Translate

Monday, 21 November 2011

வெளி மாவட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் அத்து மீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர்: யோகேஸ்வரன் _


  மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையிலுள்ள கிரான் பிரதேச கால் நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் அத்து மீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். 


இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு எழுத்து மூலம் கொண்டு வந்துள்ள அவர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுவின் 28.10.2011 இல் திகதி கூட்ட தீர்மானத்தின்படி இப்பிரதேச கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையாக தீர்மானிக்கப்பட்ட பெரிய மாதவனை, வம்மிக்குளவெட்டை, கோழிவளை, அத்திக்கல்வட்டை, மயிலத்தமடு ஆகிய பகுதிகளுக்கு தற்போது கால்நடைகள் பிரதேச கால்நடைப் பண்ணையாளர்களினால் மேய்ச்சலுக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையாக மாதுறுஓயா பாலம் பெரிய மாதவனை எல்லையாக ஏற்கனவே அடையாளமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தெய்யத்தக்கண்டி உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் அத்து மீறி கிட்டத்தட்ட 15 கிலோ மீற்றர் வரை நுழைந்து விவசாய செய்கையில் தற்போது ஈடுபட்டுள்ளனர் இதுவும் ஒரு அத்து மீறிய குடியேற்ற செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

தங்கள் ஆளுகைக்குட்பட்ட மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இவ் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்படும் காணியில் பெரும்பான்மை இன சிங்கள விவசாயிகள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து தமது கமச் செய்கையை ஆரம்பித்துள்ளனர் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இதனால் எமது பிரதேச கால்நடைப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தின் வளமிக்க மாதுறுஓயா பூமியானது திட்டமிட்டு பெரும்பான்மை மக்களால் சுவீகரிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

இச் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது இப்பெரும்பான்மை இனத்தினர் எங்களது கால்நடை பராமரிப்பு மேய்ச்சல் தரையின் கமம் செய்ய தற்போது உழுது கொண்டிருக்கும் செயற்பாட்டை உடன் தடுத்து நிறுத்துமாறும், இவ்வேளை எல்லைக் கிராமமாக அருகில் உள்ள அறணஹங்வெல என்ற சிங்கள கிராமங்களையும் தாண்டி தெய்யத்தக்கண்டி போன்ற அம்பாறை மாவட்ட கிராமங்களில் இருந்து இங்கு கமம் செய்ய வந்துள்ளனர் என்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். _

No comments:

Post a Comment