Translate

Thursday, 24 November 2011

யாழ் பல்கலைக்கழகத்தில் எழுச்சிச் சுவரொட்டிகள் - படைப் புலனாய்வாளர்கள் அடாவடித்தனம்

யாழ் பல்கலைக்கழகத்தில் எழுச்சிச் சுவரொட்டிகள் - படைப் புலனாய்வாளர்கள் அடாவடித்தனம்

யாழ் பல்கழலக்கழக வளாகத்தினுள் இன்று (24-11-2011) பல இடங்களில் எழுச்சிச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாணவர்கள் புத்தெழுச்சியுடன் காணப்பட்டனர்.

யாழ் பல்கலைக்கழகை வளாகத்தின் முக்கியமான பகுதிகளில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. குறிப்பாக மாணவர் பொது மண்டபம் மற்றும் ஈருறுளி தரிப்பிடம் போன்ற பகுதிகளில் இவை காணப்பட்டன.


தமிழீழத் தேசியத் தலைவரின் 57வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று மாலை சில இடங்களில் எழுச்சி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் பல சுவரொட்டிகள் மாவீரர் நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்தன.

‘சத்திய இலட்சிய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய, மான மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்து சுதந்திர தமிழீழத்தை வென்றுடுக்க உறுதி பூணுவோம்’ என்ற வாசகம் அடங்கிய எழுச்சி சுவரொட்டிகளே ஒட்டிப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் வரையான படைகள் குவிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் மாவீரர்களை நினைவேந்தும் இவ் வாரத்தில் அதிகளவு சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆலயங்களில் மணி ஒலிக்கவும் ஆக்கிரமிப்புப் படையினர் தடை விதித்துள்ளனர்.

அத்துடன், படைப் புலனாய்வாளர்களினதும், படைத்துணைக் குழுக்களினதும் கண்காணிப்புக்கு மத்தியில் யாழ் பல்கலை வளாகத்தினுள் ஒட்டப்பட்ட இவ் எழுச்சிப் பிரசுரங்கள் சிறீலங்கா அரசுக்கும் படைகளுக்கும் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், படையினர் மாணவர்கள் மீது வன்முறையை பிரயோகிகக்கூடும் என்ற அச்ச நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றிக் கருத்து வெளியிட்டுள்ள மாணவர்கள் அடக்குமுறைகளும், கொலைகளும் எமது மனங்களுக்குள் வாழும் மாவீரர்களின் நினைவுகளையும், தமிழ் மக்களின் இலட்சியத்துக்கான அவர்களின் ஈகங்;களையும் என்றும் அழித்துவிடாது என்பது இந்த சுவரொட்டிகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது என்றும், இதனை சிறீலங்கா அரசாங்கமும், அனைத்துலக சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்புப் படைகளின் அடாவடித்தனம்:

யாழ் பல்கலைக்கழகத்திற்குள் ஒட்டப்பட்டிருந்த மாவீரரை கொளரவிக்கும் எழுச்சி சுவரொட்டிகள் உந்துருளிகளில் சென்ற படைப்புனாய்வாளர்களால் அபகரித்து செல்லப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை முதல் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இடங்களில் மாவீரர்களை கௌரவிக்கும் எழுச்சி வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மாணவர்களால் ஒட்டப்பட்டிருந்தன. 

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 1.45 அளவில் தமது முகங்களை துணிகளால் மூடிக்கட்டியவாறு உந்துருளிகளில் சென்ற 6 பேர் கொண்ட ஆயுதக் குழு, யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலின் ஊடாக உள்நுளைந்து அடாவடித்தனம் புரிந்துள்ளனர்.

படைப்புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் இந்த நபர்கள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த பொது மண்டப சுவரொட்டி பலகையின் கண்ணாடியை உடைத்து அவற்றை எடுத்து சென்றுள்ளதாக மாணவர்கள் மேலும் கூறினர்.

பட்டப்பகலில் பல்கலைக்கழக நிர்வாகம் பார்த்திருக்க, கறுப்புக் கண்ணாடிகள் அணிந்தவாறு, முகத்தை துணியால் மறைத்தவாறும் ஆயுதங்களுடன் பல்கலைக்கழகத்தினுள் புகுந்து அனாகரீகமான முறையில் சிறீலங்கா படைப்புலனாய்வாளர்கள் நடந்து கொண்டதாக மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரது இந்த நடவடிக்கையானது,  தமிழீழ மக்களின் விடுதலை வேட்கை பற்றிய அவர்களின் மனக்கிலேசத்தையும், அச்சத்தையும் வெளிக்காட்டி இருப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறினார்.

சுவரொட்டிகளை அப்புறப்படுத்தி மாணவர்களை அச்சப்படுத்திவிடலாம் என சிறீலங்காப் படையினர் கற்பனை செய்வதாகவும், ஆனால் உண்மையில் விடுதலைக்கான பற்றுறுதி தற்போது மாணவர்களிடத்தில் மேலும் அதிகரித்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறீலங்கா அரசாங்கம், மற்றும் படைகளின் அடக்குமுறை எந்த வடிவில் தொடர்ந்தாலும், தமது விடுதலை வேட்கையையும், எழுச்சியையும் தடுத்து நிறுத்த முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment