வட, கிழக்கில் சுயாட்சியுடன் அரசியல் சக கலாசாரத்துடன் வாழவே ஆட்சி அதிகாரத்தைக் கேட்கின்றோம். மக்கள் அதற்காக அங்கீகாரத்தைத் தந்துள்ளனர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வே எமது தேவை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெவித்தார்
.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் உபதலைவர்களுக்கான மாநாடொன்று நேற்று சனிக்கிழமை காலை 10.00மணிக்கு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறப்பு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.
அங்கு அவர் உரையாற்றும்போது,
இன்றைக்கு அமெரிக்கா என்றாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி ஏன் ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேசியே தீர்வினை காணுங்கள் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.
தமிழ் மக்களுடைய மதிப்பைப் பெற்ற நம்பிக்கைக்குரிய கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆகவே நாம் மக்களுடைய கடமையை மதித்து பணி செய்ய வேண்டும்.
உள்ளூராட்சி தலைவர்கள் இவ்விடயத்தில் மிக கவனமாக செயற்பட வேண்டும். எமது மக்கள் சலுகைகளுக்கு விலை போகாதவர்கள் என்பது தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் தனித்துவமான இனம். நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றோம். வட, கிழக்கில் சுயாட்சியுடன் அரசியல், சமூக கலாசாரத்துடன் வாழ ஆட்சி அதிகாரத்தைத்தான் கேட்கின்றோம்.
மக்கள் அதற்கான அங்கிகாரத்தை தந்துள்ளனர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வே எமது தேவை.
தீர்வுப் பேச்சுக்களில் நாம் எந்த நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை. புதிய விடயங்களையும் புகுத்தவில்லை. தீர்வுப் பேச்சுக்களை ஆரோக்கியமான முறையில் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியும் நானும் நடத்திய பேச்சின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துமாறே நாம் இப்போதும் கூறுகின்றோம். ஆனால் பாராளுமன்ற தெரிவுக்குழு பற்றி கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
முதலில் தீர்வை நடைமுறைப்படுத்துங்கள். கௌரவமான பிரயோசனமான எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய தீர்வு வருமாக இருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதை விடுத்து பிரயோசனமற்ற ஒரு தீர்வை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார் சம்பந்தன்.
No comments:
Post a Comment