Translate

Monday, 4 July 2011

சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் – சீமான்


சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் – சீமான்

சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் 13 வயது மகன் தில்சன் விடுமுறை நாளான நேற்று மதியம் 1.30 மணியளவில் கொடிமரச்சாலை ராணுவக் குடியிருப்பில் உள்ள மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இது மிருகத்தனம் ஆகும். வன்மையாகக் கண்டிக்கத்தக்க அநீதி ஆகும்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தீவுத்திடல் அருகில் உள்ள மக்கள் அங்கு காலம் காலமாக குடியிருந்து வருகின்றனர். இன்று எத்தனையோ மாட மாளிகைகளும், உல்லாச புரிகளும், ராணுவம் சார்ந்த குடியிருப்புகளும், கட்டிடங்களும் அப்பகுதியில் முளைத்திருக்கலாம்.
ஆனால் இம்மக்கள் அந்த மண்ணின் பூர்வீக குடிகள். அவர்களுக்கே அந்த மண்ணில் அனைத்துக்கும் முதல் உரிமை இருக்கிறது. அப்பகுதி மக்களுக்கே விளையாட்டுக் களம் முதற்கொண்டு அனைத்தையும் பயன்படுத்தவும் முதல் உரிமை இருக்கிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். அதனால் அருகில் உள்ள ராணுவக் குடியிருப்பில் உள்ள மரங்களில் ஏறி விளையாடியுள்ளனர். இதில் துளியும் தவறு கிடையாது.
ஆனால் அவ்வாறு விளையாடிய சிறுவனை அநீதியாக படுகொலை செய்துள்ளனர். சிறுவர்கள் மரங்களில் ஏறி விளையாடுவதால் ஒன்றும் இந்த நாட்டின் “இறையாண்மை” கெட்டுப் போய் விடாது. அப்படியே சிறுவன் விளையாடியது தவறு என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அவனை அழைத்து அன்பாக அறிவுருத்தி வெளியே அனுப்புவது தான் நெறிமுறை. அதை விடுத்து தன் கையில் துப்பாக்கி இருக்கிறது என்ற காரணத்துக்காக்க் கொலை செய்வது என்பது மிருகத்தனம்.
நம் எதிரிகளிடம் இருந்து மக்களைக் காப்பது தான் ராணுவத்தின் பணி என்கிறார்கள்.ஆனால் ஒரு தவறும் செய்யாத சிறுவனைக் கொலை செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறார் அந்த ராணுவ”வீரர்”. இது வீரம் கிடையாது. மிருகத்தனம்.
தங்கள் உயிரைக் கொடுத்தாவது நாட்டையும், நாட்டு மக்களையும் காப்போம் என்று கூறிப் பணியில் சேரும் ராணுவத்தைச் சேர்ந்தவர் அப்பாவி சிறுவனைக் கொலை செய்துள்ளார். இது அக்குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அக்குடும்பத்துக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த துயர சம்பவத்திற்கு உரிய பரிகாரமே கிடையாது. சிறுவனைப் படுகொலை செய்த ராணுவத்தைச் சேர்ந்த அந்தக் கயவரை உடனே கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment