அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுக்கள் முடங்கியுள்ள நிலையில், கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளத் தயராகி வருகின்றனர். அநேகமாக அடுத்த மாத நடுப்பகுதியில் இந்தப் பயணம் இடம்பெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பல தடவை புதுடில்லிக்குச் சென்ற கூட்டமைப்பினர், அந்நாட்டு பிரதமர் மன்மோகன் சிங்கைக் கூட்டாகச் சந்திக்க நேரகாலம் வாய்ப்பு கிட்டவில்லை. தலைவர் சம்பந்தன் மட்டுமே ஒருதடவை மன்மோகனைச் சந்தித்திருந்தார். ஆனால் இம்முறை கூட்டமைப்பினர் மன்மோகன் சிங் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துவர் என்று கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்றே விரைவில் இந்தியா விரைகின்றது என்று பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய இராஜதந்திரி ஒருவர் நேற்று கொழும்பில் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த 16ஆம் திகதி சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்து கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரியவருகிறது.ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசவுள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment