ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் நவனீதம்பிள்ளை, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு, கடும் விமர்சனப் பாங்கான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நவனீதம்பிள்ளையின் இந்த இரகசிய கடிதம் பற்றிய தகவல்கள், ஐக்கிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவில் முக்கிய பதவி வகித்தால், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நன்மதிப்பிற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என நவனீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
சவேந்திர நியமனம் தொடர்பில் ஆசிய வலய நாடுகள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சவேந்திர சில்வாவிற்கு கூடுதலான சலுகைகளை இலங்கை அரசாங்கம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சவேந்திர அண்மையில் அதி சொகுசு கார் ஒன்றை தனது அலுவலக பாவனைக்காக கொள்வனவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்திற்கு விரோதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக அரசாங்கத் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment