Translate

Friday, 24 February 2012

ஒபரேஷன் கழுத்து வலி: கிருமினல் குற்றத்துக்காக அதிரடியாக 37 தமிழர்கள் கைது !


ஒபரேஷன் கழுத்து வலி: கிருமினல் குற்றத்துக்காக அதிரடியாக 37 தமிழர்கள் கைது !
24 February, 2012 by admin
இன்றைய தினம் இரவோடு இரவாக கனடாவில் சுமார் 37 தமிழர்களைப் பொலிசார், வீடு வீடாகச் சென்று கைதுசெய்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இந்தக் கைது நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் கழுத்து வலி என்று பெயரிடப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். ஆஹா என்ன இது கொஞ்சம் வித்தியாசமான பேரா இருக்கே எண்டு பார்க்கிறீர்களா ? வழமைபோல இந்த மேட்டரும் படு சுவாரசியமானது தான். வாங்க மேட்டருக்குள் போகலாம் !


பிரித்தானியாவில் நீங்கள் வசிப்பவராயின், மற்றும் தொலைகாட்சியை நீங்கள் அடிக்கடி பார்ப்பவர் என்றால் இந்த வசனம் நல்ல நினைவில் இருக்கும்::: வாகன விபத்தா::: அதிஷ்டம் உங்கள் கதவை ஒருமுறைதான் தட்டும்::: எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்:::: இது தான் அந்த விளம்பரம். இதுக்கும் இந்தச் செய்திக்கும் என்ன தொடர்பு என நினைக்கிறீர்களா ? பிரித்தானியாவில் தற்போது நடைபெறும் இன்சூரன்ஸ் களவுகள், கனடாவில் ஏற்கனவே நடந்து விட்டது. கனடா ரெரண்டோ நகரில் இன்சூரன்ஸ் களவு காரணமாக சுமார் 37 தமிழர்கள் இன்று மட்டும் ஒரே இரவில் கைதாகியுள்ளர். 2009ம் ஆண்டு முதல் இவர்கள் கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனராம். இவர்களை 2009ம் ஆண்டு முதலே பொலிசார் பிந்தோடர்ந்து வந்துள்ளனர் என்பது தான் அதிமுக்கிய அதிர்ச்சிகரத் தகவல் !

ஒரு சிறிய குழுவினர் கனடாவில் பல மில்லியன் டாலர் பணத்தை இன்சூரன் களவு மூலம் சம்பாதித்துள்ளனர். வாகன விபத்துக்களைப் பயன்படுத்தி அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர் என்று பொய்யுரைத்து, மற்றும் பொய்யான தகவல்களை வழங்கி இவர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். காலப்போக்கில் இவர்கள் பேராசை அதிகரிக்க, சும்மா இருக்கும் வாகனங்களைக் கூட அடிபட்டதாகக் கூறி அதற்கும் இன்சூரன்ஸ் கிளேம் போட்டுள்ளனர். உண்மையாக அந்த வாகனம் அடிபட்டிருக்காது, ஆனால் அதனை ஒரு சுவரில் மோதிவிட்டு 2 வாகனங்கள் அடிபட்டதாக இவர்கள் கூறுவது வழக்கம். மற்றைய வாகனத்தை ஓட்டும் நபர், தன்னில் தான் பிழை என தார்மீகமாக ஒப்புக்கொள்வார். இதனால் மற்றையவருக்கு முழு இன்சூரன்ஸ் காசும் கிடைக்கும். அந்தக் காரில் 4 வர் இருந்தாகப் பதியப்படுவதோடு இந்த நால்வருக்கும் சேர்த்தே கிளைமும் பதியப்படும். இவ்வாறு பதியப்படும் இழப்பீட்டை(கிளைம்) பின்னர் இவர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்வது வழக்கம்.

வாகன விபத்தில் தான் பாதிப்படைந்ததாகச் சொல்லும் நபர் முதல் கூறும் காரணம் கழுத்து வலியாகும், பின்னர் வேலைக்குச் செல்ல முடியவில்லை, வேறு வாகனத்தைப் பாவித்தேன், காரில் லாப்-டொப் இருந்தது, கமரா இருந்தது, மன உழைச்சல், என்று சொல்லி சுமார் 50,000 டாலர்வரை பெறமுடியுமாம் கனடாவில். இதனையே இவர்கள் மிகவும் நேர்த்தியாகச் செய்துவந்துள்ளார்கள். புதுசு புதுசாக வாகன ஓட்டுனர்களை கண்டுபிடிப்பதும், அவருக்கு ஆசை ஊட்டி, காரை அடிபட வைப்பதும் இவர்களுக்கு கைவந்த கலை. இந்தக் கும்பலில் உள்ள ஒருவர், ஒரு முறை புதிதாக வரும் வாடிக்கையாளர் ஒருவரின் காரை இடித்து தன்னில் தான் பிழை என்று ஒத்துக்கொண்டால், அடுத்தமுறை மற்றுமொரு நபர் இன்னொருவரின் காரை இடிப்பார். இப்படியாக பலருக்கு ஆசை காட்டி அவர்களை சம்மதிக்கச்செய்து, அவர்கள் காரை இவர்கள் இடிப்பது வழக்கமாம்.

சும்மா இருக்கும் தமிழர் ஒருவருக்கு ஆசைகாட்டி இவ்வளவு பணம் பெறமுடியும் அவ்வளவும் பணம் வரும் என்று சொல்லி, காரை இடிக்கச் செய்கிறார்கள் இவர்கள். இதனை சாதூரியமாகப் பேசி, தேன் சிந்தும் வார்த்தைகளையும் கொட்டிப் பேச சில பெண்களும் இந்தக் கும்பலில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தான் முகவர்களாகச் செயல்பட்டு வாடிக்கையாளர்களைப் பிடித்துக்கொடுப்பது வழக்கமாம். பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பார்கள். அதுபோல 2009ம் ஆண்டு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றை அடுத்து கனேடியப் பொலிசார் இவர்களை அன்று முதல் பிந்தொடர்ந்து வந்துள்ளனர்.

இன்றுதான் திருவிழா நடந்து மகோற்சவம் முடிந்துள்ளது. அனைவரையும் கோழி அமுக்குவதுபோல அமுக்கியுள்ளனர் கனேடியப் பொலிசார். இதுபோன்ற திருட்டுகள் கனடாவில் மட்டும் நடக்கவில்லை பிரித்தானியாவிலும் கொடிகட்டிப் பறப்பதாக பலர் கூறுகின்றனர்.

உஷார் ! உஷார் !

அதிர்வுக்காக: வல்லிபுரத்தான்.

பின்குறிப்பு: இப்ப ஒபரேஷன் கழுத்து வலி என்றால் என்ன என்று உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே !


No comments:

Post a Comment