தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பு, விடுதலை குறித்து அரசாங்கம் மேலும் அக்கறை கொள்ள வேண்டும். கைதிகளின் பொருட்கள் விரைவில் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். நாட்டிலுள்ள ஏனைய பல சிறைச்சாலைகளிலும் இதற்கு முன்னர் இப்படியான துரதிஷ்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.
சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற இவ்வாறான அமைதியின்மையினால் பாக்கு வெட்டியில் சிக்கித் தவிக்கும் பாக்கைப் போன்ற நிலைமை தமிழ்க் கைதிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல சங்கடங்களுக்கு அவர்கள் முகங்கொடுத்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமையாகும். அத்துடன், இன்னும் வழக்குத் தொடராமல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்க் கைதிகள் பலர் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதேபோன்றே பல தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களது வழக்குவிசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாகக் குறித்த வழக்கு விசாரணை நிறைவுக்கு வரும் முன்னரே வருடக்கணக்காக இந்த சிறைக்கைதிகளுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்டுள்ளது. உண்மையாகவே இது அநீதியாகும்.
இதேவேளை வழக்குத் தொடர்வதற்கு போதியளவான சாட்சிகள் இல்லாத போதிலும் பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும். வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் வழக்குகளை விரைவில் தீர்ப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். யுத்தம் முடிவுக்கு வந்த கால கட்டத்தில் அரச படையினருக்கு எதிராக முகத்துக்கு முகம் நின்று போர் செய்து பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றனர். இதற்கு ஒப்பாக அல்லது சமனாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் என்ற சந்தேக நபர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இதுவே நீதியாகும்.
அத்துடன், தமிழர்களின் மனங்களை வெல்வதற்கும், நம்பிக்கையை உறுதி செய்துகொள்வதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையி;ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை அவர்களது சொந்த இடங்களிலுள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைதிகளைப் பார்க்க வருகை தரும் அவர்களது உறவினர்களுக்கு செய்துகொடுக்கப்படும் வசதியாக இது அமையும்.
அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக வேறு இடங்களிலுள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் தனிப்பட்ட உடைகள் மற்றும் பொருட்களை அவர்களிடம் கொண்டுசென்று வழங்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைக்கைதிகளும் மனிதர்கள் என்ற சிறைச்சாலைத் தொனிப்பொருளின் அடிப்படையில் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கின்றேன். ___
No comments:
Post a Comment