இந்தியாவின் கபடத்தனம் அம்பலம்
அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழக சினிமாத்துறையினர் மற்றும் தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகள் சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற அழுத்தம் பரவலாக ஒலிக்கத்தொடங்கியிருக்கும் இவ்வேளையில், இந்திய மத்திய அரசோ தனது இரட்டை வேடத்தை வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் சில வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா சென்ற இந்தியக் குழு, ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு எந்த நிர்ப்பந்தத்தையும் தங்களுக்கு அளிக்கவில்லை என்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் தெட்டத்தெளிவாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் கபடத்தனம் அம்பலமாகியுள்ளது.
ஒரு பொய்யைச் சொல்லப்போய் ஆயிரம் பொய்யைச் சொல்ல வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலையில் இந்தியா இன்று இருக்கிறது. இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் தமிழத்தில் ஈழத்தமிழருக்கு அனுதாபமான சூழ்நிலை உருவாகியதையடுத்து, இந்திய மத்திய அரசு சிவசங்கர் மேனன், நிருபமா ராவ், பிரதீப் குமார் ஆகியோர் கொண்ட இந்தியக் குழுவை சிறிலங்காவிற்கு அனுப்பியது. அக்குழுவும், மகிந்தாவை இரண்டு மணி நேரத்திற்கு மேல் சந்தித்தது.
குறித்த அச்சந்திப்புக்குப் பிறகு கொழும்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய சிங்சங்கர் மேனன், “சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறினார். அதுமட்டுமன்றி, “தமிழர் பிரச்சினைக்கு தங்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பு, அந்த விவகாரத்தில் இந்தியா எந்த வகையிலும் தலையிடாது" என்று சிவசங்கர் மேனன் இன்னுமொரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறினார்.
எதற்காக இந்த இரட்டை வேடம்?
யாரை முட்டாள்களாக்க முனைகிறார் சிவசங்கர் மேனன் போன்ற இந்திய அதிகாரிகள் என்று கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்கள் தமிழ் தரப்பினர். மேனனைப் போன்ற பல இந்திய அதிகாரிகள் ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிராக பல செயற்பாடுகளைக் கடந்த காலங்களில் செய்தே வந்துள்ளார்கள். தமிழ் மக்கள் சொல்லெனாத் துயரைச் சந்தித்த வேளையில், வாய்மூடி மௌனியாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசு எதற்காக இப்பொழுது மட்டும் முதலைக் கண்ணீர் வடிக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிலங்கா மீது அதீத ஈடுபாட்டைக் காட்டிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியாவும் தனது சொந்த நலனுக்காகவே சிறிலங்கா விடயத்தில் நேரடித் தலையீட்டை செலுத்த முனைகிறது என்று கூறுகிறார்கள் ஒரு சாரார்.
அத்துடன், தனது அரசியல் செல்வாக்கை இந்தியாவில் தக்கவைக்கவே இப்படியான இரட்டை வேடத்தை இந்தியா காட்டுகிறது என்று கூறுகிறார்கள் இன்னொரு சாரார். எது உண்மையாக இருந்தாலும், ஈழத்தமிழர் விடயத்தில் தனது சுய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பை மனதில் வைத்தே இந்தியா செயற்படும் என்பது மட்டும் யதார்த்தமான உண்மை.
தனது பூகோள அரசியல், பாதுகாப்பு மாற்றம் தனக்கு எதிராக இருந்தபோதிலும், சீனா போன்ற நாடுகளை கோபமடையச் செய்யக்கூடாதென்கிற முனைப்பில் இந்தியா கடந்த காலங்களில் இருந்தது என்பதும் உண்மை. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவிகளை அளித்த தருணம், இந்தியா தனது எதிர்ப்பைக் காட்டாமல் தனது பங்குக்கு தானும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை சிங்கள அரசுக்கு கொடுத்தது. இதுவே, ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஏற்பட்ட பலம் பொருந்திய சமர் என்று வர்ணிக்கும் விதத்தில் இருந்தது. இதனை, எதிர்கொள்வதை தவிர்த்தார்கள் விடுதலைப்புலிகள் என்பதுதான் உண்மை நிலைவரம்.
தமிழக அரசு, தமிழக வணிகர்கள், சட்டத்துறையினர், சினிமாத்துறையினர் என்று பல துறையினர் தமிழகத்தில் ஈழத்தமிழர் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் எழுப்புகிறார்கள். அத்துடன், சிறிலங்கா அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் போன்ற சம்பவங்கள் சிறிலங்கா அரசை கதிகலங்கச் செய்தது என்றால் மிகையாகாது. சிறிலங்காவை சமாதானப்படுத்துவதா அல்லது தமிழகத்தின் உணர்வலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் இந்திய அரசு குறித்த குழுவை கொழும்புக்கு அனுப்புவதா என்பது அடுத்து எழும் கேள்வி.
ஒரு புறத்தில், தமிழக மக்களை சமாதானப்படுத்துமுகமாக பேட்டியளித்தார் மேனன். மறுபுறத்தில், சிங்கள அரசை சாந்திப்படுத்த மற்றுமோர் பேட்டியளித்தார் மேனன். இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்னவெனில், இந்தியா சிறிலங்கா அரசை கோபமடையச் செய்ய விரும்பவில்லை மற்றும் தமிழக மக்களின் உணர்வை ஒருபோது புறம்தள்ளவும் மத்திய காங்கிரஸ் அரசு விரும்பவில்லை. ஆகவே, இப்படியான இரட்டை வேடத்தை கடைப்பிடிக்க இந்திய மத்திய அரசு முனைகிறது என்பது மட்டும் தெட்டத் தெளிவாகப் புரிகிறது.
உலக மகாப் பொய்யராம் மகிந்தா
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுக்கு இப்போது புதிதாக ஜாநோதயம் பிறந்துள்ளது. இந்திய உயர் குழு கொழும்பில் வைத்து முன்னுக்குப் பின்னான தகவல்களை விட்டது உண்மை. இவைகள் அனைத்தும் பத்திரிகைகளில் வந்ததும் உண்மை. இப்படியாக இருக்க, தங்கபாலு மகிந்த ராஜபக்சாவை உலக மாகப் பொய்யர் என்று வர்ணித்துள்ளார்.
சிறிலங்கா மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்கிறது என்கிற கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, “சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அளியுங்கள் என்று எந்த நிரப்;பந்தத்தையும் இந்தியா கொடுக்கவில்லை. சிறிலங்காவின் அரசமைப்புச் சட்டத்தின் 13வது பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா நிர்பந்திக்கவில்லை” என்று கூறினார் மகிந்தா.
சிங்சங்கர் மேனன் தலைமையில் கொழும்பு வந்த இந்தியக் குழு என்னதான் பேசியது என்று கேட்டதற்கு, “எப்போதும் பேசப்படும் இரு தரப்பு உறவுகள் தொடர்பான விடயங்கள்தான் பேசப்பட்டன” என்று ராஜபக்ச கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, தமிழர் பிரச்சினை குறித்து வேறு எதையாவது இந்தியக் குழு பேசியதா என்ற வினவியதற்கு, தனது அமைச்சரவையில் உள்ள டக்ளஸ் தேவானந்தா அளித்துள்ள பரிந்துரைகளை சிங்சங்கர் மேனன் சுட்டிக்காட்டியதாகக் கூறியுள்ளார்! ஈழத்தமிழர் பிரச்சினையை எவ்வளவு சாதாரணமான ஒரு விடயமாக இந்திய மத்திய அரசு கையாள்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டே டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையை சுட்டிக்காட்டியிருப்பதாகும் என்று கூறுகிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.
இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு ஒரு அறிக்கையை விட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது: "இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசிடமிருந்து நிர்ப்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்சே உலகமகாப் பொய்ச் செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை மிகவும் உக்கிரம் அடைந்த 1983-ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும், சோனியா வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான இன்றைய மத்திய அரசின் காலத்திலும் இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு அந்த நாடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய அரசு பிரயோகித்து வந்துள்ளது வருகிறது என்ற விபரங்களை வரலாறு விரிவாகக் கூறும்.
இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான்."
அவர் அவ்வறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “அன்றைய வெளியுறவுச் செயலாளர் ஜி. பார்த்தசாரதியை அந்நாட்டுக்கு அனுப்பி அன்றைய அதிபர் ஜெயவர்த்தனேவிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தச் செய்ததும் இந்திராவே. 1985 ஜூலை 7-ஆம் தேதி திம்புவில் இலங்கை அரசையும், அந்நாட்டு விடுதலை முன்னணி தலைவர்களையும் இந்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச வைத்தவர் ராஜீவ்காந்தி. மேலும் ராஜீவ்காந்தி இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு சிறந்த கடுமையான நிர்ப்பந்தமாக அமைந்தது. தமிழர்களுக்கு சுயஅதிகாரம் கொண்ட மாநிலம் உருவாகும் வகையில் சட்டத் திருத்தத்தை ஒப்பந்தம் வலியுறுத்தியது. இலங்கை தமிழர்களுக்கு உரிமை தரும் அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் சிங்கள ராணுவ வீரர் ஒருவர் ராஜீவ்காந்தியை இலங்கையில் அந்நாட்டு ராணுவ மரியாதை ஏற்று வரும் நேரத்தில் துப்பாக்கியால் தாக்கினார் என்பதும், அக்கொள்கைக்கென்றே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு ஆளானார் என்பதும் வரலாற்றின் சோக அத்தியாயங்கள்."
ஈழத்தமிழருக்காக தான் பல நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறிய தங்கபாலு மேலும் தெரிவிக்கையில், “கடந்த 1984 மற்றும் 89-ஆம் ஆண்டுகளில் நான் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழீழம் தான் நிரந்தர தீர்வு என்று எனது உரையை பதிவு செய்திருக்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமர்" என்று கூறினார் தங்கபாலு. இவரைப்போன்ற தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதனாலேயோ என்னவோ இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் தமிழருக்கு எதிராக பல இன்னல்களை இழைத்து வருகிறது.
தமிழீழ விடுதலையை தான் ஆதரித்ததாகக் கூறும் தங்கபாலு, ஈழத்தமிழருக்கு கிடைக்க வேண்டிய ஒரே தீர்வு என்னவெனில் “இறைமையுள்ள இலங்கைக்குள் தமிழர்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும்" என்று ஏன் இதுவரை காலமும் கூறிவந்ததுடன், அக்கொள்கையுடைய கட்சியின் தமிழகப் பிரிவின் தலைவராக உள்ளார் என்பதும் நகைச்சுவைக்கு உரிய விடயமே. அனைத்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுமே இரட்டை வேடத்தை காண்பித்து வருகிறார்கள் போலும். தமிழக மக்களின் உணர்வுகளுடன் விளையாடிய இந்திய மத்திய காங்கிரஸ் கட்சிக்கும், தமிழர்களை நம்பி கழுத்தறுத்த கலைஞர் கருணாநிதி தலைமயிலான திமுகவினருக்கு என்ன கதி கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் நிகழ்ந்ததென்பதை நன்கே யோசித்துப் பேசுகிறார் தங்கபாலு போலும்.
இறுதியும், உண்மையுமான தரிசனம் என்னவெனில் இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் இரட்டை வேடத்தையே ஈழத்தமிழர் விடயத்தில் காட்டுகிறது. சிறிலங்காவையும் சமாதானப்படுத்தி, தமிழகத்தையும் ஆறுதல்படுத்தவே இந்திய மத்திய அரசு முயல்கிறது என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மை. சிறிலங்காவிலும் விட தமிழகத்தின் உணர்வுகளுக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும் என்கிற நிலையை தமிழகத் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வெளிப்படுத்துவதன் மூலமாகவேதான் இந்தியாவின் இரட்டை வேடத்தைக் கலைய வைக்கலாம்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:nithiskumaaran@yahoo.com
No comments:
Post a Comment