சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன்
புல்லரிக்கிற ஒரு கவிதையை பொழிவதற்கு புதுவை இல்லையென்றும் புனிதர்களை பல்லக்கில் ஏற்றிவைத்து பாடுதற்கு ஒரு பாவலனும் இல்லையென்றான ஏக்கவெளியில் நின்றுகொண்டு கல்லறைத்துண்டுகளை கவியாக்கி காலக்கடமையை அந்தக் காவல்தெய்வங்களின் நித்திய கடனை நிறைவேற்ற நெஞ்சம் பதறிடுமாம்.
எருக்கலைக்காடாய் எவனோ மிதித்து எச்சில்படுத்தும் குப்பைகளின் மேடாய் என் சொத்தென்று பத்திரங்கள் நிரப்பி பாழாய்ப் போனவர்கள் வேலியிடும் வம்சப் பெருவடுவாய் எம் குஞ்சுகளை மலர்தூவி மார்பில் இறுமாந்து மண்ணள்ளித்தூவி மலையாய் நிமிர்ந்த சத்தியமைந்தர்களின் சாவற்ற சந்நிதி நித்தியம் பார்த்து நாம் நெகிழ்ந்த நெருப்புகளின் இருப்பு தொழுதிட முடியா துரதிஸ்டமாயிற்று.
ஒன்றா இரண்டா ஓராயிரம் கனவல்லவா கண்டார் நிச்சயம் ஒரு நினைவழியா நாள் வருமென்றுதானே கொற்றவைதேவியின் கோயிலில் இத்தனை செல்வங்களும் இரத்தபுஸ்பங்களாய் சத்திய வரிகளை எழுதிச் சாய்ந்தனர்.
பற்றி எரிகிறது வயிறு இத்தனை பெரிய அடிமை இருளில் ஏங்கித்திரியவா பச்சைக் குழந்தைகள் பாடை ஏறினர்.
ஆற்றலின் உறைவிடமாய் இருந்த வீடு தோற்றதன் மாயமென்ன
தோற்றதா இல்லை தொலைந்ததா அல்லது அஸ்தமன திசையின் அகங்கார வெறிக்குள் வீழ்த்தப்பட்டதா
உலகாதிக்கத்தின் உன்னதம் அறியாத்தனத்தில் உறைந்து போனதா
என்ன நடந்தது. என்ன நடந்தது. ஏன் நடந்தது. எப்படி நடந்தது.
இந்தக் கேள்விகளை கேட்கும்போதெல்லாம் ஈழத்தமிழன் செத்துப்போகிறான்.
கல்லறைகள் தழுவி கண்ணீர் விட்டழுது என் மனக்கிடக்கைகளை மருந்திட்டு மனமாறிப்போகலாம் எங்கே என் திருக்குழந்தைகளின் திண்ணிய மேனி நீள் துயில்கொண்ட திருநிலம் இல்லையே கண்ணெதிரில் கிடக்கிறது கசக்கி எறியப்பட்ட கனவுகளின் விளைநிலம் எண்ணமுடியாத் துயரில் என் கார்த்திகை கடக்கின்றது.
கண்ணீர் விட்டு ஓவென்று அழுதால் காவல் நிலையங்களுக்கு காரணம் சொல்லவேண்டும் அடக்கிக் கொள்கிறேன்.
மரணித்தவர்களை நினைப்பது கூட மகா குற்றம் என்ற நிலையில் இன்றைய நாட்களில் என் பெயரை மரக்கட்டை என்று மாற்றிக்கொண்டேன்.
ஈகத்தின் இமயத்தை தொட்டவர்க்கு நெய் விளக்குகள் ஏற்றமுடியவில்லை மெய் விளக்குகள் உள்ளே ஓங்கி எரிகின்றன.
மடியில் இருக்கும் போதும் மண்ணுக்குள் இருக்கும் போதும் தன் பிள்ளையின் எண்ணம் தாயறிவாள் அம்மாவின் அரவணைப்பை பிள்ளை ஆதர்சமாய் அடையும் அதை எந்த வல்லரசாலும் வெல்லமுடியாது.
உயர்ந்த காதலின் மொழியை எங்கள் ஊருக்குள் எழுதினால் விசாரிக்கப்படுவேன் வெறித்தனத்தால் முறைக்கப்படுவேன் இழுத்தேற்றப்படுவேன் எலும்புகள் முறிக்கப்படுவேன் கல்லறையை பாடியதற்காய் கதை முடிக்கப்படுவேன் என்பதனால் நான் மட்டும் பாடுகின்றேன்.
கல்லறைக்குப்போன காவியங்களே! நீங்கள் மட்டும் தமிழர்கள். நீங்களே தமிழர்கள். அன்றாடம் ரணப்படுகிறோம் தமிழர்களா நாம்.
நேற்றுத்தான் உங்களை நெஞ்சமெலாம் வைத்து போற்றுவதாய் புளுகினோம் புளகாங்கிதம் அடைந்தோம். முந்திக்கொண்டு முறுக்கேற பேசினோம் இன்று எல்லாம் வீண்வேலை என்கிறோம்.
கதிரை அரசியலே கடவுள் என்கிறோம். எங்கள் கடைக்கோடி வரை வந்து எவன் எவனொ களவெடுக்கிறான் கற்பை உருவுகிறான் கன்னத்தில் அறைகிறான் செத்தபிணம்போல திரிகிறோம்.
எங்களில் சில பேருக்கு நேற்று அப்பிடியும் இன்று இப்படியும் எப்படி முடிகிறது. சிலர் இருக்கும் வரைகூட இனிய நிலம் விடியாது. நினைவுகளை நெருங்க முடியாது.
புல்முளைப்பதற்கா புண்ணியர்கள் எருவானார்கள். தலைகுனிவதற்கா தங்கைகள் வெடியானார்கள். புற்றெடுப்பதற்கா புதுச்சரிதம் எழுதினார்கள்.
ஒவ்வொன்றாய் இன்முகங்கள் இதயத்தில் எழுகின்றன. அந்த நாட்களை ஆராதிக்க தவிக்கின்றேன். இந்த தெருக்களுக்கு அவர்கள்தான் அழகு எந்தப் பாடலுக்கும் அவர்கள்தான் அழகு எந்த இரகசியத்துக்கும் அவர்கள்தான் அழகு எந்த பேரொலிக்கும் அவர்கள்தான் அழகு எந்த புன்னகைக்கும் அவர்கள்தான் அழகு அவர்கள் இல்லாத நாட்கள் சூனியம்தான்.
கார்த்திகையே! ஏன் எனை தீண்டுகிறாய்
எத்தனை இரவுகள்
எத்தனை விழிப்புகள்
எத்தனை ஆச்சரியங்கள்
எத்தனை தவிப்புகள்
எத்தனை சத்தியங்கள்
எத்தனை பிரிவுகள்
எத்தனை சந்திப்புகள்
எத்தனை நட்புகள்
எத்தனை காதல்கள்
எத்தனை தவங்கள்
எத்தனை மௌனங்கள்
எத்தனை காயங்கள்
எத்தனை வருடல்கள்
எத்தனை எதிர்பார்ப்புகள்
எத்தனை விழிப்புகள்
எத்தனை ஆச்சரியங்கள்
எத்தனை தவிப்புகள்
எத்தனை சத்தியங்கள்
எத்தனை பிரிவுகள்
எத்தனை சந்திப்புகள்
எத்தனை நட்புகள்
எத்தனை காதல்கள்
எத்தனை தவங்கள்
எத்தனை மௌனங்கள்
எத்தனை காயங்கள்
எத்தனை வருடல்கள்
எத்தனை எதிர்பார்ப்புகள்
ஓர் அழகிய சாலை பாதங்களை இழந்து பாழடைந்து கிடக்கின்றது ஒற்றைக் கண்ணீரில் விழுந்துடைகின்றது ஒரு இராச்சியத்தின் கனவு.
எத்தனை நாட்களை கொண்டாட நாம் சித்தங்கொண்டிருந்தோம் இன்று ஒற்றை நாளைக்கூட கண்ணிலொற்ற மறுக்கப்பட்டோம்.
கொள்கை பற்றி கொளுத்தி எறிந்தவர்கள் எல்லாம் முடிந்ததென்று எதிரிகள் காலடிக்கு சரணம்பாட சம்மதமானபோது நம் குலத்து இளவல்கள் இருவர் வானமேறி வதம்செய்ய போனார்கள்.
பொக்கணையின் உப்புவெளியே இரணைப்பாலையின் இதயமே எடுத்துரை ஈகம் செய்த எம் தேவமைந்தர்களின் விடியலின் நம்பிக்கையை.
வானவியலை எங்கள் வரலாற்றை அகிலத்தின் மொழிகளை ஆழப் படித்தவர்கள்தான் அவர்கள் இறுதி வேளையிலும் உறுதிகுலையாதிருந்தார் எழுந்தார் பறந்தார் மடிந்தார் எங்கள் மானக்கொடி பறக்குமென்று.
நாங்கள் எல்லாம் நடப்பதறிந்த ஞானிகள் என்று உயிர்கொண்டோடி வந்து இன்று சந்தியிலும் சபையிலும் முந்திக்கொண்டு பேசுகிறது.
தன்மானம் இழந்து தாய்மானம் விற்று அடிமைச் சாசனத்தை ஆரத் தழுவியதன் அடையாளம்.
நாம் இழந்தது எப்பெருமிடுக்கென்று எவரேனும் உணர்ந்தீரா காலத்தின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஈழத் தமிழனுக்கு இனியொரு தலைவனில்லை என்பதுணர்ந்தீரா.
எல்லா முகங்களிலும் ஏகப்பட்ட குறைபாடுகள்.
சின்னத் துரோகங்களுக்கே சீறிய நாங்கள் இப்போது எண்ணற்ற துரோகங்களோடு வாழ்க்கை நடத்த வஞ்சிக்கப்பட்டோம்.
அர்ப்பணிப்புக்கெல்லாம் ஆயிரம் ஆயிரம் வரைவிலக்கணம் எழுதிய பிரம்மாக்கள் இப்போது அடிவருடுவதும் ஒரு வகை அழகென்று முடிவெடுத்து திரிகின்றார்.
கொடி பிடித்து கூட்டம் நடத்தியவர்கள் எல்லாம் கொள்கை என்ன கொள்கை எல்லாம் குடுக்கிறதை வாங்கிக்கொண்டு அடங்கிறதுதான் அறிவென்று அலட்டுவதை இப்போது வீரம் விளைந்த மண்ணில் மலிவாக கேட்டு மனம் வேகலாம்.
பாவம் அந்த வாலிபத்தை தொலைத்து வாழ்க்கையை முடித்து ஈழம் காணப் போன இதய தெய்வங்கள்.
கார்த்திகை எங்கள் இனத்துக்கும் மானத்துக்கும் எழுதுகிற கதையை சொல்லத்தவித்து துவழும் உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம் இது.
ஓ! உள்ளுறையும் உற்பவங்களே! நேற்று நடந்தவற்றுள் தோற்றுப்போன கதைதான் பலரின் ஞானத்துக்கு எட்டியது வென்ற கதை நூறு இருந்ததை அறிய நாளைவரை காத்திருக்க வேண்டும்.
ஓ! உள்ளுறையும் உற்பவங்களே! நேற்று நடந்தவற்றுள் தோற்றுப்போன கதைதான் பலரின் ஞானத்துக்கு எட்டியது வென்ற கதை நூறு இருந்ததை அறிய நாளைவரை காத்திருக்க வேண்டும்.
விடுதலைப் போர்களில் நிச்சயம் இந்த விந்தைகள் இருக்கும்.
ஆயுத்ததோடு சம்மந்தப்பட்டதாக அறியப்பட்டாலும் ஆழ் மனதோடும் பிரிக்கமுடியாத பேராற்றல் பெற்றது விடுதலை தேடல்.
இந்த இடத்தில் உலகம் தமிழர்களிடம் தோற்றுக் கிடக்கின்றது.
பிரபாகரனை பிடிக்காத மேதாவிகளுக்கு தமிழர்களை பிடிக்கிறது என்பது கோமாளித்தனம்.
பிரபாகரனை சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் அரசியல் நடத்துகிற நாகரிகம் இப்போது. மாவீரர்கள் என்ற வரலாற்றுச் சொல்லை உச்சரித்தால் தங்கள் அரசியலுக்கு தள்ளாட்டமே இல்லையென்பது மக்களை நாடி பிடித்தவர்களுக்கு நன்றாக தெரியும்.
கல்லறைகளும் கறைபடிந்த இலங்கை அரசியலுக்கு சில்லறைகளாக மாறிவிட்டன என்பது ஒரு புறம் கவலைதான்.
தியாகங்களை பேசுகின்றவர்கள் எங்கள் தாயகம் வடக்கு கிழக்கு இணைந்தது என்பதை எண்ணத்தில் வைக்கவேண்டும்.
பிரிக்கப்பட்ட எமது இராச்சியத்தில் முதல் அமைச்சராக வருவது யார் என்பதற்கு அடிபடுவதல்ல வரலாற்றுக் கடமை.
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களின் இரத்த ஓலம் உயரக் கிளம்பியபோது கொன்றவன் கூத்துக்கு தாளமிட்டவர்களையெல்லாம் தண்ணி தெளித்துவிட்டு துரோகத்துடக்கு போயிற்றென்று அடிவீட்டில் வைத்து விருந்தளித்து அர்ப்பணிப்பு நிறைந்த மண்ணில் ஆழ இடங்கொடுத்தால் வரலாறு மன்னிக்காது.
தியாகங்களை வைத்து நடத்துகிற அரசியல் புனிதமற்று போய்முடியும்.
மக்களின் மாவீரர்களின் குருதியில் விரிந்தது ஒரு செங்கம்பளம் அதில் அமெரிக்க இராசாங்கம் போனது எங்கள் மன்றம் இன்று.
வென்றவர்கள் மண்ணுறைந்துள்ளார்கள் விண்ணாய் எழுதிய அவர்களின் வீரியத்தின் விளைவுகளை ஒன்றாய் நின்று உயர்ந்த எண்ணங்களோடு வாங்குக என்பதுதான் எங்கள் வாசலில் கேட்கிற அறைகூவல்.
அகில இலங்கைக்குள் அடிக்கடி சத்திய பிரமாணங்கள் செய்து கொண்டு உரிமை பற்றி பேசுவதில் எந்த உரப்பும் கிடையாது.
செத்தவர்களின் மேடுகளில் நின்றுகொண்டு இன்னும் பத்தோ இருபது வருடங்கள் தமிழர்களின் வரைவிலக்கண வகுப்பு எடுத்தால் அரசமர விழுதுகளில் நம் அரசியல் சிக்குண்டு நம் இனம் தொலைந்து போகிற துரதிஸ்டம் நிகழும்.
என் ஊரில்ஒருவன் தமிழ்ச்சங்க கடிதத் தலைப்பில் இருந்து புலிச்சின்னத்தை அகற்றி தன் சிங்க விசுவாசத்தை செதுக்கியிருப்பது இனிவரும் காலத்தின் எம் இன இழி நிலைமைக்கான முன்னோட்டம்.
சோழன் மன்னன் இருந்தான் என்று ஈழத் தமிழ் சங்கங்களில் எவனும் இனி பேசானாக்கும்.
நம் கண்ணெதிரில் நிகழ்ந்த நெருப்பு வரலாற்றை தமிழன் சாதித்த சரித்திரத்தை தூக்கி எறிந்துவிட்டு பாட்டி வடை சுட்ட கதைசொல்லும் கலாச்சார மேடைகளும் மண்ணாடை இல்லாத மாநாடுகளும் பொன்னடைக்குள் மினுங்கும் போராட்டத்தில் பங்கொன்றும் எடுக்காத பெருந்தியாகிகளும் என்று ஊர் தெரு நரிகளின் ஊளையால் நாறிக்கிடக்கின்றது.
ஈக வர்ணங்களால் எழுந்திருந்த நம் தேசம் இன்று நாச வர்ணங்களால் நலிவுற்றுக்கிடக்கின்றது.
இப்படி எல்லாம் எழுதுவதால் துப்பாக்கிக்கு துதிபாடுதல் என்று பொருளல்ல மரணமே என் வாசலில் மீண்டும் மலிந்திடுக என்ற வலிந்த அழைப்பல்ல.
மீண்டும் ஒரு பதினாறு வயது இளவல் தன் வாழ் நாளை இனத்துக்காக கொடுத்து தன் வசந்தங்களை துறந்து காட்டிலும் மேட்டிலும் இரவுகள் நூறை துறந்து இனிமைகள் கோடி துறந்து இறுதியில் கொடுந்துயர் ஒன்றை தன்னினத்துக்காக சுமக்காதிருக்க.
காலவெளியில் கரிகாலன்போல் (பிரபாகரன்) அவன் சேனை நடத்திய வீரமறவர்போல் மங்கையர்போல் இனியொருபோதும் தமிழனுக்கில்லை தனிநிமிர்வு.
கார்த்திகை தனித்திருந்தெழுதும் என் புலம்பல் வெளியாயினும் தமிழன் மனச்சாட்சியை உரசிப்பார்க்கும் உன்னத இடம்.
பாதைகளை சரிபார்க்கும் கலங்கரை. இந்த நாளில் அக்கணத்தில் அச்சுடர்கள் எரியும் எவர் கண்ணும் அறியா எம்மண் அறியும் அந்த அக்கினிச்சுவாலையின் அர்த்தத்தை. எங்களில் ஒவ்வொருவர் வீழும் போதும் நாம் ஓவென்றழுதோம் அவ்வொலி ஓர் நாள் எரிமலையின் குமுறலாய் ஒலிக்கும்.
எம் மனங்களை சரி செய்வோம் அதுவே இனத்துக்கு தரப்படுகின்ற ஆயுதம்.
மாவீரர்களே! மரணத்தின் பின்னும் உறங்க இடம் மறுக்கப்பட்டதிலிருந்து உங்கள் வீரத்தின் உச்சமும் அது தரும் அச்சமும் உணரப்படுகின்றது.
No comments:
Post a Comment