Translate

Thursday 27 October 2011

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் ஒன்றிணைவதைத் தடுக்க நடவடிக்கை - பஷில் ராஜபக்ஷ

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் ஒன்றிணைவதைத் தடுக்க நடவடிக்கை - பஷில் ராஜபக்ஷ 

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதைத் தடுக்க அரசாங்கம் அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.



அவர் அங்கு மேலும் கூறியதாவது,

புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதிக்கும், படைத் தளபதிகளுக்கும் எதிராக, உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அரசுக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றார்கள். அதனைத் தடுப்பதற்கும், அவர்கள் அரசுக்கு எதிராக ஒன்றிணைவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக, மேலும் ஐந்து புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணிப்பதிவு நடைமுறையை கூட்டமைப்பினர் எதிர்ப்பதானது அநீதியானதாகும். வடக்கு கிழக்கு மக்களின் நலன் கருதியே இந்த வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கின்றோம். வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்றத்தினால் உண்மையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் எவரும் எங்கும் வாழலாம் என்பதே எமது கொள்கையாகும். இருப்பினும் அரசாங்கம் புதிதாக எந்தவொரு சிங்களக் குடும்பத்தையும் வடபகுதியில் மீள்குடியமர்த்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

'வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் பொருட்டே அங்கு காணிப்பதிவுகளை முன்னெடுத்து வருகின்றோம். காணி விவகாரங்கள் தொடர்பில் அப்பகுதிகளில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றைத் தீர்த்துவைப்பது அவசியமானதாகும். கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள காணி உரிமையாளர்களிடம் அவற்றுக்கான எந்தவொரு ஆவணமும் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது' என்று மேலும் அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment