Translate

Wednesday 1 February 2012

பிரபாகரனின் மறைவிடத்தை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது எப்படி?


பிரபாகரனின் மறைவிடத்தை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது எப்படி?


 
அது ரொம்ப குரூரமான பதில்தான். ஆனால், துரதிஷ்டவசமாக.. நிஜமான பதில் அதுதான்.
 
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கணும் என்று எந்த நாடும் வற்புறுத்தவில்லை. அந்த நாடுகள் சொன்னதெல்லாம், “இந்த யுத்தத்தில் நீங்கள் ஜெயிக்கப் போவதில்லை. உயிர் தப்பணும் என்றால் ஆயுதங்களை கீழே வையுங்க. இல்லைன்னா, உங்க இஷ்டம்” என்பதைத்தான்.
 
இப்போது ஆளாளுக்கு, “புலிகள் அழிக்கப்படுவதை சர்வதேசமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது” என்று ஒப்பாரி வைக்கிறார்கள். சர்வதேசம் சான்ஸ் கொடுத்துவிட்டுதான், வேடிக்கை பார்த்தது. யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்குமுன் 2009 பிப்ரவரியில் கொடுத்த சான்ஸை புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிக் கொள்ளவில்லை. மே மாத இரண்டாவது வாரத்தில், “சான்ஸை மீண்டும் தாருங்கள்” என்று போனபோது டூ லேட்!
 
இந்த உண்மையை சொல்ல இங்கே மீடியா கிடையாது. யாராவது சொல்ல வாய் திறந்தால் துரோகி என்பார்கள்! ஆனால், அதைத்தான் இந்த தொடர் சொல்கிறது.
 
யுத்தம் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அதன் முடிவு விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் நன்றாக தெரிய தொடங்கியிருந்தன. “இதோ யுத்தம் புலிகளுக்கு சாதகமாக திரும்ப போகிறது. ரொம்ப நாளா காத்திருந்த புலிகள் திருப்பி அடிக்க போறாங்க” என்று விடுதலைப் புலிகளின் பிரசார ஊடகங்கள் சொல்லிக் கொண்டு இருந்தன.
 
ஆனால், அநேக நாடுகளுக்கு தத்தமது உளவுத்துறைகள் மூலம் யுத்தத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தது.
 
வேறு நாடுகளுடன் தொடர்பில் இருந்த தமிழர்களிடம், “யுத்தத்தில் புலிகள் தொடர்ந்தும் தாக்குப் பிடிக்க போவதில்லை” என்பதை அந்த நாடுகள் தெளிவாகவே கூறியிருந்தன. “இனியும் யுத்தத்தை தொடரும் எண்ணத்தை விட்டுவிட்டு, போராளிகளினதும் மக்களினதும் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று சில வெளிநாட்டு உளவுத்துறைகளும் கூறின.
 
ஆனால், நம்புவதற்குதான் ஆளில்லை.
 
அமெரிக்க உளவுத்துறைகளில் ஒன்றில் (சி.ஐ.ஏ. அல்ல) ஆசிய விவகாரங்களை கவனிக்கும் அதிகாரி ஒருவர், “புலிகளின் தலைவர் யுத்தத்தை தொடரும் முடிவை எடுத்தால், தனது சொந்த போராளிகளை பலிகொடுக்க போகிறார் என்று அர்த்தம். யுத்தம் முடியும்போது அவர்கூட உயிர் தப்புவது சந்தேகமே” என்றார் மிகத் தெளிவாக.
 
அதே நேரத்தில், அமெரிக்காவின் மற்றொரு உளவுத்துறை சி.ஐ.ஏ.-க்கு என்ன தெரிந்திருந்தது? சுருக்கமாக சொன்னால் எல்லாமே தெரிந்திருந்தது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரன், ராணுவத்தால் முற்றுகை இடப்பட்ட சிறிய பகுதிக்குள் சிக்கியிருக்கிறார் என்பதை சி.ஐ.ஏ. நிச்சயமாக தெரிந்து வைத்திருந்தது. 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாத நடுப்பகுதியில் தொடங்கி, அந்த சிறிய பகுதிக்குள் பிரபாகரனின் நடமாட்டங்கள் எங்கெல்லாம் உள்ளன என்பதை அமெரிக்க reconnaissance satellite இமேஜ்கள் உறுதி செய்து கொண்டிருந்தன. 24 மணிநேர கவரேஜ் அவர்களிடம் இருந்தது.
 
வன்னிக்குள் முற்றுகைக்குள் சிக்கியிருந்த புலிகள் ‘தமது ரகசியங்கள்’ என்று நினைத்திருந்த பல விஷயங்கள் அமெரிக்க உளவுத்துறைக்கு விலாவாரியாக தெரிந்திருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவர் எங்கே இருக்கிறார்? எப்போது வெளியே வருகிறார்? புலிகளின் நிஜமான பலம் எவ்வளவு? என்று ஆரம்பித்து பூரா விஷயங்களையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
 
புலிகள் ரகசியம் என்று நினைத்து வைத்திருந்தவற்றை வெளிநாட்டு உளவுத்துறைகள் எப்படி அறிந்து கொண்டார்கள்? யுத்தம் முடிந்தபின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொல்லிக் கொண்டார்கள்.
 
தமிழ் மீடியாக்கள் சில தமது அறிவுக்கு எட்டிய வகையில், காரணம் கூறின. “துரோகி காட்டிக் கொடுத்தான், துரைசாமி ஊடுருவினான்” என்று சோழர் சரித்திரக் கதை உறையூர் ஒற்றர்கள் பாணியில் அம்புலிமாமா கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
 
Reconnaissance என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங்கூட தெரியாத இந்த அப்பாவிகளுக்கு, யுத்தம் நடைபெறும் இடம் ஒன்றில் வெளிநாட்டு உளவுத்துறைகள் HUMINT (Human Intelligence) மூலம் கிடைக்கும் தகவல்களைவிட பெறுமதியான தகவல்களை SIGINT (Signals intelligence) மூலம் பெறுகிறார்கள் என்று தெரிய சான்சே இல்லை என்பதை, அவர்களது மீடியாக்களில் வெளியாகும் செய்திகளின் டைப்பை பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம். (முதலை வாயில் சிக்கிய ஆட்டுக்குட்டி – காணொளி பாரீர்)
 
அதே நேரத்தில், அனைத்துலக உளவுத்துறை ஆபரேஷன்களின் ரியாலிட்டி என்பது வேறு.
 
வன்னி யுத்தக் களத்தில் புலிகள் என்ன செய்கிறார்கள் என்பது அமெரிக்காவில் ஃபோர்ட் பெல்வொய்ரில் (அட்லான்டிக் கரையோரம் உள்ள வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள இடம்) அமைந்திருக்கும் NRO (National Reconnaissance Office) தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் (ground station), அமெரிக்க KH-11 தொழில்நுட்ப சட்டலைட் மூலம் பதிவாகிக் கொண்டிருந்தது. (KH-12 ரக சட்டலைட்கள் ஸ்ரீலங்கா உளவு பார்த்தலுக்காக பயன்படுத்தப்படவில்லை)
 
சட்டலைட் பதிவுகள் சான்டிலி என்ற இடத்திலுள்ள (இதுவும் வர்ஜீனியாவில்தான் உள்ளது) NRO-ன் தலைமைச் செயலகத்தில் இருந்து, லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ. தலைமைச் செயலகத்துக்கு செல்ல, அவர்களது சிட்சுவேஷன் ரிப்போர்ட்களில் புலிகள் தொடர்பாக, “..the chances of survival are almost zero” என்ற வாக்கியம் இடம்பெற்றது.
 
புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் மட்டுமே, ‘மட்டுப்படுத்தப்பட்ட’ உதவிகளை செய்ய முடியும் என்றது அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.! இது அவர்களது ஸ்டான்டர்ட் ப்ரொசீசர். ஜெயிக்க முடியாத பார்ட்டியின் கைகளில் ஆயுதங்கள் இருக்கும்போது அருகே செல்லக்கூடாது என்பது சி.ஐ.ஏ.-யில் பாலபாடம்.
 
அமெரிக்க டிப்பார்ட்மென்ட் ஆஃப் ஸ்டேட், பொதுமக்களின் அழிவை தடுப்பதற்கு, புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால்தான் எந்த அரசியல் நகர்வையும் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தது. நார்வே அரசை புலிகளின் தலைமையுடன் பேசி, ஆயுதங்களை கீழே வைக்க விரும்புகிறார்களா” என்று கேட்க சொல்லியிருந்தது. இதில் அவர்களுக்கு (அமெரிக்கா, நார்வே) எந்தவித சென்டிமென்டும் கிடையாது.
 
2009-ம் ஆண்டு பிப்ரவரியில் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க ஒப்புக்கொண்டால், உயிருடன் இருப்பவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க அமெரிக்கா தயாராக இருந்தது. பாதுகாப்பு கொடுக்கும் அளவில் அவர்களுக்கு வசதிகளும், பலமும் இருந்தன. அதை பயன்படுத்திக் கொள்ளவே கே.பி. முயன்றார்.
 
புலிகளின் வேண்டுகோளை அடுத்தே, வன்னிக்கு வெளியே புலிகளால் அதிகாரபூர்வ பிரதிநிதியாக அறிவிக்கப்பட்ட கே.பி.-யுடன் பேசுவதற்கு நார்வே தமது குழுவை, ஸ்ரீலங்கா அரசுக்கும் தெரிவிக்காமல் மலேசியாவுக்கு அனுப்பி வைத்திருந்தது. புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது தொடர்பாக கே.பி. பேசியது இதனால்தான்.
 
கடந்த அத்தியாயத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான பதில் இதுதான். இனி, கோலம்பூரில் நடந்ததை பார்க்கலாம்.
 
2009, பிப்ரவரி 26-ம் தேதி காலை 9 மணிக்கு ஹில்டன் ஹோட்டலில் இருந்த suit ஒன்றில் நார்வே குழுவை கே.பி. சந்தித்தார். இந்தச் சந்திப்புக்காக ஸ்ரீலங்காவுக்கான நார்வே தூதர் டோர் ஹட்டேர்முடன், நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த தாமஸ் என்பவரும், எரிக் சோல்ஹேமின் உதவியாளர் ஒருவரும் கலந்து கொண்டனர்.
 
புலிகள் சார்பாக கே.பி.-யுடன் நேரில் பேசவே நார்வே குழு விரும்பியது. கே.பி.யுடன் அந்த சந்திப்பில் கலந்துகொண்ட பேரின்பநாயகம், நார்வே குழுவினரின் சில கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். ஜாய் மகேஸ்வரன், கே.பி.யின் உதவியாளர் போலவே செயற்பட்டார். பொறி, குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். கே.பி.தான் முற்று முழுதாக இதை டீல் செய்தார்.
 
இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்னர் கே.பி., விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் தொலைத்தொடர்பு சாதனம் மூலம், “ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும்” என்பதே நார்வேயின் நிலைப்பாடு போல உள்ளது என்பதை தெரிவித்திருந்தார். பிரபாகரன் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கவில்லை. முழுமையாக நிராகரித்தார். ஆனால், நார்வேயுடன் தொடர்ந்து பேசுமாறு கூறியிருந்தார்.
 
யுத்தத்தை தொடர்ந்தால் புலிகள் தோல்வியடைவார்கள் என்று நார்வேயும், அமெரிக்காவும், உளவுத்துறைகளும் உறுதியாக சொல்லிக்கொண்டிருக்க, தொடர்ந்து யுத்தம் புரியும் முடிவை பிரபாகரன் எடுத்திருந்தார். “அவரது முடிவை மாற்ற வேண்டுமென்றால், யாராவது வன்னிக்கு சென்று அவருடன் நேரில் பேசி புரிய வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார் கே.பி.
 
தனது கூற்றை நியாயப்படுத்துவதற்காக, கடந்த 80-களின் இறுதியில் இந்திய அமைதிப்படை ஸ்ரீலங்காவில் இருந்தபோது இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய கே.பி., அப்போது தாமும், ஆன்டன் பாலசிங்கமும் பாங்காக் சென்ட்ரல் ஹோட்டலில் வைத்துச் செய்த ரகசிய நடவடிக்கை ஒன்றை தெரிவித்தார். (சுவாரசியமான அந்த விபரங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
 
இறுதி யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த நிலையிலும், பிரபாகரனை சந்திக்க வன்னிக்கு செல்ல தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார் கே.பி.
 
வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, ஏப்பம் விடுவதுபோல ஏதாவது கூறிக்கொண்டிருக்கும் ‘கருத்து கந்தசாமிகள்’ எடுக்க துணியாத ரிஸ்க் அது என்பதை நார்வே தரப்பு புரிந்து கொண்டிருந்தது.
 
யுத்தம் நடந்துகொண்டு இருக்கையில், என்னதான் பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்கப்பட்டாலும், தற்செயலாக இலக்கு தவறிய ஷெல் ஒன்றுகூட கே.பி.யின் உயிரைப் பறித்து விடலாம். யுத்த முனையில் எதுவும் நடக்கலாம். அதற்குள் சென்று பிரபாகரனை சந்திக்க தாம் தயார் என்று கே.பி. கூறியதை இன்றும் ஒப்புக் கொள்ளும் டோர் ஹட்டேர்ம், தற்போது ஆப்கானிஸ்தான் காபுல் நகரில், நார்வே தூதராக உள்ளார். (தொலைபேசி – 93 (0) 701 105 000)
 
இது தொடர்பாக நாம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,  “கே.பி.-யுடன் நடந்த சந்திப்பின்போது, அவர் ரிஸ்க் எடுத்து யுத்த முனைக்கு செல்ல முன்வந்தார். அதற்கு இரண்டு வழிகள் இருந்தன. முதலாவது, கொழும்பு விமான நிலையம்வரை சென்று, அங்கிருந்து யுத்தம் நடைபெறும் வன்னிப் பகுதிக்கு அவரை அனுப்பி வைப்பது. ஸ்ரீலங்கா ராணுவத் தலைமையின் உதவியுடன்தான் அதை செய்ய முடியும். கொழும்பில் இருந்து போக்குவரத்து ஏற்பாடுகளை அவர்கள்தான் செய்ய வேண்டும்.
 
ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த நாட்களில் பல தடவைகள் நாம் (நார்வே தூதரகம்) செய்து கொடுத்த ஏற்பாடு அது. ஆனால் அப்போது யுத்தம் நடைபெறவில்லை. 2009 பிப்ரவரியில் கடுமையான யுத்தம் வன்னிப் பகுதியில் நடந்து கொண்டிருந்தது. க்ராஸ் ஃபயரில் கே.பி. சிக்கி உயிரிழக்கலாம்.
 
இரண்டாவது, கே.பி.-யை மாலதீவு வரை அழைத்துச் சென்று, ஸீ-பிளேன் மூலம் வன்னியில் நந்திக்கடலில் அவரை தரையிறங்க வைப்பது. அதுவும் ரிஸ்க்தான். தாழப் பறக்கும் சீ-பிளேன், தரையிலிருந்து மிகச் சுலபமாக தாக்கி வீழ்த்தப்படலாம். ஆனால், பிரபாகரனை சந்திக்க செல்வதற்காக இந்த ரிஸ்க்கை எடுக்க தாம் தயார் என்று கே.பி. என்னிடம் கூறினார். அவரே ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பதால், அதற்கான சில ஏற்பாடுகளை நான் செய்தேன்” என்றார் டோர் ஹட்டேர்ம்.
 
அடுத்த கட்டமாக ஸ்ரீலங்கா அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அதில்தான் டோர் ஹட்டேர்முக்கு சிக்கல் ஏற்பட்டது. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…    (தொடரும்)

No comments:

Post a Comment