Translate

Tuesday, 17 January 2012

ஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொல்லப்பட்டது கொடூரமானது: நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்


சபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் சாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர் மீது வென்னீர் ஊற்றித் தாக்கியதால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் வேதனையளிக்கிறது.

கடந்த 8ஆம் தேதி பம்பையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வென்னீர் ஊற்றியதால் இடுப்பிலும், முதுகிலும் ஏற்பட்ட கடுமையானத் தீக்காயங்களுடன் கோட்டயம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தவேலுவின் உடல் நிலை மோசமானதையடுத்து, அவரது மனைவியும் உறவினர்களும் அவரை சென்னைக்கு அழைத்து வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனிக்காத நிலையில், திங்கட்கிழமை சாந்தவேலு உயிரிந்துள்ளார்.
முதல் முறையாக சபரிமலைக்குச் சென்ற சாந்தவேலு, அங்கிருந்த தேநீர் கடைக்காரருக்கும் தனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதன் விளைவாகவே கடைக்காரர் உள்ளிட்ட சிலர் தன்னைத் தாக்கினார்கள் என்பதையும், அப்போது கடைக்காரர் கொதிக்கும் வென்னீரை தன் மீது ஊற்றியதாகவும் கோட்டயம் மருத்துவமனையில் தன்னை வந்த பார்த்த மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். மகரசோதியை முன்னிட்டு சபரிமலைக்கு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பம்பையில் குவிந்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசும், அதன் முதலமைச்சர் உம்மண் சாண்டியும் கூறிய நிலையில், அங்கு காவலர்கள் யாரும் வந்து தகராறைத் தடுக்காத்தும், அந்தச் சம்பவம் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாததும் ஏன்?
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை காரணமாக கேரளத்து அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு எதிராக கிளப்பிவிடும் பொய்ப் பரப்புரையின் காரணமாக பதற்றம் நிலவிவரும் நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மண் சாண்டி அளித்த உறுதிமொழி வெற்று வார்த்தைகள் என்பது நிரூபணமாகியுள்ளது. கேரளத்தில் தமிழர்களுக்கு எதிரான பகையுணர்வு எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு அத்தாட்சியாகும்.
சாந்தவேலுவை தன்னோடு அழைத்துச் சென்ற சந்திரகுருசாமி தன் குழுவினருடன், தகராறு நடந்தபோது அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளதாக அவரது மனைவி தமிழக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் மீது தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி முழுமையான புலனாய்வு செய்து, சந்தவேலுவைக் கொன்ற மலையாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்குப் பின் ஐயப்ப பக்தர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். அது இப்போது ஒரு கொலையில் முடிந்துள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னரும் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்குத் தமிழ் பக்தர்கள் செல்ல வேண்டுமா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
கோயில்கள் நிறைந்த நம் தமிழ்நாட்டில் எல்லா கடவுள்களுக்கும் ஆலயங்கள் உள்ளதே. தமிழ்க் கடவுளாம் முருகனின் ஆறுபடை வீடுகளைத் தாண்டி புனிதத் தலம் வேறு என்ன வேண்டும்?
தமிழனை எவ்வளவு அடித்தாலும் அவன் சபரிமலைக்கு வருவான் என்ற எண்ணம் காரணமாகவே, சபரிமலை பக்தர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படாததும், அதன் காரணமாகவே கடந்த ஆண்டு புல்மோட்டில் விபத்தும் ஏற்பட்டது. போதுமான தூய்மைச் சூழலற்ற நிலையிலேயே சபரிமலை யாத்திரைக்கு தமிழர்கள் சென்று வருகின்றனர். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தமிழர்கள் அங்கு சென்று வருவதால்தான் இன்றைக்கு ஒரு ஐயப்ப பக்தர் இப்படி கொடூரமான கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்குச் செல்வதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி உள்ளன்போடு வேண்டுகோள் விடுக்கிறது.

No comments:

Post a Comment