Translate

Thursday, 2 February 2012

விடுதலைப்புலிகளின் பெயரை வைத்தே காலத்தை ஓட்டும் மஹிந்த: அரியனேந்திரன்


ariyanenthiranசிறிலங்கா அரசாங்கமானது இன்று புலிகளின் பெயரை வைத்துக் கொண்டே இனப்பிரச்சினைத் தீர்வைப் பின்தள்ளப் பார்க்கிறது. வடக்கு, கிழக்கு மக்களின் சாதாரண உரிமைகளைக்  கேட்டால் கூட எம்மீது புலிப் பட்டம் சூட்டுவதே அரசின் இன்றைய நிலைப்பாடாக உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ப. அரியநேத்திரன் தெரிவித்தார்.

”தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் எல்.ரி.ரி.ஈ.யை பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள்” என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டிருந்த கருத்துத் தொடர்பில் எமது ஈழநாதம் இணையத்துக்கு தனது கருத்தைத் தெரிவித்த போதே அரியநேத்திரன் எம்.பி இவ்வாறு கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரான நாங்கள், வடக்கு, கிழக்கு மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். அந்த மக்களுக்காகவே நாம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்து வருகிறோம். அந்த மக்களின் தேவைகளை, அபிலாஷைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று நாம் அரசிடம் கோரிக்கை விடுத்தால் உடனேயே எமக்குப் புலிப் பட்டம் சூட்டி விடுகின்றனர். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களையே நாம் முழுமையாக அமுல்படுத்தக் கோருகிறோம். புதிதாக எதனையும் நாம் கேட்கவில்லை.
காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கேட்டால் அது புலிகளின் கோரிக்கையா? சிறிலங்கா அரசும் இந்திய அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள இவைகளைப் புலிகள் உள்ளடக்கவில்லை. பொறுப்பு வாய்ந்த இரு அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இவை உள்வாங்கப்பட்டன.
நாட்டில் இப்போது புலிகள் இல்லை என்றும் அமைதியான, சமாதானமான வாழ்க்கை வாழக் கூடியதாக உள்ளது எனவும் கூறிக் கொள்ளும் சிறிலங்கா அரசானது, தமிழ்த் தேச மக்களின் உரிமைகளைக் கேட்கும் போது மட்டும் எங்களைப் புலிகள் எனக் கூறிக் கொள்கிறனர். இது எந்த வகையில் நியாயமானது? இவ்வாறு அரியநேத்திரன் எம்.பி கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment