Translate

Monday 15 August 2011

மீண்டும் வலம் வரும் மாயமான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு

-இதயச்சந்திரன்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கலாநிதி பட்டமளித்துள்ளது பீஜிங்கிலுள்ள பல்கலைக்கழகம்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் போது, இவ்வகையான பட்டமளிப்பு விழாக்கள், புதிய பிம்பங்களைக் கட்டமைத்து மனிதாபிமான முகங்களை உருவாக்கி விடுமென சிலர் கற்பிதம் கொள்கிறார்கள்.
பொருண்மியப் பலம் பொருந்திய நட்பு வட்டத்துள் தாம் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதன் ஊடாக அழுத்தங்களைத் தணிக்கலாம் என்கிற கனவிலும் வாழலாம்.



இருப்பினும் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் முட்டி மோதும் வல்லரசாளர்கள், பொய்யான பிம்மங்களையிட்டு சிரத்தை கொள்வதில்லை.
'கலாநிதி' மஹிந்த ராஜபக்ஷ குழுவினரின் சீனப் பயணம், எதனை வெளிப்படுத்த முயல்கிறது என்பதனை இந்தியாவும் மேற்குலகமும் இலகுவாகப் புரிந்து கொள்ளுமென நம்பலாம்.

போர்க் குற்றச்சாட்டினை சர்வதேச அரங்கில் எதிர்கொள்வதற்கு சீனாவின் உதவி அரசிற்குத் தேவைப்படுகிறது.
அத்தோடு, உத்தரவாதமளிக்கப்பட்ட 1.5 பில்லியன் டொலர் கடனுதவியை இப்பயணத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டுமென்கிற தேவை அரசிற்கு இருக்கிறது.
அதுமட்டுமல்லாது உலகத் தலைவர்களின் வரிசையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அரியாசனங்களும், பட்டங்களும் உதவி புரியுமென ஜனாதிபதி நினைக்கின்றார்.

ஆனாலும், சனல்-4க்கு அடுத்ததாக, "ஹெட்லைன் டுடே' (Headlines Today) என்கிற இந்திய தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்டு வரும் நேர்காணல்களும் நேரடிச் சாட்சியங்களிடமிருந்து உருவாக்கப்பட்ட ஆவணப்படங்களும், மேலும் பல சர்வதேச நெருக்கடிகளை இலங்கை ஆட்சியாளர்களின் மீது திணிப்பதை காணக் கூடியதாகவிருக்கிறது.

""ஹெட்லைன் டுடே''யின் புலனாய்வு ஊடகவியலாளர் பிரியம்வதா, இந்த வாரம் தொலைக்காட்சி ஊடாக வெளியிட்ட கருத்துகள் பெரும் அதிர்வலைகளை இந்திய மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
கண்களை மூடும் போது, சாட்சியமளித்த மக்களின் கண்களும் அதிலிருந்து வழிந்தோடிய கண்ணீரும் தனது மனத் திரையை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்த முடியவில்லையென்று கவலையோடு கூறுகிறார். பிரியம்வதா.

புனையப்பட்ட காட்சிகளென "சனல் 4' தொலைக்காட்சியினர் மீதும், ஆவணப்படத்தினை உருவாக்கியவர் மீதும், எழுந்தமானமாகக் குற்றம் சுமத்தும் இலங்கை அரசு, இந்திய சுயாதீன ஊடகவியலாளர் பிரியம்வதா பதிவு செய்த, மரணங்களைக் கடந்து நீண்ட பயணம் மேற்கொண்ட வலி சுமந்த மக்களின் உண்மைச் சாட்சியங்களுக்கு, என்ன பதிலைக் கூறப் போகிறது?
சாட்சிகள் இல்லாத போர் என ஆதங்கப்படுபவர்களுக்கு, பிரியம்வதா போன்றோரின் உண்மையைக் கண்டறியும் முயற்சிகள், பல வாசல்களைத் திறந்து விடுமென நம்பலாம்.

வன்னிப் பெருநிலப் பரப்பில், மனித உரிமை மீறல்கள் அல்லது மானுடத்திற்கெதிரான குற்றங்கள் நடைபெறவில்லையென பிடிவாதம் பிடிக்கும் அரசும், அதன் அடிபணிவு அரசியல்வாதிகளும், சர்வதேச ஊடகத்தாரை அங்கு சென்று சுயாதீன நேர்காணல்களை மேற்கொள்ள அனுமதி மறுப்பது ஏன்?

அங்கு நடைபெற்ற பேரவலத்தின் ஒரு சில பக்கங்களைத்தான் தனது மூன்று நாள் விஜயத்தின்போது ஊடகவியலாளர் பிரியம்வதா பதிவு செய்துள்ளார்.
அதேவேளை, சர்வதேசத்தரம் வாய்ந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையொன்று, இலங்கையில் உருவாக்கப்பட வேண்டுமென ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்ட பரிந்துரையை அமெரிக்காவும் கூறுகின்றது.
இது சாத்தியப்படாவிட்டால் அவ்வாறான ஒரு விசாரணையை மேற்கொள்ள சர்வதேச சமூகம் நிர்ப்பந்திக்கப்படுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் எச்சரிக்கின்றார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்து, மீள்குடியேற்றங்களையும் தேசிய நல்லிணக்கத்தையும் தாம் மேற்கொள்ள முயற்சிக்கும்போது, நடந்தவற்றை கிளறி அதற்கு முட்டுக் கட்டை போடுவது பொருத்தமானதல்ல என்பதே அரச ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வாதமாக இருக்கிறது.
 இவை தவிர, தற்போது அரசியல் அமைப்பில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கச் சரத்துகளே போதுமாதானதெனவும், அதற்கு அப்பால் சென்று தீர்வு குறித்து பேசத் தேவையில்லையென்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய கூறும் அதேவேளை, தேசிய இனச் சிக்கலிற்கான அரசியல் தீர்விற்கு, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே பொருத்தமானதென, முரண்பாடான கருத்தொன்றினை முன்வைக்கிறார் அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ.

ஆகவே எவர் சொல்வதை அரசின் குரலாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற தடுமாற்றம் சர்வதேச சமூகத்திற்கு இருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான சிக்கல் எதுவும் கிடையாது என்பதே உண்மை.

இருப்பினும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு குறித்து, சர்வதேச சமூகமும் பேச ஆரம்பித்துள்ளதை உணரக் கூடியதாகவுள்ளது.
அவர்களின் போக்கிற்கு ஏற்றவாறே அரச தரப்பிலிருந்து கருத்துகள் வெளிப்படுவதை அவதானிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த திஸ்ஸ வித்தாரன தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று நாடாளுமன்ற தெரிவுக் குழு என்கின்ற புதிய முகமூடியை அணிந்துள்ளது. அதேபோன்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை, சர்வதேச தரம் வாய்ந்த விசாரணைக் குழுவொன்றிற்கு மாற்றீடாகக் காண்பிக்கும் முயற்சியை அரசு கைவிடத் தயாரில்லை.

இந்நிலையில் போர்க் குற்ற விசாரணையையா? அல்லது இன நல்லிணக்கத்தையா அல்லது இரண்டையும் சமாந்தரமாகக் காவிச் செல்லும் நகர்வினையா சர்வதேச சமூகம் மேற்கொள்ள முயற்சிக்கின்றது என்கிற கேள்வி எழுகிறது.

ஜனவரி 10 ஆம் திகதியன்று ஆரம்பமான கூட்டமைப்பிற்கும் அரசிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள், ஓகஸ்ட் 4 ஆம் திகதியுடன் 10 தடவைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பேச்சுவார்த்தையின் அடுத்த பரிமாணம், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவாக மாற்றமடைய முனையும்போதுதான், ஆட்சிமைக் கட்டமைப்பு குறித்தான எழுத்து மூலமான பதில் வேண்டுமென இரண்டு வார கால அவகாசத்தினை அரசிற்கு வழங்கியது கூட்டமைப்பு.
இதனை நிபந்தனையாகப் பார்க்கும் அமைச்சர் நிமல் சிரி பால டி சில்வா, எழுத்து மூலமாக கூட்டமைப்பு எதிர்பார்க்கும் விடயத்தை ஏன் வேண்டுகோளாக பார்க்கவில்லை.

தமது கால நீட்சித் தந்திரத்தை தமிழர் தரப்பு முறியடிக்க முயற்சிக்கிறது என்பதை புரிந்து கொள்வதாலேயே, கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகள் போல் செயல்பட முனைகிறார்கள் என குற்றச்சாட்டினை முன்வைக்கிறார் அமைச்சர்.

செப்டம்பர் 12 இல் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் அல்லது மார்ச் 2012 இல் நடைபெறும் 19 ஆவது கூட்டத் தொடரிற்கு முன்பாக, சர்வதேச சமூகத்தின் ஆதரவினை பெற வேண்டிய கட்டாயத்திற்குள் இலங்கை அரசு தள்ளப்பட்டிருப்பதைக் காணலாம்.
அரசு கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நிரந்தரமாக முறிவடைந்தால், அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி வரும் இந்தியாவிற்கு பெரும் இராஜதந்திர நெருக்கடிகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாக்குமென எதிர்பார்க்கலாம்.
இலங்கை நிலவரம்  குறித்து, இந்திய லோக் சபாவில் சுயாதீனமான அறிக்கை ஒன்றினை வாசித்து, அதில் புனர்வாழ்விற்கு இந்தியா செய்த உதவிகளை நீண்ட  பட்டியலிட்ட வெளிநாட்டமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கும்   புதிய தலைவலியை அது உருவாக்கும்.

500 உழவு இயந்திரங்கள் கொடுத்தோம். நான்கு இலட்சம் சீமெந்து பொதிகளைக் கொடுத்தோம். 10,400 மெட்ரிக் தொன் குடியிருப்பு பொருட்களை கொடுத்தோம். அரியாலையில் 1000 வீட்டிற்கு அடிக்கல் நாட்டினோம் என்பதெல்லாம், அங்கு நேரில் சென்று உண்மையின்  தரிசனத்தை உள்வாங்கிக் கொண்ட "ஹெட்லைன் டுடே' தொலைக்காட்சி ஊடகரின் ஆவணப் படம், பொய்யாகிக்கிவிட்டது.

வடக்கு ரயில் பாதைச் சீரமைப்பிற்கு 800 மில்லியன் டொலர் கடனுதவி செய்வது, காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பது, துரையப்பா விளையாட்டரங்கை மறு நிர்மாணம் செய்வது, யாழ். நகரில் கலாசார மையமொன்றினை நிறுவுவது போன்றவை, தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கப் போதுமானதென இந்தியா கருதினால், ஊடகர் பிரியம்வதா வெளிப்படுத்தும் செய்தி, பாரிய எதிர்விளைவினை எதிர்காலத்தில் உருவாக்குமென திடமாக நம்பலாம்.

ஆகவே இத்தகைய நெருக்கடியான கால கட்டத்தில், மிக இறுக்கமான நிலைப்பாட்டினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்வதை உணரக் கூடியதாகவிருக்கிறது.

            நன்றி - வீரகேசரி 

No comments:

Post a Comment