Translate

Monday 26 March 2012

மேர்வின் சில்வாவின் உரை குறித்து விசாரணை: பொலிஸார்


மேர்வின் சில்வாவின் உரை குறித்து விசாரணை: பொலிஸார்

(சுபுன் டயஸ், ஹபீல் பரீஸ்)
பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா உரையின் உள்ளடக்கங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக, பொலிஸார் இன்று  தெரிவித்தனர்.

துரோகி என தான் குறிப்பிட்ட ஊடகவியலாளர் ஒருவரின் கை கால்களை உடைப்பேன் என அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா கூறிருந்தமை குறிப்பிடத்தக்கது.  ஊடகவியலாளர் பொத்தலஜயந்தவை நாட்டை விட்டு துரத்தியமைக்கும் தானே பொறுப்பு என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். 


இது தொடர்பாக தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு பொலிஸ் பேச்சாளர் கூறுகையில், அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்துகள் குறித்து பொலிஸாரால் விசாரிக்கப்படுவதாக கூறினார்.
இந்த கருத்தின் நோக்கம் தெளிவில்லாத நிலையில் நான்கு விடயங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இத்தகைய கருத்தை கூறிய நபர் மனநிலை ஸ்திரமற்றவரா, அல்லது  உண்மையிலேயே இந்நடவடிக்கையை தான் மேற்கொண்டதால் அவர் இதை தெரிவித்தாரா, அல்லது  மற்றொரு நபரை பாதுகாப்பதற்காக இப்படி கூறினாரா, அல்லது பிரசித்தமடைவதற்காக இத்தகைய கருத்தை கூறினாரா என்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.
அமைச்சரால் குறிப்பிடப்பட்ட ஊடகவியலாளர் சில வருடங்களுக்கு முன்னர் அத்துருகிரியவில் வைத்து தாக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக தகவல்கள் திரட்டப்படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அதேவேளை அமைச்சரின் கூற்று குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் ஆனால் இந்த உரையின் உள்ளடக்கம் காரணமாக பொலிஸார் தானாக விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் கூறினார்.

No comments:

Post a Comment