக்கரவர்த்தி


No comments:

Post a Comment