Translate

Friday 17 February 2012

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது போனால் சிறிலங்காவுடனான உறவு சிக்கலாகும் – இந்திய இராஜதந்திரி


சிறிலங்காவில் தமிழர்களின் வாழ்வுக்கு சமஉரிமையளிக்கும், 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது போனால், அது இந்திய – சிறிலங்கா உறவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் லகன் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய, அனைத்துலக கருத்தரங்கில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”சிறிலங்காவில் போரின் உச்சக்கட்டத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்.
அப்போது, தமிழநாட்டில் உள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தியாவால் சிறிலங்காவுக்குப் போர்த்தளபாடங்களைக் கொடுக்க முடியவில்லை.
இரு நாடுகளுக்கு இடையே அப்போது ஏற்பட்ட இடைவெளியை, சீனா நன்கு பயன்படுத்தி கொண்டது.
போருக்குத் தேவையான ஆயுதங்களை தயக்கமின்றி வழங்கி, சிறிலங்காவின் முக்கிய கூட்டாளியாக சீனா மாறிவிட்டது.
இதனால் தான், சிறிலங்காவின் முக்கிய உட்கட்டமைப்பில் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், சிறிலங்கா – இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுவாக இருந்தாலும், சீனா சிறிலங்காவில் தீவிரமாக ஊடுருவியுள்ளது என்பதே உண்மை.
சீனாவுடன் இந்தியா போட்டி போட்டுக் கொண்டு, சிறிலங்காவில் முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான், சிறிலங்காவில் இந்திய ஆதிக்கம் தொடரும்.
விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பின், தமிழர்களுக்கு சம உரிமையளிக்கும், 13வது சட்டத்திருத்தத்தைக் நடைமுறைப்படுத்துவதாக இந்தியாவுக்கு சிறிலங்கா உறுதியளித்திருந்தது.
ஆனால், தற்போது திடீரென பின்வாங்குகிறது. இதனால், அதிகாரப் பகிர்வுக்கான பேச்சுக்ககள் முடங்கியுள்ளன.
சிறிலங்கா 13வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை எனின், அது இந்தியா – சிறிலங்கா இடையேயான உறவில் சிக்கலை ஏற்படுத்தும்.“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லகன் லால் மெஹ்ரோத்ரா இந்திய வெளிவிவகாரச் செயலராகவும், கொழும்புக்கான இந்தியத் தூதுவராகவும், கம்போடியா மற்றும் இந்தோனேசியாவுக்கான ஐ.நா தூதுவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment