Translate

Saturday, 2 July 2011

யார் காரணம் தமிழ் மக்களின் இந்நிலைக்கு?


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் எங்கேயும் பிச்சைக்காரர்களைக் காணமுடியவில்லை என்று ஆச்சரியத்தோடு சொன்னார்கள் அங்கு சென்றுவந்த வெளிநாட்டவர்கள் பலர்.


போர் நடைபெறும் பகுதியில் இவ்வாறு இருப்பது அரிதிலும் அரிது என விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை அவர்கள் வியந்தும், புகழ்ந்தும் இருந்தார்கள். தமிழ் மக்களை அடிபணியவைப்பதற்கு சிறீலங்கா பொருளாதாரத் தடைகளை பிரயோகித்த காலத்தில்கூட, அந்த மக்களை வறுமை நிலைக்கு செல்லவிடாது, எத்தனையோ கட்டமைப்புக்களை உருவாக்கி சுயமான முன்னேற்றத்திற்கு வழிகாட்டி அந்த மக்களுக்கு பேருதவியாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள்.



2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் சிக்குண்டு சிறீலங்கா அரசு உட்பட தென்னாசிய அரசுகளே ஆடிப்போயிருந்த நிலையில், தமது கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களுக்குள் ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களை ஒருசில நாட்களுக்குள் மீட்டெடுத்தவர்கள் விடுதலைப் புலிகள். இவ்வாறு மக்களை பொருளாதார நெருக்கடிகளில் இருந்தும் இயற்கையின் பேரழிவுகளில் இருந்தும் மீட்டெடுத்து அவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே செல்லவிடாது பாதுகாத்தவர்கள் விடுதலைப் புலிகள்.


இவற்றைவிட, வட பகுதி மக்கள் பொருளாதாரத்தில் எப்போதும் முன்னின்றே வந்திருக்கின்றார்கள். கடினமான உழைப்பின் மூலம் தமிழ் மக்கள் எவரிடமும் கையேந்தாத சொந்த வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். ஆனால், இன்று ‘வடபகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்துகொண்டிருப்பதாக’ ஜக்கிய நாடுகள் சபையின் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கின்றது. ‘வன்னியில் மீள்குடியமர்ந்தவர்களில் பெருமளவான மக்கள் வறுமை கோட்டின் கீழ்வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் 57 விழுக்காடானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அதிலும் 12 விழுக்காடானவர்கள் மிகமோசமான வறுமையில் வாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் வாழ் இடங்களில் வாழ்க்கை செலவு அதிகமாக உள்ளதால் அங்குள்ள மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதே கடினமாக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட 77 விழுக்காடான மக்கள் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள போதும் தற்காலிக கொட்டில்களிலே வாழ்ந்து வருகின்றார்கள். மக்களுக்கான சுகாதார வசதிகள் இன்மையினை எதிர்கொண்டுள்ள மக்கள், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுமிகள் கர்ப்பம் போன்றவற்றிற்கும் முகம்கொடுத்து வருவதாக’ ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை ஏற்படுவதற்கு காரணமானவர்கள் யார்? சிறீலங்காவும், அதன் போருக்கு உதவியாக நின்றவர்களும் மட்டுமே காரணமாக முடியும்.


பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென உலக நாடுகள் எத்தனையோ மில்லியன் டொலர்களை அள்ளிக்கொடுத்துள்ளது. ஆனால் அந்த நிதியெல்லாம் எங்கே போனது. குரங்கின் கையில் அப்பத்தை பங்கிடக்கொடுத்த பூனைகளின் கதையாக, சிங்களத்தின் கையில் இனஅழிப்பில் தப்பிய மக்களுக்கான நிதியைப் பங்கிட்டுக்கொடுக்குமாறு கொடுத்த உலக நாடுகள்தான் இதற்கான பதிலையும் சொல்லவேண்டும். உலக நாடுகள் கொடுத்த நிதியுதவியில் ஒரு சதவீதம் அந்த மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருந்தால்கூட இந்த நிலைமையை அந்த மக்கள் இன்று எதிர்கொண்டிருக்கமாட்டார்கள்.


இவற்றைவிட பாதிக்கப்பட்ட மக்களின் எஞ்சியிருக்கும் பொருளாதாரங்களை சுரண்டிக்கொண்டிருக்கின்றது சிங்களம். வடபகுதியில் மேற்கொள்ளப்படும் வேலை வாய்ப்புக்கள் அனைத்தையும் சிங்களவர்களுக்கே வழங்கியுள்ள நிலையில், தமிழர்களிடம் எஞ்சியுள்ள கால்நடைகளையும் கடத்திச்சென்று வியாபாரம் செய்து அவர்களது பொருளாதாரத்தை மேலும் பாதிப்படைய வைக்கின்றனர்.


பாதிக்கப்பட்ட அந்த மக்கள் மீண்டெழுவதற்கு சிறீலங்கா எந்தவொரு உதவியையும் வழங்கப்போவதில்லை என்பது மட்டுமல்ல, உலகின் எந்தக் கட்டமைப்பின் ஊடாகச் செல்கின்ற உதவிகளையும் அது அனுமதிக்கவும் போவதில்லை. இந்த நிலையில் அந்த மக்களை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர்ந்த மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எந்தவொரு கட்டமைப்பின் ஊடாகவும் அல்லாமல் நேரடியாக அந்த மக்களுக்கு உதவிகள் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்வதன் ஊடாகவே அந்த மக்களை மீண்டெழவைக்கமுடியும். அதுவே இன்றுள்ள ஒரேயரு வழியும்கூட.


நன்றி - ஈழமுரசு             http://www.tharavu.com/        

No comments:

Post a Comment