தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் இனப் பெண்களிற்கு அதிகாரத்தையும் ஆளுமையையும் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள் என்று இலங்கை விவகாரங்களில் அதீதமாக ஈடுபட்டுவரும் கனடிய செனட்டர் திருவாட்டி மொபினா ஜபார் தெரிவித்தார்.
கனடிய மனிதவுரிமை மையம் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் செனட்டர்களிற்குமென நடாத்திய மாநாட்டில் மனிதவுரிமை மாநாட்டில் கலந்து கொண்ட மேற்படி செனட்டரின் உரை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்ததுடன் அனைவருமே அவரது உரையின் சிறப்பை அவரிடம் தெரிவித்து பாராட்டினர்.
இலங்கைக்கு சமாதான காலத்திலும் தற்போதும் பல தடவைகள் விஜயம் செய்த மொபினா ஜபார் அவர்கள் கலநிலைமைகளை தெளிவுபட எடுத்துக் கூறியதுடன் பேச்சுவார்த்தை மூலமான ஒரு தீர்விற்கான அவசியம் அங்கேயிருப்பதையும் சூடானிற்காக கனடாவின் பிரதிநிதியாக இருந்த இந்தச் செனட்டர் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட புலிகளின் பெண்கள் குழுவினர் தங்கள் முடிவுகளை தாங்களே எடுக்கும் அதிகாரமும் ஆளுமையும் கொண்டவர்களாக இருந்தார்கள் என்றும் ஆனால் அரச தரப்பில் கலந்து கொண்ட பெண்களோ தங்களின் முடிவிற்காக மேலிடத்தின் பதிலிற்காகக் காத்திருந்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
இலங்கையிலுள்ள பெண்களுடன் தொடர்ந்து வேலைத்திட்டங்களில் தான் ஈடுபட்டு வருவதால் கனடிய மனிதவுரிமை மையத்தின் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பெருமையாகக் கருதுவதாகவும் தெரிவித்த செனட்டர் மொபினா ஜபார் அவர்கள்,
ஒரு போரின் முடிவில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட வேண்டுமென்பதே உலக நியதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டியதோடு எங்களிற்கு விருப்பமில்லாத ஒரு முடிவு போரின் முடிவில் ஏற்பட்டதையும் இனங்களிற்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான தேவை இன்னமும் நிறையவே இருக்கிறது என்பதையும் இன்னமும் தமிழினத்திற்கெதிரான நிகழ்வுகள் தொடர்வதையும் தெரிவித்தார்.
பல போரியல் தேசங்களின் பேச்சுக்களை அவதானித்ததிலிருந்து இலங்கையில் இடம்பெற்ற விடுதலைப்புலிகள் - இலங்கை பேச்சுவார்த்தையிலேயே பெண்களிற்கு அதிகவுரிமை வழங்கப்பட்டிருந்ததை தான் உறுதிபடக் கூறமுடியுமெனவும், அந்தப் பேச்சு துரதிஸ்டவசமான ஒரு போரில் முடிவுற்றதையும் சுட்டிக்காட்டினார்.
கனடிய அரசில் மட்டத்தில் ஈழத்தமிழர் விவகாரத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உதவிய அமைப்பு என கனடாவின் சகல கட்சிகளினதும் பாராட்டைப் பெற்ற கனடிய மனிதவுரிமை மையத்தின் நிகழ்வுகளின் மூலம் இலங்கை சார்ந்த ஆதரவுச் செயற்பாடுகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் கூட மாற்றம் பெற்று தமிழர்களின் நலன்களிற்காக வாதாடும் நிலை உருவாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடா – இலங்கை பாராளுமன்ற அமைப்பின் தலைவராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் இலங்கை அரசின் குரலாக லிபரல் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில் செயற்பட்ட ஒரு அரசியல்வாதி எனப் பலரும் தாங்கள் கனடிய மனிதவுரிமை மையத்தின் (www.chrv.ca ) கற்கை மாநாடுகளின் மூலமே ஒரு தெளிவான நிலைப்பாட்டிற்கு வந்ததை எடுத்தியம்பினர்.
2009ம் ஆண்டிலிருந்து ஈழத்தமிழர்களின் மனிதவுரிமை விவகாரங்களை கனடியர்களினதும், சர்வதேச சக்திகளினதும் கவனத்திற்கு எடுத்து செல்லும் கனடிய மனிதவுரிமை மையமானது கனடாவிலுள்ள ஏனைய தமிழ் அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் இலங்கை அரசினதும் பேச்சு நடவடிக்கைக்கு கனடாவின் காத்திரமான பங்கு மூலம் வலுச்சேர்க்கும் நடவடிக்கையிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளது.
No comments:
Post a Comment