Translate

Monday, 16 January 2012

உரிமைகளை மீட்க உறுதியேற்றுப் பொங்கலிடுவோம்- நாம் தமிழர் கட்சி

மானுடத்தின் முதன்மைக் குடியாய் பண்பட்ட வாழ்க்கையாலும் ஆளுமையினாலும் உலக வரலாற்றில் அழுத்தமாகத் தடம் பதித்த இனமாய் இயற்கையின் கடும் சீற்றங்களால் அழிவைப் பல முறை எதிர்கொண்டாலும் அழியாப் பேரினமாய் வாழையடி வாழையாக தழைந்தோங்கிவரும் வரலாறு கொண்ட தமிழினத்தின் உன்னத திருநாள் பொங்கல்.


நிலத்தை செம்மையிட்டு உழைப்பை முதலீடாக்கி ஏர் பூட்டி உழுது விளைந்த நெல்லைக் குத்தி அரிசி எடுத்து புதுப் பானையிலிட்டு பகலவனின் பார்வையில் அடுப்பமைத்து வெல்லத்தோடு சேர்த்து பொங்கலிட்டு அது பொங்கிவரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று அகமகிழந்து கூவி கடும் உழைப்பில் பிறப்பதுதான் சுவை என்பதை உலகிற்கு பறைசாற்றும் தமிழர்தம் பாரம்பரியத்தின் குறியீடு பொங்கல் திருநாள். இத்திருநாள் மட்டுமே சாதியாலும் சமயத்தாலும் பிளவுண்டு கிடக்கும் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் அர்த்தமுள்ள ஒரே பண்டிகையாகும்.
தனது சீவனின் உயிராதாரமான உணவை உண்டாக்க தன்னோடு நிலத்தில் உழைத்த மாட்டிற்கும் ஒரு நாளை ஒதுக்கி அதனை மாட்டுப் பொங்கலாக கொண்டாடிடும் மானுடத்தின் ஒரே நாகரீகம் தமிழருடையதே. மூன்றாம் நாளை தம் உற்றார் உறவினரை சந்தித்து உறவை பலப்படுத்தியும் புதிய உறவிற்கு விதையுடும் நாளை காணும் பொங்கலாக கொண்டாடும் இனமும் தமிழரினமே.
தமிழ் மொழியில் படைத்தாலும் தமிழருக்கு மட்டுமின்றி மானுடர் அனைவருக்கும் வாழ்வியலை அரசியலை வீடுபேற்றை கற்பிக்கும் திருக்குறளை யாத்த வள்ளுவர் பெருந்தகையின் பிறந்த நாளும் இந்நாட்களுக்கு இடையில்தான் கொண்டாடுப்படுகிறது. இப்படி எல்லா விதத்திலும் நம் இனத்தின் பெருமையை பறைசாற்றும் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது மட்டுமின்றி தைத் திருநாளே தமிழருக்கு புத்தாண்டின் பிறப்பு என்பதையும் நினைவில் நிறுத்தி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறும் முதுமொழியே தமிழினத்தின் புத்தாண்டு என்பது தைப் பிறப்போடு தொடங்குவது என்பதற்குச் சான்றாகும்.எனவே தை (சுறவம்) முதல் நாளே தமிழருக்கு புத்தாண்டு என்பதை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக் கூறி நிலைநாட்டுவோம்.

பொங்கல் திருநாளை கொண்டாடும்போது அதில் தமிழினத்தின் சிறப்பும் முத்திரைகளும் முழுமையாக இடம்பெறுதல் வேண்டும். புத்தாடை உடுத்துதல்இன்முகம் கொண்டு அனைவரையும் வாழ்த்துதல் வீட்டிற்கு முன் கோலமிடும்போது தமிழிலேயே பொங்கல் வாழ்த்துகள் என்று எழுதுதல் உழவர்தம் உழைப்பின் சிறப்பை நமது பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுதல் என அந்த மூன்று நாட்களும் பொருளுடையதாக இருக்க வேண்டும். அதுவே நம் முன்னோர்களும் தமிழ் சான்றோர்களும் விரும்பியதாகும்.
தனிச் சுவைமிக்க பொங்கலை பொங்கும்போது நம் இனத்தின் நிலையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் நீக்கமற நிறைந்து வாழும் தமிழினம் பொங்கல் திருநாளை அகமகிழ்வோடு கொண்டாடும் இந்த நன்னாளில் தமிழினத்தின் மற்றொரு தாய் தேசமான தமிழீழத்தில் சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடுங்கோன்மையின் கீழ் நம் சொந்தங்கள் துன்பக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீறுடனும் பெருமையுடனும் ஆண்ட எம்மினம் இன்று அங்கு உரிமையிழந்து அடிமைப்பட்டுக் கிடக்கிறது. நம் சொந்தங்களின்தேச விடுதலைப் போராட்டம் என்பது நம் இனத்தின் விடுதலைப் போராட்டமே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்களின் துயரைத் துடைக்க வேண்டிய சர்வதேசம் தமிழினப் படுகொலை செய்த சிங்கள பெளத்த இனவாத அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கத் தயங்குகிறது. நமக்காக நாமே சுவாசிப்பதுபோல் நம் இனத்தின் விடுதலையை நாம்தான் போராடி வெல்ல வேண்டும்.
தாய்த் தமிழ் மண்ணிலும் நம் உரிமைகள் பறிக்கப்படுகிறது. காவிரியில் இருந்து முல்லைப் பெரியாறு வரை தமிழினத்திற்குள்ள உரிமையை முற்றிலுமாகப் பறித்துவிட அண்டை மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் சதி செய்துக் கொண்டிருக்கின்றன. தமிழர் மூவர் உயிர் பறிக்க உட்பட சட்டங்களை மெளனித்துவிட்டு தமிழின உரிமை பறிப்பிற்கு துணை போகிறது மத்திய அரசு. பறிக்க தனக்குரிய நியாயமான உரிமைகளை காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொரு நாளும் போராட வேண்டிய நிலையில்தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழ் மீனவன் சிங்கள கடற்படையினரால் தாக்கப்படுவது இன்றளவும் தொடர்கிறது. நம்மைக் காக்கவோ நம்முடைய பாரம்பரிய உரிமையை மீட்கவோ மத்திய அரசு மறுக்கிறது. ஆனால் நம் வாழ்வைப் பறிக்கும் வல்லமை கொண்ட அணு மின் நிலையங்களை மட்டும் நம்மீது ஒன்றுக்குப் பத்தாக திணிக்கப் பார்க்கிறது.

No comments:

Post a Comment