Translate

Thursday, 15 September 2011

தனது ஆட்சிக் காலத்தில் அடக்கு முறைகளையும் அநீதிகளையும் செய்த கருணாநிதி தற்போது மட்டும் தன்னை ஒரு புனிதராக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றார்! பழ. நெடுமாறன்

தனது ஆட்சிக் காலத்தில் அடக்கு முறைகளையும் அநீதிகளையும் செய்த கருணாநிதி தற்போது மட்டும் தன்னை ஒரு புனிதராக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றார்! பழ. நெடுமாறன்



கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அடக்குமுறைகளும் அநீதிகளும் எண்ணிலடங்காதவையாகும். அவசரகால நிலை இருந்தபோதுகூட இதுபோன்ற அட்டூழியங்கள் நடைபெறவில்லை.

ஆனால், தற்போது மட்டும் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சி செய்ததுபோல, தான் செய்த கொடுமைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு புனிதராகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்குக் கருணாநிதி முயற்சி செய்கிறார்.



தற்போது ஜனநாயகம், நேர்மையான தேர்தல், அவசரகால நிலைமை, பழிவாங்கும் போக்கு ஆகியவை குறித்து கருணாநிதி பேசுவதும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.
இதுதொடர்பாக தமிழகத்தின் 'தினமணி' பத்திரிகையில் ஒரு குற்றப்பத்திரிகை வடிவில் திரு பழ. நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரையின் முழு விபரமும் பின்வருமாறு உள்ளது:-


தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இருப்பதாகவும், சட்டமன்றத்தில் ஜனநாயகம் தேடப்பட்ட பொருளாகிவிட்டதாகவும், அதிமுக அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்துகொள்வதாகவும் திமுக தலைவர் கருணாநிதி சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.


இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறுவதற்கு முன்னால், அவர் தன்னைச் சுயபரிசோதனைக்கு உள்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறும் தகுதி தனக்கு உண்டா என்பதையும் அவரது மனசாட்சியிடம் கேட்டிருக்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். சிறப்புப் பயிற்சிபெற்ற காவலர்களின் தாக்குதல் படை முதன்முறையாக இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது.


கட்டுங்கடங்காத பெரும் கலவரங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்தப் படை கற்றறிந்த வழக்கறிஞர்களின் அறவழியான போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு முதன்முறையாக ஏவப்பட்டது.


1919-ம் ஆண்டில் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது பிரிட்டிஷ் ராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டு 400 பேருக்கு மேல் சுருண்டு விழுந்து செத்தனர்.


அந்தக் கொடிய ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்கு இணையாக நடந்த நிகழ்ச்சி உயர் நீதிமன்ற நிகழ்ச்சியே ஆகும். அதே காலகட்டத்தில் மதுரையில் அமைதியாக ஊர்வலமாகச் சென்ற வழக்கறிஞர்களை டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியானது.


தலைமை நீதிபதியும், தலைமைப் பதிவாளரும் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் துறையைத் தாங்கள் அழைக்கவில்லை என வெளிப்படையாக அறிவித்தார்கள். உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து தடியடி நடத்துவதற்கு காவல்துறைக்கு ஆணை பிறப்பித்தது யார் என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.


இத்துயர நிகழ்ச்சிகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா ஆணையம், காவல்துறையின் வரம்புமீறிய நடவடிக்கைகளையும் எல்லைமீறிய தாக்குதல்களையும் கண்டித்தது. அவர் அளித்த அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு ஆணை பிறப்பித்தது.
29-10-2009 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வேண்டாத நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பானவர்கள் என 4 உயர் அதிகாரிகளைப் பெயர் சுட்டி, அவர்களைத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்து, துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை பிறப்பித்த ஆணைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அன்றைய முதல்வர் கருணாநிதி இறுதிவரை முன்வரவில்லை. இந்த நிகழ்ச்சிகளுக்குத் தார்மிக ரீதியில் மட்டுமல்ல, நேரடியாகவும் முதல்வரே பொறுப்பு என்பதால்தான் தவறிழைத்த அதிகாரிகள் மீது கடைசிவரை அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.


உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொடுமைகளைப்போல, கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அடக்குமுறைகளும் அநீதிகளும் எண்ணிலடங்காதவையாகும். அவசரகால நிலை இருந்தபோதுகூட இதுபோன்ற அட்டூழியங்கள் நடைபெறவில்லை.
ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சி செய்ததுபோல, தான் செய்த கொடுமைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு புனிதராகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்குக் கருணாநிதி முயற்சி செய்கிறார். ""சட்டமன்றத்தில் ஜனநாயகம் தேடப்பட வேண்டிய பொருளாக ஆகிவிட்டது'' என குற்றம் சாட்டியிருக்கிறார்.


1972-ம் ஆண்டு திமுக பிளவுபட்டு எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக தோன்றிய பிறகு சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் வேரை அறுக்கும் முயற்சிகள் வெளிப்படையாக நடைபெற்றன. அவற்றுக்குத் தலைமை தாங்கியவர் கருணாநிதியே ஆவார்.
அப்போது பேரவைத் தலைவராக இருந்த கே.ஏ. மதியழகன் எம்.ஜி.ஆரோடு ரகசிய உறவு வைத்திருக்கிறார் என்ற காரணத்தால் அவருக்கு எதிராக பேரவைத் துணைத் தலைவராக இருந்த சீனிவாசனை முதல்வர் கருணாநிதி பயன்படுத்தி, சட்டமன்றத்தில் ஒரே நேரத்தில் இரு பேரவைத் தலைவர்கள் வீற்றிருந்து எதிர்மறையான ஆணைகளைப் பிறப்பித்து சட்டமன்றத்தை மட்டுமல்ல, ஜனநாயகத்தையே மூச்சுத் திணற வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எம்.ஜி.ஆரை அவமானகரமாகப் பேசி சபைக்கே வராமல் விரட்டியடித்தார்.
1990-ம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவைப் பெண் என்றும் பாராமல் தனது சகாக்களை விட்டுத் தாக்கச் செய்தார். சட்டமன்றத்தில் தனக்கு எதிரான நிலையெடுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், பாமக போன்ற பல கட்சிகளையும் இரண்டாக உடைத்து சாதனை படைத்தார். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க இவர் ஆற்றிய அருஞ்செயல்களைப் பட்டியலிட்டால் இடம்கொள்ளாது.


லஞ்சம், ஊழல் போன்றவற்றின் மூலம் திரட்டிய வரைமுறையில்லாத செல்வம் போதாது என்று அப்பாவிப் பொதுமக்களின் சொத்துகளையும் தொழிற்சாலைகளையும் நிலங்களையும் மிரட்டியும் சட்டவிரோதமாகவும் பறித்த குற்றச்சாட்டுகளின்பேரில் கருணாநிதியின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலரும், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும், மாவட்ட அளவில் நிர்வாகிகளாகப் பணியாற்றியவர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.


இந்த வழக்குகளை முறையாக நீதிமன்றத்தில் சந்தித்துக் குற்றமற்றவர்கள் என நிரூபித்து வெளியே வருவதற்குப் பதில், பழிவாங்கும் போக்குடன் இவர்கள் மீது பொய்யான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன என கருணாநிதி நா கூசாது பேசுகிறார்.


மேலே கண்டவர்கள் செய்த சட்டவிரோதமான செயல்கள் அனைத்தும் இவர் முதல்வராக இருந்தபோது நடைபெற்றவைதான். அப்போது அவற்றைத் தடுத்து நிறுத்தவோ, கண்டிக்கவோ முன்வராத இவர், இப்போது புலம்புவதில் எவ்விதப் பயனும் இல்லை.
சட்டம் தனது கடமையைச் செய்யும் என எத்தனை தடவை இவர் முதல்வராக இருந்தபோது சொல்லியிருக்கிறார். இப்போது சட்டம் தனது கடமையைச் செய்யும்போது அதற்கு எதிராகக் கூப்பாடு போடுவது ஏன்? உள்ளாட்சித் தேர்தலைப் பாரபட்சமற்ற முறையில் நடத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாவட்டக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தேர்தல்களை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என திமுக வற்புறுத்துவது கண்டு மக்கள் நகைக்கிறார்கள்.


கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திருமங்கலத்தில் தொடங்கி நடைபெற்ற துணைத் தேர்தல்கள் அத்தனையிலும் அராஜகம் கொடிகட்டிப் பறந்தது. திருமங்கலம் தில்லுமுல்லு என்ற புதிய தேர்தல் தந்திரத்தையே கையாண்டு வெற்றி தேடித் தந்த தனது மகனை உச்சிமுகர்ந்து பாராட்டியவர், இன்று தேர்தல்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் எனப் பேசுவது மனசாட்சியைக் கொன்ற தன்மையாகும்.


திமுகவை வீழ்த்த இந்திரா காந்தியாலே முடியாதபோது வேறு யாரால் முடியப் போகிறது எனப் பெருமை பேசியிருக்கிறார். ஏதோ இவர் இந்திராகாந்தியை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நின்றதுபோல சவடால் அடிக்கிறார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காமராஜர் - ராஜாஜி கூட்டு கண்டு பயந்து இந்திராவிடம் சரணடைந்ததை மறந்துவிட்டார்.
1975-ம் ஆண்டு அவசரகால நிலைமை இருந்தபோது இவரது ஆட்சியை இந்திரா பதவிநீக்கம் செய்ததையும், இந்திராவைச் சர்வாதிகாரி என இவரும் இவரது சகாக்களும் ஏசியதையும் வசதியாக மறந்துவிட்டு 1980 பொதுத் தேர்தலின்போது, "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என அவரிடம் சரண் புகுந்ததையும் மறைத்துப் பேசுகிறார்.


இந்திராவின் தயவால் எம்.ஜி.ஆரின் ஆட்சியைப் பதவிநீக்கம் செய்ய வைத்து மறுதேர்தலைச் சந்தித்தும்கூட எம்.ஜி.ஆரின் வெற்றியை இவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மக்களிடம் இயற்கையாகக் குடிகொண்டுள்ள மறதியைப் பயன்படுத்திக்கொண்டு பழைய நிகழ்ச்சிகளை மறைத்தும் திரித்தும் பேசுகிற கலை அவருக்கு மட்டுமே உரியதாகும்.


ஐந்துமுறை முதல்வராகப் பதவி வகித்துக் கொடிகட்டிப் பறந்தவர் இன்றைக்குக் குடியரசுத் தலைவர், ஆளுநர், மாநிலத் தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனுப்போட்டு மன்றாடும் நிலைக்கு ஆளாகியிருப்பதும், இனி யாரிடம் முறையிடுவது எனத் தேடித்தேடி அலைவதும் பரிதாபத்துக்குரியதாகும்.


ஜனநாயகம், நேர்மையான தேர்தல், அவசரகால நிலைமை, பழிவாங்கும் போக்கு ஆகியவை குறித்து கருணாநிதி பேசுவதும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்” இவ்வாறு திரு பழ. நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment