Translate

Thursday, 26 January 2012

பான் கி மூனின் ஆலோசகராக விஜய் நம்பியார் நியமனம்

நியூயார்க்: ஐநா பொதுச்செயலர் பான் கி மூனின் மியான்மருக்கான சிறப்பு ஆலோசகராக இந்தியத் தூதர் விஜய் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய் நம்பியார் 2007ம் ஆண்டில் இருந்து ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாகவும், பான் கி மூனின் தலைமை அலுவலராகவும் இருந்து வருகிறார். இந் நிலையில் தலைமை அலுவலர் பதவியில் இருந்து விலக நம்பியார் விருப்பம் தெரிவித்திருந்தார்.


இந் நிலையில் அவரை மியான்மருக்கான தனது சிறப்பு ஆலோசகராக பான் கி மூன் நியமித்துள்ளார்.

இதற்கு முன் பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதராகவும் நம்பியார் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் பான் கி மூன் மியான்மாருக்கு பயணம் செய்யவுள்ள நிலையில், அந் நாட்டுக்கான தனது சிறப்பு ஆலோசகராக நம்பியாரை நியமித்துள்ளார்.

2009ம் ஆண்டில் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதியாக கொழும்பு சென்ற விஜய் நம்பியார், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கை அரசு அமைத்துக் கொடுத்திருந்த முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பாராட்டித் தள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நம்பியாரின் சகோதரர் சதீஷ் நம்பியார், ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை சென்ற இந்திய அமைதி காக்கும் படையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பதும் நினைவுகூறத்தக்கது

No comments:

Post a Comment