தமிழக-கேரள எல்லையில் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் சீமான் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தத் திரண்டபோது போலீஸார் அனைவரையும் தடுத்துக் கைது செய்தனர் என அதிர்வு இணையம் அறிகிறது.
முல்லை பெரியாறு அணை பிரச்சனை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் தமிழகத்துடன் கேரளாவை இணைக்கும் 13 பாதைகளில் பெரும் பாலான பாதைகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வாகனமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் முரண்டு பிடிக்கும் கேரளாவுக்கு பொருளாதார தடை மூலம்தான் பாடம் புகட்ட முடியும் என பல்வேறு அமைப்புகள் உறுதியுடன் நம்பி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அத்திவாசிய பொருட்கள் கொண்டு செல்ல தொடர் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது அதிகளவிலான பாதுகாப்புடன் உள்ள செங்கோட்டை புளியரை சாலையில் சராசரியாக 4 ஆயிரம் வாகனங்கள் கேரளா நோக்கி சென்று வருவதால் இப்பாதையில் பொருளாதார தடை மறியல் போராட்டத்தினை நடத்திட முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு குழு அமைக்கப்பட்டு இன்று காலை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளியரையில் காலை 11 மணி அளவில் நாம் தமிழர் இயக்குனர் சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
சீமான் தலைமையில் 2500க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டபடி முன்னேறினர். உம்மன் சாண்டியின் கொடும்பாவியையும் கொளுத்தினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அப்பாவித் தமிழர்களை தாக்குவது கண்டிக்கத் தக்கது. தமிழர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறைகளில் இருக்கும் நாம் தமிழர் தம்பிகளை தமிழக அரசு விடுவிக்க வேண்டும். அணை விவகாரத்தை நாம் தமிழர் இயக்கம் முன்னெடுத்துச்செல்லும் என்றார்
No comments:
Post a Comment