கடந்த காலங்களில் அதிகம் கவனிக்கப்படாத உள்ள+ராட்சித் தேர்தலை எதிர்கொள்ள, இம்முறை சிறீலங்கா அரசின் அமைச்சுப்பரிவாரங்கள் வடக்கு நோக்கி படையெடுத்துள்ளன. சிறீலங்கா சனாதிபதி ராஜபக்சவும் வடக்கு சென்று ஐந்து நாட்கள் தங்கிநின்று, தமிழர்களை கபடத்தனமாக வெற்றிகொள்ளும் செயற்பாடுகளை முடுக்கிவிடவுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்கள், அடிக்கல்நாட்டு விழாக்கள், நிவாரணங்கள், காசோலை வழங்கல், அன்பளிப்புக்கள், சலுகைகள், ஆசைவார்த்தைகள், உறுதிமொழிகள் என வடக்கே மக்களின் வாக்குகளைக் குறிவைத்து, வலைவீச்சுக்களும், பொறிவைப்புக்களும் இடம்பெறுகின்றன. கோடிகள் கோடிகளாக பணம் இறைக்கப்படுகின்றது.
அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், அடாவடித்தனங்கள், தடைகள், தொடர்ச்சியான வன்முறைகள் என்பன கட்டவிழ்த்துவிடப்பட்டு, சனநாயகத்தை முற்றாக குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஒரு பயங்கரமான சூழல் ஒன்றைத் தோற்றுவித்துள்ளது ராஜபக்ஸ்ச அரசு.
கடந்த பொதுத்தேர்தலின்போது, தமிழ்மக்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும் நோக்கில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு, கூட்டமைப்பிற்கு எதிராக, ஆயிரக்கணக்கான தமிழ் வேட்பாளர்களை சுயேட்சைகளாகக் களம் இறக்கியது. இதில் தோல்விகண்ட சிங்கள அரசு, தற்போது, புதிய வழியை பரீட்சித்துப்பாக்க முனைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது என்பதிலும் பார்க்க, கூட்டமைப்பின் செல்வாக்கை தோல்வியுறச் செய்து, தமிழர்களின் திரள்வைச் சிதறடித்து, தமிழ்த் தேசியம் என்ற கருத்தைச் தோற்கடிப்பதே சிங்கள அரசினதும், அதன் அடிவருடிகளினதும் பிரதான நோக்கமாகும்.
தமிழ்த் தேசியத் தளத்தைப் பாதுகாத்து, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, இராஜீகத் தளங்களிலும், பேச்சுவார்த்தைத் தளங்களிலும் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவது, தமிழ்தேசியக்கூட்டமைப்பு மட்டும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் அல்ல, எனக்கூறிவரும் அரசிற்கு முக்கிய தேவையாகப்படுகின்றது.
இலங்கைத்தீவு ஒரே நாடு, நாம் எல்லோரும் ஒரே மக்கள்� எனக் கூறிவரும் சிறீலங்கா சனாதிபதி ராஜபக்சவிற்கு, தமிழ்த் தேசியத்தின் சிதைவு முக்கிய தேவையாகப்படுகின்றது.
அரசஅடிவருடிகளைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கச் செய்வதின் ஊடாக தான் எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுவிடலாம் என ராஜபக்ஸ்ச அரசு கருதுகின்றது.
அனைத்துலக அரங்கில் தான் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடிகள், மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் போன்ற விடயத்தில், தனது இந்த திட்டம் தனக்கு உதவும் என, ராஜபக்ஸ்ச அரசு கருதுகின்றது.
தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, தமிழ்மக்களைப் பலவந்தமாகப் பிடித்து, ஐ.நா.அறிக்கைக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்தவும், கையொப்பம் சேகரிக்கவும் முனைந்துள்ள ராஜபக்ஸ்ச அரசு, தனது விசுவாசிகளை, அடிவருடிகளை தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக்குவதன் ஊடாக பல நன்மைகளை, சாதகமான நிலைமைகளை அனைத்துலக அரங்கில் பெறலாம் எனக் கணக்குப்போட்டுள்ளது.
நெஞ்சை உறையவைக்கும் உயிர்த்தியாகங்கள், அற்பணிப்புக்கள், மாவீரச் செல்வங்களின் தற்கொடைகள், வீரம்செறிந்த போராட்டம் என்பனவற்றிற்கூடாகக் கட்டிவளர்க்கப்பட்ட எமது தேசியவிடுதலைப் போராட்டம் இன்று அடுத்த கட்டத்தில் நிற்கின்றது. தமிழ் மக்களிற்குச் சாதகமான அறிகுறிகள், பொறிகளாகத் தெரிகின்றன.
இந்தக் காலம் எமக்கு அதிமுக்கிய காலமாக உள்ளது. தாயகத்து மக்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டிய காலம் இது. சிங்களத்தின் நயவஞ்சகத் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதனை முறியடித்து, தமிழ்த்தேசியத் தளத்தைப் பாதுகாத்து, எமது விடுதலைக்கான பாதையைப் பலப்படுத்த, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி, தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தின் அதிமுக்கியமான தேவை என்பதை உணர்வோம். தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கும் இதனை உணரவைப்போம்.
இதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் உரிமையுடனான எங்களது, எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் முன்வைப்போம். தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலில், விடுதலைக்காகப் போராடிவரும் ஒரு இனத்தின், அரசியல் தளத்தில் நின்று செயற்படுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், சாதாரண அரசியல்வாதிகள் என்ற நிலையில் அன்றி, அரசியல் போராளிகள் என்ற தளத்தில் நின்று செயற்படுவீர்கள் என்பதே எங்களது எதிர்பார்ப்பும், நம்பிக்கையுமாகும்.
பிரபாகரன் என்ற பேரொளியின் மெய்யுணர்வின்பாற்பட்டு நிற்கின்ற எவரும் சரணாகதி அரசியலிற்கு ஆட்படவே மாட்டார்கள் என்று திடமாக நம்புகின்றோம்.
தாயக மக்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும், உறுதியாக ஒரே தளத்தில் ஒற்றுமையாக நின்று எமது தேசியவிடுதலையை வென்றெடுப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் |
No comments:
Post a Comment