எழுச்சியுடன் லண்டனில் நடைபெற்ற தற்கொடையாளர்கள் நினைவுவணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி வெடித்து விடுதலைக்கு வலுச்சேர்த்த தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.
இந்த "தற்கொடையாளர் நாள்" நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் மிச்சம் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரினை 1987 ஆம் ஆண்டு பலாலியில் குமரப்பா, புலேந்திரன் உட்பட சயனைட் அருந்தி வீரகாவியமான பன்னிரண்டு மாவீரர்களில் ஒருவரானகப்டன் பழனி அவர்களின் சகோதரரும், 1991 ஆம் ஆண்டு ஆகாயக் கடல்வெளிச்சமரின் போது ஆணையிறவுத் தளத்துக்குள் வெடிமருந்து ஏற்றிச்சென்று வீரகாவியமாகிய கரும்புலி மேஜர் செழியன் அவர்களின் தந்தாயாருமான திரு.பா.மகேந்திரராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.
பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து தாயக விடுதலைப் போரிலே களமாடி தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்து வீரச்சாவடைந்த மாவீரர்களையும், தாயக விடுதலையில் பற்றுக்கொண்டு உறுதுணையாக நின்றுழைத்து சாவினைத்தழுவிய நாட்டுப்பற்றாளர்களையும், தமிழ் மொழிக்காகவும், எம்மினத்தின் மேன்மைக்காகவும், தம் வாழ்வை அர்ப்பணித்துப் பணிசெய்து உயிர் நீத்த மாமனிதர்களையும், அன்னிய சிறீலங்கா அரசபயங்கர வாதத்தால் கொன்றழிக்கப்பட்ட எமது மக்களையும், எமது தாயக விடுதலைக்காக தமிழகம் உட்பட ஆசிய ஐரொப்பிய நாடுகளில் வேள்வித் தீ ஆகிய தியாகிகளையும், சிறீலங்கா கடற்படையால் கொன்றழிக்கப்பட்ட தாய்த் தமிழக மக்களையும்நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியோர் நலன் பேணும் அமைச்சருமான திருமதி.பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தற்கொடையாளர்களுக்கான பொது நினைவுருவப்படத்திற்கு மாவீரர்களான கப்டன் பழனியின் சகோதரரும், மேஜர் செழியனின்தந்தையுமான திரு.பா.மகேந்திரராஜா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.
10-06-1997 அன்று ஜயசுக்குறு இராணுவ நடவெடிக்கைக்கு எதிராக தாண்டிக்குளம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட வலிந்த ஊடறுப்புத் தாக்குதலில் விடுதலைக்கு வலுச்சேர்த்து நிதன், சாதிரியன் ஆகியோருடன் முதற் தரை பெண் கரும்புலியாக வீரகாவியமான மேஜர் யாழினியின் திருவுருவப்படத்திற்கு அவரின் சகோதரன் சிவசுப்ரமணியம் பகீரதன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.
அடுத்து 30-03-1996 அன்று முல்லைத்தீவு சுண்டிக்குளம் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் அதிவேக ரோந்துக்கலம் மீது தாக்குதலின் போது கடலிலே காவியமான கடற்கரும்புலி கப்டன் இளையவளின் திருவுருவப்படத்திற்கு அவரின் சகோதரன் குமார் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்தார்.
மரணத்தை வென்ற மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வில் முதலாவதாக மூத்த ஈழவிடுதலைச் செயற்பாட்டாளரான திரு.சிவா அவர்கள் மலர்வணக்கம் செலுத்த தொடர்ந்து மக்களின் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
மலர் வணக்கத்தினைத் தொடர்ந்து நிகழ்வுகளாக கவிதை, நடனம், வயலின் இசை, நாடகம், சிறப்புரை என்பன இடம்பெற்றது. இதில் கரும்புலிகளின் நினைவுப்பாடலுக்கு வயலில் இசை வழங்கிய நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சிறப்புரையினை பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் சார்பாக திரு.ஆ.மயூரன் அவர்கள் வழங்கினார். மாலை 7 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக இடம்பெற்று இறுதியில் அனைவரும் எழுந்து நின்று உறுதியேற்றோடு இரவு 10 மணிக்கு நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தது.
இதே வேளை நேற்றைய தினம் ஸ்கொட்லண்ட் பகுதியிலும், யாழ் பல்கலைக்கழகத்திலும் கரும்புலிகள் நாள் நினைவுவணக்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment