Translate

Thursday 19 January 2012

காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி இனி நாம் அரசுடன் பேசவேண்டிய தேவை இல்லை: அவை 13க்குள் அடங்குவதாக எம்.ஏ.சுமந்திரன் கருத்து.



13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார். அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் என்னென்ன விடயங்களைப் பகிர்வது என்பது பற்றித்தான் இனித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேசும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்றுமுன்தினம் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வை முன்வைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.
இக்கருத்துத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே சுமந்திரன் எம் பி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவிடம் தெரிவித்திருப்பதை நாம் வரவேற்கிறோம். இது வார்த்தையளவில் இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டும். ஜனாதிபதி இப்படிக் கூறிவிட்டதனால் காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி இனி நாம் அரசுடன் பேசவேண்டிய தேவை இல்லை. ஏனெனில், 13ஆவது திருத்தத்தில் இவை உள்ளடங்குகின்றன.
இனி அந்த விடயங்களை அமுலாக்கத்தை அர்த்தப்படுத்துவது பற்றித்தான் பேசவேண்டும். 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று சில விடயங்களை அர்த்தமுள்ளதாக்குவதுதான் இனி எமது செயற்பாடாக இருக்கவேண்டுமென நாம் கருதுகிறோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எமது பெயர்களை அனுப்புவது தொடர்பான நிலைப்பாட்டில் நாம் இன்னமும் உறுதியாகவே உள்ளோம். ஆனாலும், 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அவசியமும் எழாது என்றார் சுமந்திரன்.

No comments:

Post a Comment