Translate

Friday, 24 February 2012

இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு பிரேரணையின் சாராம்சமும் வெளியானது


newsஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா அமர்வில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு மேலும் ஆதரவு வலுத்து வருகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இரு லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் நேற்றுப் பூரண ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன. அந்த நாடுகளில் ஒன்றே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழியும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பிரேரணையை அமெரிக்கா ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ள நிலையில் மேலும் சில நாடுகள் ஆதரிக்க முன்வந்திருக்கின்றன என்று நேற்று மாலை வொஷிங்டனில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதேவேளை, இந்தப் பிரேரணையின் சாராம்சம் நேற்றையதினம் ஜெனிவாவில் முக்கியமான ஐ.நா. ராஜதந்திரிகள் மற்றும் மேற்குலக ராஜதந்திரிகளுக்கு வழங்கப்பட்டது.
அந்த சாராம்சத்தின் விவரங்கள் நேற்றிரவு பிரத்தியேகமாக “உதயனுக்குக்” கிடைத்தன.  அதன் விவரம் வருமாறு :
இலங்கையின் ஆதார வரைவு பிரேரணை
ஐ.நா. சாசனம், மனித உரிமைகளுக்கான சர்வதேசப் பிரகடனம், மனித உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைகள், இதர பொருத்தமான அம்சங்கள் ஆகியவற்றின் வழிகாட்டலோடு, பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அந்நாடுகள் சர்வதேச சட்டத்தின் கீழ் அதன் நியதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
குறிப்பாக, சர்வதேச மனித உரிமைகள், அகதிகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றை அனுசரிக்கவேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் அறிக்கை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய நல்லிணக்கப்பாட்டு முன்னெடுப்புகளுக்கு இக்குழு தனது கண்டுபிடிப்புகள், பரிந்துரைகள், ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் வாயிலாக இயன்ற பங்களிப்பை நல்கியுள்ளது.
நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகள், காணாமற் போகச்செய்தல் ஆகியவை தொடர்பாகப் பரவலாக எடுத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது நம்பக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென இந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது.
இலங்கையின் வடபகுதியை இராணுவமயப்படுத்தாமை, காணி விவகார முகாமைத்துவப் பேரணையை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துதல், தடுத்துவைப்பதற்கான கொள்கைகளை மறுசீரமைத்தல், முன்னைய சிவில் நிறுவனங்களைப் பலப்படுத்துதல் ஆகிய பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்திற்கு அரசியல் தீர்வை எட்டுதல், அனைவரினதும் கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவித்தல், பாதுகாத்தல், சட்ட மறுசீரமைப்புக்கான விதிகளை இயற்றுதல் ஆகிய பரிந்துரைகளும் உள்ளன. இந்தக் காத்திரமான பரிந்துரைகளை நாம் வரவேற்கின்றோம்.
அதேவேளை, சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்குப் பரிகாரம் காண்பதற்கான வழிவகைகள் குறித்து இந்த அறிக்கையில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதையும் கருத்திற்கொண்டுள்ளோம்.
அத்துடன் இலங்கை அரசு, தனக்கு உரித்தான சட்டரீதியிலான கடமைகளை நிறைவேற்றவில்லை. இதற்கு மாறாக நம்பத்தகுந்த சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு அத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனக் குறிப்பிட்டுள்ளது. உரிய சட்ட நடைமுறைகளைக் கையாளத் தவறியமை கண்டு நாம் ஏமாற்றம் அடைகிறோம்.
(1) ஆணைக்குழு அறிக்கையிலுள்ள காத்திரமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றோம். இதற்கு மேலாக தனக்குரிய சட்டரீதியிலான கடமைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறும் நம்பக, சுயாதீன விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோருகின்றோம்.
(2) மனித உரிமைகள் பேரவையின் 20ஆவது அமர்வுக்கு முன்னர் ஒருங்கிணைந்த நடவடிக்கை திட்ட அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசைக் கோரவேண்டும். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அதேவேளை, சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்துமாறும் இலங்கை அரசை மேலும் கோரவேண்டும்.
(3) மனித உரிமைகள் தூதுவர் அலுவலக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விசேட பிரமுகர்கள் ஆகியோரை உற்சாகப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றைப் பெறுமாறு இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும்.
இவையே அந்த சாராம்சம் ஆகும்.

No comments:

Post a Comment