Translate

Monday 26 March 2012

இலங்கைத் தமிழரின் பிரச்சினையில் சர்வதேசத்தின் மாற்றம் ஆறுதல் அளிக்கின்றது - இரா.துரைரெத்தினம்.


 இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வதேசம் பாராமுகமாயுள்ளது என்ற எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்,

  பெரும் ஆறுதலும் தமிழ் மக்களிடம் ஏற்படுவதற்கு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை காரணமாக அமைந்துள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப். இன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

 
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை தொடர்பிலும் அதன் நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவ் அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது, 
 
'இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் பல்வேறு படிநிலை சார் பிரச்சினைகளை தாண்டி வந்துள்ள தமிழ் மக்கள், தமது இன்னல்களுக்கு ஆறுதலான சமிக்ஞை ஒன்று கிடைத்துள்ளதாகவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைஇயைப் பார்க்கின்றனர்.
 
முக்கியமாக யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் தமது உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் இதுவரையிலும் சர்வதேச சமூகம் பாராமுகமாக இருப்பதாக எண்ணினர். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது ஒரு மிகப்பெரும் ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆறுதல் வெறுமனே அடங்கிவிடாத வகையில் அரசியல் சாயம் பூசப்படாமல், கொண்டு செல்லப்பட வேண்டும். 
 
மனித உரிமை விடயத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்படும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விடயத்தில் அக்கறையில்லாதவைகளாக இருப்பதாக தோற்றம் கடந்த காலத்தில் புலப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவால் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட பிரேரணை இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 
இந்த நிறைவேற்றமானது, ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் நடைபெற்றிருக்கிறது. இதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை ஒருவருட நிபந்தனை அடிப்படையில் 22ஆவது கூட்டத் தொடருக்குள் முன்வைக்குமாறு கோருவதுடன் தொடர்புடைய சட்டக் கடப்பாடுகளை நிறைவேற்ற தேவையான மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புடைமை, மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான, சுயாதீன நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உறுதி பூணுமாறும் கோரியிருக்கிறது.
 
அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கும் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச சட்ட மீறல்களை ஆராயவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளை விபரிக்கும் முழுமையான செயற்றிட்டமொன்றை இலங்கை இயன்றவரை விரைவாக சமர்ப்பிக்க வேண்டும்.
 
இவ்வாறான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட விசேட தொடர்புடையவர்களிடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ள முடியும். இவற்றினைச் செய்து முடிப்பதற்காக இலங்கை 22ஆவது கூட்டத்தொடரில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும். 
 
இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புடைமையையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பில் நிறைவேறியிருக்கின்ற பிரேரணையானது, இதுவரை ஏமாற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு செயலாகவே நாம் பார்க்க வேண்டும். அந்த வகையில் இதன் மூலம் தமிழ் மக்கள் பெரும் ஆறுதலை கொண்டுவிடுவதனை விடுத்து தொடர்ந்தும் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். 
இந்த இடத்தில், இது தொடர்பாக அயராது பாடுபட்ட புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள அனைத்து சக்திகளுக்கும், சர்வதேச ராஜதந்திர வழிமுறைகளை கையாண்ட சகல நாடுகளுக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும், வட கிழக்கில் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், தென்னிலங்கைப்பகுதியில் உள்ள முற்போக்கு மனித உரிமை சக்திகளுக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
அத்தோடு, இது தொடர்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள், தமது உறுதியான கருத்துக்களை சகல தரப்பினருக்கும் எடுத்தியம்பிகைக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். அத்துடன், கிழக்கு மாகாண சபையில் நாடு நகர திருத்தச்சட்டத்தை நிராகரித்தது போல், அடுத்த மாத கூட்டத் தொடரில் ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்குரிய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.என்பதுடன் நடைமுறைப்படுத்துதற்கான உந்துதல்களையும் கொடுக்க வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment