Translate

Monday 26 March 2012

ஜெனீவாவில் இலங்கைக்கு கிடைத்தது அச்சுறுத்தலுடனான வெற்றியே


ஜெனீவாவில் இலங்கைக்கு கிடைத்தது அச்சுறுத்தலுடனான வெற்றியே

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்ட கடந்த வியாழக்கிழமையே அதே பேரவையில் இஸ்ரேல் மேற்குக் கரையில் குடியேற்றங்கள் மூலம் பலஸ்தீன மக்களின் மனித உரிமைகளை மீறுவதற்கு எதிராகவும் ஒரு பிரேரணை நிரைவேற்றப்பட்டது. விந்தை என்னவெனில் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கவென பிரேரணை ஒன்றை முன்மொழிந்த அமெரிக்கா மட்டுமே பலஸ்தீன மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவென கொண்டு வரப்பட்ட பிரேரணையை எதிர்த்தது.

இலங்கை தொடர்பான பிரேரணை நிரைவேற்றப்படுவதற்கு முதல் நாள் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய ஆப்கான் வெளிநாட்டமைச்சர் சல்மய் ரசூல், அமெரிக்க படையினரால் ஆப்கானிஸ்தானில் 16 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றியும் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பத்தைப் பற்றியும் விசாரணை மேற்கொள்ளுமாறு அமெரிக்காவை கேட்டுக் கொண்டார்.   

தமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையின் உண்மையான நோக்கம் மனித உரிமை விடயத்திலான அக்கறையல்ல என்ற இலங்கை அரசாங்கத்தின் வாதத்திற்கு இவையும் ஆதாரமாகிவிட்டது.

ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று இதனால் அர்த்தமாகாது. ஏனெனில், இலங்கை அரசாங்கமே நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே மனித உரிமை மீறப்பட்டு இருக்கலாம், அவற்றைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றே கூறுகிறது. 

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான எல்லோரும் இந்த பிரேரணை தொடர்பாக மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனைய எல்லோரும் அரசியல் காரணங்களைக் கொண்டே அவ்வாறு மகிழ்சிசியடைகிறார்கள்.

ஆனால் இந்த விடயத்தில் அவர்களுக்கு போலவே அரசாங்கத்திற்கும் மகிழ்ச்சியடைவதற்கு காரணங்கள் இருக்கின்றன. அரசாங்கம் ஜெனீவாவில் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியடைந்த போதிலும் அரசியல் ரீதியாக பாரிய அபாயமொன்றை தவிர்த்துக் கோண்டது.

நாம் முன்னர் ஒரு கட்டுரையில் கூறியதைப் போல் இந்தப் பிரேரணையானது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையாகும். இது அரசாங்கமே நியமித்த ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுலாக்குமாறு அரசாங்கத்தையே வலியுறுத்தும் பிரேரணையாகும். அரசாங்கமும் அதற்கு முடியாது என்று கூறவில்லை. ஆனால் அரசாங்கம் அதன் ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுலாக்குவதை நாம் மேற்பார்வை செய்ய வேண்டும் என இந்தப் பிரேரணை மூலம் சர்வதேச சமூகம் கூறுகிறது.

'சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கத்;தின் மீது நம்பிக்கையில்லை என்பதையே இந்தப் பிரேரணை கூறுகிறது. எங்களுக்கு அவகாசம் தாருங்கள் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸூம் ஜெனீவாவில் வைத்து கேட்டார்கள். அதற்கு பதிலளிப்பதைப் போல் நாம் இலங்கைக்கு மூன்று ஆண்டுகள் அவகாசம் கொடுத்தோம்' என்று மனித உரிமை பேரவையின் அமெரிக்கப் பிரதிநிதி தமது உரையின் போது கூறினார்.

இந்த பிரேரணையைப் பற்றிய செய்தி முதன் முதலாக வெளிவந்த போது அரசாங்கம் மனித உரிமை செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை தயாரிக்க முற்பட்டது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சம்பவங்களைப் பற்றி விசாரிக்கவென நீதிமன்றமொன்றை நியமித்தார். ஆனால் அவை சர்வதேச நெருக்குதலை சமாலிக்க அரசாங்கம் எடுத்த மேல்தோற்ற நடவடிக்கைகளே என மனித உரிமைகள் கண்காணிப்பகம்  கூறியது.

எனவே நாட்டுக்குள் இருந்து கொண்டு நாம் ஏகாதிபத்தியவாதிகளின் முன் மண்டியிடுவதில்லை என அரசங்கத்தின் தலைவர்கள் எவ்வளவு தான் மார் தட்டிக் கொணடாலும் நெருக்குதலுக்கு பணிந்து சில நடவடிக்கைகளை எடுக்க இணக்கம் தெரிவித்தார்கள். 

வழக்கு விசாரணைகளின் சாட்சியாளர்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வருதல், திருகோணமலை மாணவர்கள் கொலை மற்றும் மூதூர் தொணடர் அமைப்பு உறுப்பினர்களின் கொலை ஆகியவற்றைப் பற்றி புதிதாக விசாரணை மேற்கொள்ளல் ஆகியன அவ்வாறு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளாகும்.

ஆனால் பிரேரணையை கொண்டு வந்தே தீருவோம் என அமெரிக்கா விடாப்பிடியாக இருந்தது. தனித் தனி நாடுகள் விடயத்தில் மனித உரிமை பேரவையில் பிரேரணைகளை கொண்டு வருவதை தாம் எதிர்ப்பதாக இந்தியா கூறியதே இலங்கைக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

ஆனால் இந்தியா தமது இந்த வெளிநாட்டுக் கொள்கைக்கும் முரணாக இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்க பின்னர் முற்பட்டது. இதற்கு மத்திய அரசாங்கத்திலிந்து விலகுவோம் என கருணூநிதி செய்த மிரட்டல்தான் காரணம் என்று பலர் கூறினாலும் அது தான் ஒரே காரணம் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தி.மு.க. மத்திய அரசாங்கத்திலிருந்து விலகினால் அரசாங்கம் கவிழும். அப்போது புதிதாக தேர்தல் நடத்த வேண்டி வரும். இதனை தி.மு.க. விரும்புமா?

இலங்கையில் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போதும் கருணாநிதி ஆறு மணித்தியால் 'சாகும் வரை உண்ணாவிரதம்' இருந்தார்;. தி.மு.க.வின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் போரை நிறுத்த இலங்கைக்கு காலக் கெடு விதித்து இராஜினாமா செய்யவிருந்தனர். ஆனால் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ புது டில்லிக்குச் சென்று நாங்கள் பாரிய ஆயுதங்களை பாவிப்பதை நிறுத்துவோம் என்று கூறிய உடன் அவர்கள் இராஜினாமா திட்டத்தை 'ஒத்திப் போட்டார்கள்.'  போரும் முடிந்து விட்டது, புலிகளின் தலைவர்களும் அழிந்து விட்டார்கள். அவ்வளவு தான்.

இந்த முறையும் கருணாநிதி ஒரு கட்டத்தில் தமது நெருக்குதலை ஏதோ காரணத்திற்காக தளர்த்தினார். பின்னர் மீண்டும் இறுகப் பிடித்தார். எனவே தமிழ்நாட்டு நெருக்குதலை சமாளிக்க முடியும் என பிரதமர் மன் மோகன்சிங்கிற்கு தெரியும். ஆனால், ராஜதந்திர நடவடிக்கைகள் விளையாடல்ல, அவற்றில் நம்பகத் தன்மையானது மிக முக்கியம் என்று இலங்கைக்கு உணர்த்தவும் இந்தியாவுக்கு தேவைப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. 

ஏனெனில், அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இலங்கைக்கு வந்த போது 13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்கு அப்பால் செல்வதாக ஜனாதிபதி தம்முடன் கூறினார் என அவர் ஊடகங்களுக்குக் கூறினார். தாம் அவ்வாறு இந்தியாவுக்கு வாக்குறுதியளிக்கவில்லை என சில நாட்களுக்குப் பின்னர் ஜனாதிபதி பத்திரிகை ஆசிரியர்களிடம் கூறினார்.

காரணம் எதுவாக இருந்தாலும் இந்தியாவின் நிலைப்பாடு மாறியதன் காரணமாகவே ஜெனீவாவில் அமெரிக்கப் பிரேரணை நிறைவேறியது. இந்தியா நடுநிலை வகித்தாலும் பிரேரணை நிரைவேறியிருக்காது. பிரேரணை நிறைவேறியமை இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வி என்றே பொதுவாக கருதப்படுகிறது.

ஆனால், ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஜெனீவாவில் இலங்கைக்கு கிடைத்திருப்பது வெற்றியே. ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையே சர்வதேச அரங்கில் ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆனால் அமெரிக்கப் பிரேரணை மூலம் உள்நாட்டு விசாரணையே வலியுறுத்தப்படுகிறது. சர்வதேச சமூகமும் அதனை ஏற்றுக் கொணடுள்ளது. தமிழ் தலைவர்களும் (சீமானைத் தவிர) தமிழ் நாட்டுத் தலைவர்களும் மனித உரிமை அர்வலர்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். அது இலங்கைக்கு சாதகமான நிலைமையாகும்.  

ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை அமெரிக்கா பின்னர் திருத்தியே வாக்கெடுப்பிற்கு விட்டது. அதுவும் இலங்கைக்கு சாதகமாகியது. ஆரம்பத்தில முன் வைக்கப்பட்ட பிரேரணையின் 2ஆவது மற்றும் 3ஆவது வாசகங்களே இலங்கைக்கு பிரச்சினையாகவிருந்தன. 2ஆவது வாசகத்தின் படி மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வின் போது இலங்கை மனித உரிமை விடயத்தில் தாம் என்ன நடவடிக்கை எடுத்தோம் என்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. 

நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் 'அடுத்த அமர்வில்'; என்பதற்கு பதிலாக 'கூடிய விரைவில்' என்று கூறப்பட்டு இருக்கிறது. 

முன்னைய 3ஆவது வாசகத்தின் படி நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்குவதற்காக இலங்கை ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகரின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இது இலங்கையின் இறைமையை அச்சுறுத்தும் வாசகமொன்றாகும்.

ஆனால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் படி 'இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடனேயே' ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகர் தமது ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலங்கைக்கு வழங்க முடியும். இந்த 'இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடனேயே' என்ற மூன்று சொற்கள் மூலம் இலங்கையின் இறைமை பாதுகாக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவே திரைமறைவில் செயற்பட்டதாக கூறப்படுகிறது. 

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகர் மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வின்போது அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என முன்னைய பிரேரணையில் இருந்தது. நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் படி அந்த அறிக்கை மனித உரிமை பேரவையின் 22ஆவது அமர்வின் போதே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.     

இறுதியில் சர்வதேச விசாரணையையும் தவிர்த்துக் கொண்டு உள்நாட்டு விசாரணைகளின் போது ஏற்படவிருந்த கட்டாய வெளிநாட்டு தலையீட்டடையும் தவிர்த்துக் கொள்ள இலங்கையால் முடிந்து விட்டது. இது இலங்கை பெற்ற பாரிய வெற்றியே. ஆனால் நம்பிக்கைப் பற்றிய பிரச்சினை தொடர்ந்தும் ஏற்பட்டால் பாரிய பிரச்சினை ஏற்படுவதற்குள்ள வாய்பபுகளும் அதிகமாக இருக்கின்றன. 

அவ்வகையில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றாலும் நல்லிணக்கம் என்ற விடயத்தில் இலங்கை அரசாங்கம் மட்டுமல்லாது, இலங்கை மக்களும் தோழ்வியையே அடைந்துள்ளனர். ஏனெனில் இந்தப் பிரேரணையைப் பற்றிய சர்ச்சையால் நாட்டுக்குள் விரிசல்கள் மேலும் அதிகரித்து விட்டன.         

No comments:

Post a Comment