Translate

Saturday 18 February 2012

இராணுவ நீதிமன்றத்தினால் உண்மைகள் வெளிவராது! -சம்பந்தன்


அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றங்கள், அநீதிகள் மற்றும் உண்மைத் தன்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.

குற்றம் இழைத்த இராணுவத்தினரை பிறிதொரு இராணுவக் குழு விசாரிக்கின்றது என்றால் அதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உலகமே அறியும் என்றும் சம்பந்தன் எம்.பி. கூறினார்.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றம் தொடர்பில் கருத்துக் கூறுகையில் சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றமானது போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கானதாக அமையவில்லை. எவ்வாறிருப்பினும் இராணுவத்தினால் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் அநீதிகளை இராணுவத்தைக் கொண்ட பிறிதொரு குழு விசாரிக்கின்றது என்றால் அங்கு எந்தவொரு உண்மையும் வெளிவரப்போவதில்லை.எனவே, இந்த இராணுவ நீதிமன்றம் தொடர்பில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய தாம் செயற்படுவதாகவும் அந்த பிரேரணையை நாம் நிறைவேற்றியிருப்பதாகவும் காட்டிக் கொள்வதற்காகவே அரசு இவ்வாறு செயற்பட்டிருக்கின்றது. எனவே இந்த இராணுவ நீதிமன்றத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை.இராணுவக் குழுவின் ஊடாக குற்றமி ழைத்த இராணுவத்தினரை விசாப்பதென் பதை ஏற்றுக்கொள்ள டியாது. இதனை சர்வதேசம் அறிந்திருக்கின்றது என்றார்.
சுமந்திரன் எம்.பி
இதேவேளை அரசாங்கம் அமைத்துள்ள இராணுவ நீதிமன்றத்தை தமது கட்சி நிராகரித்திருப்பதாக கூறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யும் சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன் இது அரசாங்கத்தின் கண்துடைப்பு நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.போர்க்குற்றம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணைக்குட்படுத்த வேண்டுமானால் அது சர்வதேச மட்டத்திலான சுதந்திரத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அப்படியில்லாது மேற்படி இராணுவ நீதிமன்றத்தின் ஊடான விசாரணைகளில் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment